Dezember 3, 2024

கொரோனாவை விரைவாக கட்டுக்குள் கொண்டுவந்த இவர்தான் அடுத்த தலைவராக வேண்டும்: ஜேர்மன்

பவேரியாவின் பிரதமரான மார்க்கஸ் சோடர், ஜேர்மனி கொரோனாவால் பாதிக்கப்பட்டபோது, ஒரு தலைவனாக, முன்னின்று கொரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டுவர பாடுபட்டார்.

இப்போது, அவரே ஏன் நமது அடுத்த சேன்ஸலராக ஆகக்கூடாது என்ற கேள்வி மெல்ல ஜேர்மானியர்கள் மனங்களில் எழத்துவங்கியுள்ளது.

அடுத்த ஆண்டுடன் தற்போதைய ஜேர்மன் சேன்ஸலரான ஏஞ்சலா மெர்க்கல்லின் பதவிக்காலம் முடிவடைகிறது.

இந்த நேரத்தில் அரசியல்வாதிகளும் சரி, வாக்காளர்களும் சரி, அவரது இடத்தை நிரப்பப்போவது யார் என்பதைக் குறித்து எண்ணத்துவங்கிவிட்டார்கள்.எல்லோர் மனதிலும் இப்போது ஒரு பெயர் பளிச்சிடுகிறது… அது மார்க்கஸ் சோடர்!

ஆம், பவேரியாவின் பிரதமரான மார்க்கஸ் சோடர் (53), கொரோனா பரவலின்போது விரைவாக எடுத்த நடவடிக்கைகளும், கொரோனாவால் ஏற்பட்ட சிக்கல்களை அணுகிய முறையும் மக்களை வெகுவாக இம்ப்ரஸ் செய்துவிட்டன.

ஆகவே, ஏஞ்சலாவுக்குப்பின், அவரது இடத்திற்கு பொருத்தமான நபர் மார்க்கஸ்தான் என பலரும் எண்ணத்துவங்கிவிட்டார்கள்.

ஆனால், மார்க்கஸ் Christian Social Union (CSU) கட்சியின் தலைவர். ஆளும் கட்சியின் தலைவரல்ல அவர்.

இருந்தாலும், சமீபத்திய வாக்கெடுப்பு ஒன்று, 64 சதவிகிதம் மக்கள், CDU/CSU கட்சிகளின் ஆதரவாளர்களில் 78 சதவிகிதம்பேர், சேன்ஸ்லராவதற்கான தகுதி மார்க்கஸுக்கு இருப்பதாக கருதுவதாக தெரிவித்துள்ளது.

இதுவரை, மார்க்கஸ் பவேரியாவின் தலைவராக இருப்பதே தனக்கு போதும் என்று கூறிக்கொண்டிருக்கிறார்.

என்றாலும் ஊடகங்களும் வாக்காளர்களும் விடுவதாக இல்லை. இது போதாதென்று, சூசகமாக பிரபல பத்திரிகையான Spiegel, மார்க்கஸ் படத்தை தனது அட்டைப்படமாக போட்டு வைத்திருக்கிறது.

என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.