மக்களிடம் போய் மக்களுக்காக சேவை செய்வதற்கு நாங்கள் பணம் கேட்பதில் என்ன தவறு..? ஜனாதிபதிக்கு விக்னேஸ்வரன் பதிலடி!
மக்களிடம் போய் மக்களுக்காக சேவை செய்வதற்கு நாங்கள் பணம் கேட்பதில் என்ன தவறு இருக்கின்றது என முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
யாழ்ப்பாண ஊடக அமையத்தில் இன்றையதினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
இங்கு அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
பொதுமக்களுக்கு சேவை செய்வதற்காக அமைச்சுக்களுக்கு கிடைக்கும் பணத்தினை எங்களது சொந்த தேவைக்கு பயன்படுத்தும் பழக்கம் எமக்கு இல்லை.
அவ்வாறான வழக்கம் ஜனாதிபதி கோட்டாபய தரப்புக்கு இருக்கலாம். அவர்கள் மக்களுக்கான பணத்தினை தங்களது சொந்த தேவைக்கு பயன்படுத்தலாம்.
பின்வாசல் வழியாக வந்து பணம் தருபவர்களிடம் இருந்து நாங்கள் பணத்தைப் பெற்று அவர்களது சொல்லுக்கு கட்டுப்படாமல் பொதுமக்களிடம் இருந்து சிறிய தொகை அல்லது பெரிய தொகை எதுவென்றாலும் அனுப்புங்கள். நாங்கள் கணக்காளரிடம் தெரிவித்து ரசீது அனுப்புகின்றோம் என கேட்டே நாங்கள் பணத்தைப் பெறுகின்றோம்.
மக்களிடம் இருந்து நாங்கள் பணத்தைப் பெறும் போது மக்களுக்கு நாங்கள் சேவை செய்ய வேண்டும் என்ற ஒரு தார்மீகக் கடப்பாடு எங்களுக்கு இருக்கின்றது.
மக்களுக்காக சேவை செய்ய நாங்கள் நடவடிக்கை எடுக்கும்போது மக்களிடம் இருந்து பணம் பெறுவதில் எவ்வித பிழையும் இல்லை என்பது என்னுடைய கருத்து என குறிப்பிட்டுள்ளார்.