November 21, 2024

இறைமை பறிக்கப்பட்ட ஈழத்தமிழினம் சிறுபான்மை ஆக்கப்பட்ட வரலாறு – சுபி.சாந்தன்

இலங்கைத்தீவிலே எல்லைகளால் வரையறுக்கப்பட்ட ஒரு பகுதியின் இறைமைமிக்க ஆட்சியாள
ர்களாகவும் குடிமக்களாகவும் நிமிர்ந்த வாழ்வினை வாழ்ந்துவந்த தமிழினம், சிறுபான்மை இனம்ஆக்கப்பட்ட வரலாறு வஞ்சகம் நிறைந்தது. இன்று அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டு, இருப்பு கேள்விக்குறியாக்கப்பட்ட நிலையில் எதிர்காலம் மட்டுமன்றி, நிகழ்காலமும் இருட்டுக்குள் தள்ளப்பட்டுள்ள ஈழத்தமிழினத்தின் தற்கால அவலநிலைக்கான காரணங்களை, எமது வரலாற்றுக்குள்ளிருந்தே எம்மால் தேடி அறியமுடியும். இலங்கைத்தீவானது 1505ஆம் ஆண்டிலிருந்து ஐரோப்பிய காலனித்துவ ஆட்சியாளர்களின் கால்படத்தொடங்கியபோதிலும், சிங்களவர்களின் கோட்டை இராச்சியம் 1597 இல் போர்த்துக்கேயரிடம் வீழ்ச்சியுற்ற நிலையிலும், தமிழர் தாயகப்பகுதியை உள்ளடக்கிய யாழ்ப்பாண இராச்சியத்தினால் 1619 வரை தனியோர் இனமாக அந்நிய ஆதிக்கத்தை எதிர்த்துநிற்க முடிந்துள்ளது. யாழ்ப்பாண அரசின் இறுதி மன்னனான சங்கிலியன் போர்த்துக்கேயரால் தோற்கடிக்கப்பட்ட பின்னும்கூட, அதுவரை குறுநில மன்னர்களாக யாழ்ப்பாணத்தமிழ் அரசின் மேலாண்மையை ஏற்றுவந்த வன்னிமன்னர்கள், அந்நிய ஆதிக்கத்துக்கு அடிபணியாமல் தொடர்ந்தும் வன்னிப்பெருநிலப்பரப்பில் 1803 வரை சுமார் இருநூறு ஆண்டுகளாகச் சுதந்திர ஆட்சி புரிந்துவந்துள்ளனர்.
இப்படியிருந்தபோது இலங்கைத்தீவிலே தொடர்ச்சியாக நகர்ந்துவந்த வரலாற்றுப்போக்கிலே தமிழினத்தின் இருப்பை ஒரேயடியாகப் புரட்டிப்போடும்வகையில் அங்கு ஆங்கிலேய ஆட்சி கொண்டுவந்த மாற்றங்கள் பற்றி நாம் இங்கே பார்ப்பது அவசியம். ஏனெனில் போர்த்துக்கல், நெதர்லாந்து (ஒல்லாந்து) ஆட்சிக்காலங்களைப் போலன்றி, உலகின் மிகமோசமான இனப்படுகொலைக்கு ஈழத்தமிழினம் முகங்கொடுக்கவேண்டிய ஒரு புறச்சூழலுக்கான தளத்தை ஆங்கிலேயரின் ஆட்சியே சிங்களப்பேரினவாதத்துக் வழியமைத்துக் கொடுத்தது. அந்தவகையிலே முக்கியத்துவம்பெறும் வரலாற்றுக்கட்டங்களை நாம் அலசிப்பார்ப்பதனூடாகவே நிகழ்கால வலிகளுக்கான காரணங்களைச் சரிவர விளங்கிக்கொள்ளமுடியும்.
