கிரிக்கெட் வீரர்கள் 10ப் பேருக்கு கொரொனா உறுதி! ரசிகர்கள் கவலை;
பாகிஸ்தான் நாட்டு கிரிக்கெட் வீரர்கள் பத்து பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளதுகொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதன் காரணமாக உலக நாடுகள் பலவும் முடங்கிப் போயுள்ளன. பாகிஸ்தான் நாட்டிலும் கொரோனா வைரஸ் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை பாகிஸ்தானில் 1,88,926 பேர் கொரோனாவின் தாக்கத்துக்கு ஆளாகியிருக்கும் நிலையில், அங்கு மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,755 ஆக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் அச்சத்தில் இருக்கின்றனர். இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில், பத்து வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
ஏற்கனவே, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வீரர்கள் ஹைதர் அலி, ஹரீஷ் ராஃப் மற்றும் ஷாதப் கான் ஆகிய மூன்று பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஜூன் 22ஆம் தேதி அறிவித்தது. இப்போது இவர்களைத் தவிர மேலும் ஏழு வீரர்களுக்கு தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இம்ரான் கான், காசிஃப் பாத்தி, ஃபகர் ஸமான், வஹாப் ரியாஸ், முஹம்மது ஹஃபீஸ், முஹம்மது ஹஸ்னைன், முஹம்மது ரிஸ்வான் ஆகிய ஏழு வீரர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று (ஜூன் 24) பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வீரர்கள் இங்கிலாந்து நாட்டுக்கு சுற்றுப்பயணம் செல்ல இருந்த நிலையில் அதற்கு முன்னதாக நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் இந்த முடிவுகள் வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.