November 22, 2024

வெடி விபத்தில் சிதைந்த பெய்ரூட்டில் உடனடியாக களமிறங்கும் பிரான்ஸ் படை!

வெடி விபத்தில் சிதைந்த பெய்ரூட்டில் உடனடியாக களமிறங்கும் பிரான்ஸ் படை!

கொரோனாவுக்கு மத்தியிலும் பயங்கர வெடி விபத்தில் சிக்கி சிதைந்த லெபனான் தலைநகர் பெய்ரூட்க்கு பிரான்ஸ் உடனடியாக உதவ கரம் நீட்டி தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது.

மத்திய கிழக்கு நாடான லெபனான் தலைநகர் பெய்ரூட் உள்ள துறைமுகத்தில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்து சுற்றுப்புறங்களிலும் பேரழிவை ஏற்படத்தியது, இதில் 100க்கும் மேற்பட்டவர்கள் பலியாகினர் மற்றும் ஆயிரக்கணக்கானவர்கள் காயமடைந்தனர்.

இந்த வெடிவிபத்தால் 3-5 பில்லியன் டொலர் பொருட்ச் சேதம் ஏற்பட்டுள்ளதாக பெய்ரூட் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, பெய்ரூட் துறைமுகத்தில் நடந்த பயங்கர வெடி விபத்தில் காயமடைந்த 500 பேருக்கு சிகிச்சையளிக்க 15 டன் சுகாதார உபகரணங்கள் மற்றும் நடமாடும் மருத்துவமனை ஆகியவற்றுடன் லெபனானுக்கு பிரான்ஸ் இரண்டு இராணுவ விமானங்களை அனுப்பும் என்று ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்தார்.

55 உள்ளூர் பாதுகாப்புப் படையினருடன் இராண்டு விமானங்கள் பாரிஸுக்கு புறநகரில் உள்ள சார்லஸ் டி கோலே விமான நிலையத்திலிருந்து மதியம் புறப்பட்டு பிற்பகல் பெய்ரூட்டிற்கு வந்து சேரும்.

லெபனான் தலைநகரில் உள்ள மருத்துவமனைகளை வலுப்படுத்த 10-க்கும் மேற்பட்ட அவசரகால பணியாளர்கள் விரைவில் பெய்ரூட்டுக்கு அனுப்பப்படுவார்கள் என்று ஜனாதிபதி கூறினார்.

லெபனான் மக்களுக்கு பிரான்சின் ஆதரவை வெளிப்படுத்தவும், பிரான்ஸ் உதவியை அனுப்பி வைப்பதாக உறுதியளிக்கவும் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் செவ்வாயன்று லெபனான் ஜனாதிபதி மைக்கேல் அவுனை போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

பெய்ரூட்டுக்கு பணியில் அமர்த்தப்பட்ட 55 பிரான்ஸ் மீட்புப் படையினர் பேரழிவுக்கு பிந்தைய இடிபாடுகளை அகற்றுதல் மற்றும் மீட்பதில் நிபுணர்கள் என பிரான்ஸ் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லமான எலிசி அரண்மனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பெய்ரூட்டில் கூடுதல் தேவைகளை அடையாளம் காண பிரான்ஸ் செயல்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெய்ரூட் துரைமுகத்தில் உள்ள கிடங்கில் பாதுகாப்பற்ற நிலையில் 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட் எரியூட்டப்பட்டதால் இந்த குண்டு வெடிப்பு ஏற்பட்டது.