18ஆம் நூற்றாண்டிலே ஐரோப்பாக்கண்டத்திலே நெப்போலியனின் பெரும்படையிடமிருந்து தமது சொந்தநாட்டைக் காப்பதற்கு பிரித்தானியா  திண்டாடிக்கொண்டிருந்தது. அமெரிக்க தேசமும் பிரித்தானிய மேலாண்மைக்கெதிரான தன்னுடைய சுதந்திரப்போரைத் தொடர்ச்சியாக முன்னெடுத்து தனிநாட்டை நிறுவியதை அடுத்து, ஆங்கிலேயர்களுக்கு தென்னாசியாவிலுள்ள இலங்கையைக் கைப்பற்றவேண்டிய கட்டாயம் அப்போது ஏற்பட்டிருந்தது. ஆனால், இதற்காக நெதர்லாந்துடன் போரில் ஈடுபடக்கூடிய ஆளணியோ மற்றும் பொருள்வளமோ ஐரோப்பாவில் இருந்த நெருக்கடியான நிலைமை காரணமாக அவர்களிடம் காணப்படவில்லை. இந்தியாவின் பெரும்பகுதிகளில்கூட அக்காலத்தில் ஆங்கிலேயத்தைவிட பிரெஞ்சு ஆதிக்கமே மேலோங்கிக் காணப்பட்டது. இப்படியிருக்க ஐரோப்பாவிலும் நெதர்லாந்தை நெப்போலியனின் பிரெஞ்சுப்படைகள் கைப்பற்றிவிட்ட சூழலில், பிரித்தானியாவின் பாதுகாப்பு பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளானது. அதுமட்டுமன்றி 1770 இல் பிரித்தானிய ஆட்சியதிகாரத்திற்குள் இணைக்கப்பட்ட அவுஸ்திரேலியாவைத் தொடர்ந்து தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதும், தூரகிழக்காசியாப் பகுதிகளின்மீதான அதிகாரப்பிடியும்கூட கேள்விக்குறியாகியிருந்தன.
இந்த நிலையில்தான் இந்தியாவை இழக்கநேரிடினும்  இந்துசமுத்திரத்திலே தமது கடலாதிக்கத்தை இழந்துவிடக்கூடாதென்ற நோக்கத்தில் இலங்கைத்தீவைக் கைப்பற்றுவதற்கு ஆங்கிலேயர் திட்டமிட்டனர். அத்தோடு பிரெஞ்சுப்படைகளிடமிருந்து 1795 இல் தப்பியோடிய நெதர்லாந்து அரசன் Prince William V இங்கிலாந்தில் சரணடைந்த சூழலில், Dutch East India Company இன் ஆளுகைக்குட்பட்ட வர்த்தகவலயங்களை பிரான்சிடம் செல்லவிடாமல் தம்வசப்படுத்தவும் ஆங்கிலேயர் அவாவினர். இவை எல்லாவற்றுக்கும் திறவுகோலாக இலங்கையைத் தமது ஆக்கிரமிப்புக்குள் கொண்டுவருவதற்காக இங்கிலாந்து கபடமான ஒரு திட்டத்தைத் தீட்டியது.

