ஜனாதிபதி செயலணி இனவழிப்பின் புதிய பரிணாமம்: போராட்டத்திற்கு அழைப்பு
கிழக்கு மாகாண தொல்லியல் மரபுரிமைகளை பாதுகாக்கும் ஜனாதிபதி செயலணி கட்டமைக்கப்பட்ட இனவழிப்பின் புதிய பரிணாமம் என்று தெரிவித்து தமிழர் மரபுரிமை பேரவை தனது கடுமையான கண்டனங்களையும் வெளியிட்டுள்ளது.தமிழ், முஸ்லிம் உறவை பலமாக மீளக்கட்டியெழுப்புவதன் மூலம் தான் சிங்கள பௌத்த ஏகாதிபத்திய தேசியவாதத்திற்கெதிரான எதிர்ப்பை வடக்கு-கிழக்கில் காட்ட முடியுமெனக் குறிப்பிட்டுள்ள பேரவை, வரலாற்றுத்தவறுகளுக்கு இடமளிக்காது ஒன்றிணைந்த போராட்டத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளது.
இவ்விடயம் தொடர்பில் பேரவை விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ கிழக்கில் தொல்லியல் மரபுரிமையை பாதுகாப்பதற்காக 11 பேர் கொண்ட செயலணியை நியமித்துள்ளார்.
இலங்கையின் இச்செயலணி பல்லினத்தன்மையை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. சிங்கள அரசின் சிங்கள- பௌத்தமயமாக்கல் (வடக்கு-கிழக்கை) அரசியல் நிகழ்ச்சி நிரலின் நீட்சியாகவே நோக்க வேண்டியுள்ளது.
தமிழர்களின் பாரம்பரிய தாயக பூமியான வடக்கு-கிழக்கை துண்டாடி, தமிழ்த்தேச தாயக கோட்பாட்டை சிதைக்கும் அரசியல் செயற்பாடுகளை ஏற்னவே சிங்கள அரசு காலம் காலமாக வெவ்வேறு உத்திகளைப் பயன்படுத்தி தமிழர் நிலத்தை அபகரித்து வருகின்றது. தமிழர் நிலத்தை அபகரிப்பதோடல்லாமல் தமிழர் மரபுரிமைகளை அழித்து திரிவுபடுத்தி சிங்கள-பௌத்த வரலாற்றியலையும் பூர்வீகத்தையும் வலுப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவது எமக்குத் தெரியாததல்ல.
கடந்த வருடம் பதவியேற்ற புதிய அரசு சிங்கள-பௌத்த அடையாளத்தை இலங்கையின் அடையாளமாக ஊக்குவிப்பதில் தீவிர அடிப்படைவாதத்தை அகவயப்படுத்தி பெரும்பான்மை ஜனநாயகப் பொறிமுறையைக் கருவியாக பயன்படுத்தி வருகின்றது. ஈழத்தமிழர்களின் தாயகக் கோட்பாட்டை தேச நீக்கம் செய்வதில் தொல்லியல் திணைக்களத்தினதும் வன பரிபாலன திணைக்களத்தினதும் பங்களிப்பு முகக்கியமாக இருக்கினறது.
இச்செயலணியில் தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகள் உள்வாங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை அச்செயலணியின் விடய நோக்கத்தை மாற்றாது என்பதோடு தமிழ், முஸ்லிம் நியமனங்கள் பெரும்பான்மை சனநாயகத்தை வலுப்படுத்தும் செயற்பாடாக அமைந்துவிடும் என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். தமிழ், முஸ்லிம் ஓரிரு பிரதிநிதித்துவங்கள் பெரும்பான்மை சனநாயகத்தின் அடிப்டையை ஒரு போதும் மாற்றப்போவதில்லை.
இச்செயலணியின் உறுப்பினர்களில் ஒருவரான பனமூரே திலகவன்சதேரர் வடக்கு-கிழக்கின் பிரதான பௌத்த தேரராக உள்ளார். கிழக்கு மாகாணத்தை சிங்கள-பௌத்த மயமாக்குவதில் அவருடைய பங்கு முக்கியமானது. திருகோணமலையில் புல்மோட்டை தொடங்கி அம்பாறை பொத்துவில் வரை பௌத்த விகாரைகள் அமைப்பதோடு சிங்கள குடியேற்றங்களை நிறுவுவதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டவர்.
இச்செயலணியின் தலைவராக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் நியமிக்கப்பட்டிருப்பது இராணுவ மயமாக்கம் அரச நிறுவனத்தின் அலகுகளில் ஆழ ஊடுருவியிருப்பதற்கான ஓர் உதாரணம் மட்டுமே.
இவ்வாறிருக்க, தமிழ், முஸ்லிம் உறவைப் பிரிப்பதற்கு சிங்கள அரசுகள் பல்வேறு தந்திரோபாயங்களை கையாண்டன, வடக்கு-கிழக்கு தமிழ், முஸ்லிம் பரஸ்பர உறவு இரு இனத்தின் இருப்புக்கும் அத்தியாவசியமானது. தமிழ்த் தேசியம் முஸ்லிம்களை புறந்தள்ளி கட்டமைக்கப்படவில்லை என்பது வெள்ளிடைமலை.
வடக்கு-கிழக்கை சிங்கள மயமாக்குவது முஸ்லிம்களின் இருப்பையும் கேள்விக்குள்ளாக்கும். தமிழ், முஸ்லிம் உறவை பலமாக மீளக்கட்டியெழுப்புவதன் மூலம்தான் சிங்களபௌத்த ஏகாதிபத்திய தேசியவாதத்திற்கெதிரான எதிர்ப்பை வடக்கு-கிழக்கில் காட்ட முடியும்.
இதுதொடர்பில் முஸ்லிம்களை தமிழர்களிடமிருந்து அந்நியப்படுத்தும் அரச நிகழ்ச்சி நிரலுக்குள் முஸ்லிம் மக்கள் உள்வாங்கப்பட்டுவிடக்கூடாது என்பது எமது கோரிக்கையாகும். இன்னொரு தந்தோராபாயத்தை சிங்கள அரசு ஈழத்தமிழர் மீதும் முஸ்லிம்கள் மீதும் கட்டவிழ்த்திருக்கின்ற நிலையில், வரலாற்றுத் தவறுகளுக்கு மீண்டும் இடமளிக்காது இதற்கு எதிராக கூட்டாக ஒன்றிணைந்து போராட அழைப்பு விடுகின்றோம்..