18ஆம் நூற்றாண்டிலே வன்னியரசு மற்றும் கண்டியரசின் ஆளுகை தவிர்ந்த இலங்கைத்தீவின்  ஏனைய பகுதிகளை ஆண்டுவந்த நெதர்லாந்தின் Dutch East India Company தனது படைத்தேவைகளுக்காக ஒப்பந்த அடிப்படையில் வேறு ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் கூலிப்படைகளை அமர்த்தியிருந்தது.  இவ்வாறு படைவீரர்களை ஒப்பந்த அடிப்படையில் வழங்குவது அன்று பரவலான வணிகமாகவும் மேற்கொள்ளப்பட்டுவந்தது. அந்தவகையிலே சுவிஸ்நாட்டைச் சேர்ந்த Graf Charles de Meuron என்ற நிலப்பிரபு ஒருவரின் படைவீரர்கள் இலங்கையில் இருந்த நெதர்லாந்துப்படையில் இணைக்கப்பட்டிருந்தார்கள்.

இங்கிலாந்து தனது திட்டத்தின்படி ஸ்கொட்லாந்தைச் சேர்ந்த 34 வயதான Hugh Cleghorn என்ற பேராசிரியரை இதற்காகத் தெரிவுசெய்தது. சுவிஸ் நாட்டிற்குச் சென்ற கிளெக்கோர்ண் இலங்கையிலிருந்த நெதர்லாந்துப்படைகளுக்குக் கூலிப்படையை வழங்கியிருந்த  சார்ள்ஸ் டி மொறோனிடம்   பணத்திற்காக அவரைப் பக்கம் மாறும்படி  பேரம் பேசினார். அது பிடித்துப்போன டி மொறோனும் கிளெக்கோர்ண் வழங்கிய ஐயாயிரம் பவுண்டுகளைப் பெற்றுக்கொண்டு நெதர்லாந்துக்கான தனது ஆதரவை மீளப்பெறுவதற்கு உடன்பட்டார். அந்த ஒப்பந்தத்தின்படி தனக்காக இலங்கையிலே படைத்தளபதியாகச் செயற்பட்ட தனது சகோதரனாகிய Pierre-Frederic de Meuron இற்கு இரகசியமாகத் தகவலை அனுப்பி, உடனடியாக நெதர்லாந்துக்கான ஆதரவு விலக்கிக்கொள்ளப்பட்டது. தமது படையின் மூன்றிலொரு பங்கை நிரப்பிய டி மொறோனின்; படைகளால் கைவிடப்பட்ட ஒல்லாந்தர் நிலைமையைச் சுதாகரித்துக்கொள்வதற்குள், ஆங்கிலேயப்படைகள் இலங்கைக்குள் நுழைந்தன. அதுவரைகாலமும் தாங்கள் அணிந்துவந்த நீலச்சீருடையைக் கழற்றிவிட்டு, ஆங்கிலேயப்படைகளுக்குரிய சிவப்புநிறச்சீருடைக்கு மாறியிருந்த டி மொறோனின் படைகள் கொடுத்த அதிர்ச்சி நெதர்லாந்துப்படைகளைத் திண்டாடச்செய்தது. இவ்வாறாக வெறுமனே 5000 பவுண்டு செலவிலே இலங்கையை இங்கிலாந்து தனது ஆக்கிரமிப்புக்குள் கொண்டுவந்ததுடன், அடுத்த இரண்டு வருடங்களுக்கு டி மொறொனை இலங்கைக்கான தமது கவர்னராகவும் அமர்த்தியது. இவ்வாறாக தனது நாட்டின் வணிக, அரசியல், பாதுகாப்பு, இலாபநோக்கங்களுக்காக 1796ஆம் ஆண்டு சூழ்ச்சிகளினூடாக இலங்கையை இங்கிலாந்து கைவசப்படுத்தியமை, ஈழத்தமிழினத்தின் எதிர்காலத்தில் சொல்லொணா அவலங்களுக்குக் காரணமாக இருக்கப்போகிறது என்பதை அன்று யார்தான் எண்ணிப்பார்த்திருப்பர் ! இனியாவது இதை நாம் உணரத்தலைப்படுவோமா ?

மிகவும் சாதுரியமாக ஏற்கெனவே இலங்கையைப் பற்றி அறிந்து அனுபவப்பட்டிருந்த டி மொறொனைத் தமது கவர்னராக வைத்திருந்த இங்கிலாந்து, இரண்டு வருட கால அவகாசத்தில் இலங்கைத்தீவைப்பற்றிப் போதியளவு அறிந்துகொண்ட பின் 1798 இல் தமது நாட்டைச்சேர்ந்த Frederic North ஐத் தமது முதலாவது ஆங்கிலேய ஆளுநராக ஆட்சிப்பொறுப்பில் நியமித்தனர். இங்கிலாந்தின் 7ஆவது பிரதம மந்திரியாக இருந்த ஜோர்ஜ் இன் மகனாகிய இவர் தனது 32ஆவது வயதிலேயே வருடத்திற்கு பத்தாயிரம் பவுண்டுகள் கொடுப்பனவு பெறும் ஆளுநராக இலங்கையில் பதவியில் அமர்த்தப்பட்டார். அதாவது டி மொறோனின் முழுப்படைகளையும் தம் பக்கம் மாற்றுவதற்குக் கொடுத்ததைவிட இரண்டு மடங்கை கவர்னர் தனது வருட சம்பளமாகப் பெற்றார். அத்தோடு கண்டி தொடர்பிலான இரகசிய செயற்பாடுகளை அதுவரை முன்னெடுத்துவந்த றொபேட் அன்ட்ரூஸ்  (Robert

Andrews) கண்டிக்கான தூதுவராக நியமிக்கப்பட்டார்.

இருந்தும் சட்டத்தையும் நிர்வாகத்தையும் கவனிக்கவேண்டிய நோர்த், வியாபாரத்தைக் கவனித்துவந்த  British East India Company இன் தனக்கு நிகரான அதிகாரச்செல்வாக்கைக் கண்டு சீற்றமடைந்தவராக, லண்டனில் தனது தந்தையின் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி இந்த இரட்டைத்தலை  அதிகாரப்பீடத்தை முடிவுக்குக் கொண்டுவந்தார். இதன் மூலம் தனிக்காட்டுராஜாவாகிய அவர், மன்னாரில் அரிப்பு பகுதியில் தனது உத்தியோகபூர்வ இருப்பிடமாக Doric Bungalow ஐ அமைத்து, அங்கிருந்துகொண்டு மன்னார்க்கடலிலே முத்துக்குளிப்பை நேரடியாக மேற்பார்வை செய்தார். முத்து ஏற்றுமதியினூடாக பிரித்தானியக் கிழக்கிந்தியக்கம்பனி இரண்டு வருடங்களில் மட்டும் 265 000 பவுண்டுகளை வருமானமாக ஈட்டியிருந்தது.

இவ்விடத்திலே இலங்கைத்தீவைத் தமதாக ஆக்கிக்கொள்வதில் பிரித்தானியா காட்டிய அதீத முக்கியத்துவத்தை, 1802 இல் பிரான்சுடன் மேற்கொண்ட Treaty of Amiens ஏமியன்ஸ் உடன்படிக்கையில் தனக்கென மிச்சமாக வைத்திருக்கவேண்டிய இரண்டு நாடுகளாக இலங்கையையும் றினிடாட் இனையும் முன்னிறுத்திப் பெற்றுக்கொண்டமையிலிருந்து பொருளாதாரரீதியான மட்டுமன்றி, அதன்  கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இராணுவ நோக்கங்களையும் புரிந்துகொள்ளலாம்.
இலங்கைத்தீவின் பூர்வீகக்குடிகளின் விருப்புவெறுப்புகளைப் பற்றிக கிஞ்சித்தும் கவனத்திற்கொள்ளாமல், அம்மக்களுடைய பாரம்பரிய வாழ்நிலத்தின் தலைவிதியை அந்நியர்கள் தாங்களே தீர்மானித்துக்கொண்ட இக்காலப்பகுதியில்  வன்னியின் பெரும்பகுதியில்  பண்டாரவன்னியனின் சுதந்திர ஆட்சி நிலவியதையும் (ஒக்ரோபர் 1803வரை) இணைத்துப்பார்க்க வேண்டும்.

சில வருடங்களின் பின் ஐரோப்பாவில் வோற்றர்லூ போர்க்களத்திலே 1815ஆம் ஆண்டு நெப்போலியன் தோற்கடிக்கப்பட்டதைத்தொடர்ந்து, 1815 இல் ஆளுநர் ஆகிய Sir Robert Brownrigg இற்கு மேலதிக படையுதவி வழங்கப்பட்டன. அதைக்கொண்டு அதுவரை முழுமையாகத் தமது ஆதிக்கத்துக்குள் வராத கண்டியரசுமீது போர் தொடுக்கப்பட்டது. சுமார் பத்தாயிரம் வரையான இலங்கையர்கள் கொல்லப்பட்ட அந்தப் போரிலே, பொதுமக்களின் வாழ்வாதாரத்திற்கு அவசியமாகவிருந்த உணவுதானியங்களும் குறிவைத்து அழிக்கப்பட்டதாக வரலாற்றுப்பதிவுகள் கூறுகின்றன.

1824 இல் ஆளுநர் பதவிக்கு நியமிக்கப்பட்ட Sir Edward

Barnes நெப்போலியனுக்கு எதிரான வோற்றர்லூ போர்க்களத்திலே வெற்றி ஈட்டியதற்காகப் பதக்கங்களைப் பெற்றவர். மற்றவர்களைப் பற்றி பெரிதாக எதுவுமே அலட்டிக்கொள்ளாமல் தனக்குப் பிடித்த போக்கில் செயற்படும் இவர் அளவுக்குமீறி மதுபானம் அருந்துவதில் பிரியராக இருந்ததாக பதிவுகள் தெரிவிக்கின்றன. உள்;ர் உற்பத்திப்பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு ஏதுவாக நாட்டின் பகுதிகளை ஓன்றுடனொன்று இணைக்கும் சிறப்பான வீதிப்போக்குவரத்தை இவர் ஏற்படுத்தினார். இதற்காக இலங்கைக்குடிமக்களின் ஊதியமற்ற கட்டாய உழைப்பு நிர்ப்பந்திக்கப்பட்டுப் பெறப்பட்டது. மேலும், ஏற்றுமதிக்காகத் தனது முதலாவது கோப்பித்தொழிற்சாலையையும் ஆரம்பித்தார். இதுதவிர அக்காலத்தில் இலங்கையின் முதன்மை ஏற்றுமதிப்பொருளாக விளங்கிய கறுவாப்பட்டையின் மூலம் மட்டும் வருடாந்தம் 350 000 பவுண்டுகளை இங்கிலாந்து ஈட்டியது. இப்படியான நிலையில் சட்டம், நீதி, நிர்வாகம் என அனைத்துமே ஆளுநரை மையப்படுத்தியதாகவே காணப்பட்டது. ஒரு பேரரரசனோ அல்லது நாட்டின் ஜனாதிபதியோ கொண்டிருக்கக்கூடிய அதிகாரத்தையும் மிஞ்சியதாக இது இருந்தது, என்று இது குறித்து JR Weinman என்ற வரலாற்று நூலாசிரியர் குறிப்பிடுகின்றார். இதற்கேற்பவே போர்ணஸ் தனக்குப் பிடித்த இலங்கையின் மூலைகள் எங்கும் ஆடம்பரமான மாளிகைகளை அமைப்பித்தார்.  எனினும் அப்போதிருந்த ஆளுநரின் ஆடம்பரப்போக்கிளால் தமது இலாபத்தில் துண்டுவிழுந்ததைக் கண்ட பிரித்தானியா, இலங்கையிலிருந்து கிடைக்கும் வருவாயை அதிகம் மிச்சப்படுத்திக்கொள்வதற்காகச்  செலவுகளை மட்டுப்படுத்தும் நோக்கில் இலங்கைத்தீவிற்கான தமது அதிகாரக்கட்டமைப்பை மறுசீரமைப்பு செய்ய விழைந்தது.

இதற்காக நியமிக்கப்பட்ட கோல்புறுக்-ஆணைக்குழு  (Colebrooke-commission) ஆளுநருக்கு அதுவரை இருந்துவந்த அதிகாரங்களைக் குறைத்து  பிரத்தியேகமான நீதி, நிர்வாக அலகுகளைக் கொண்டுவந்துடன், அதுவரை காலமும் ஆங்கிலேயர்களால் நிரப்பப்பட்ட உள்;ர் நிர்வாகப்பணிகளில் சுதேசிய  மக்களையும் வேலைக்கமர்த்த வழிசெய்தது. இதன் மூலம் பிரித்தானிய அரசின் நிர்வாகச்செலவு பெரிதளவில் மீதப்படுத்தப்பட்டதுடன், அதிகாரக்கட்டமைப்பிற்கு விசுவாசமான உள்;ர்வர்க்கமும் தோற்றம்பெற்றது. இதற்கமைவாக பிரித்தானிய வழியலமைந்த கல்வித்திட்டமும் நாடளாவியரீதியாக நடைமுறைப்படுத்தப்பட்டது. இவற்றுக்கெல்லாம் மேலாக போர்த்துக்கேயரும், ஒல்லாந்தரும் 300 வருடங்களாக மதித்துவந்த தனித்துவமான தமிழ், சிங்கள இன அடையாளங்களைப் புறம்தள்ளி, தமிழ் மற்றும் சிங்கள மக்களின் ஓப்புதலைப் பெறாமல் தமது நலன்களுக்காக முழு இலங்கைத்தீவையும் ஒற்றை நிர்வாக ஆட்சிக்குரிய அலகாக்கியது.

இன்றைய உலகிலே நவீன வரலாறானது பெரியளவிலான வேறுபாடுகள் இல்லாமலேயே  ஓரினத்திற்கு பல நாடுகளைப் பெற்றுக்கொடுத்துள்ளது. ஆனால், கடந்த எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக மிகமோசமான இனவழிப்புக்கு முகங்கொடுத்துவரும் ஈழத்தமிழினத்தின் இன்றைய அவலநிலைக்கு 1833இல் தான் விட்ட தவறுதான் காரணம் என்பதை உணரவோ, அதை 1948இல் சீர்செய்யவோ முயற்சிக்காத பிரித்தானிய அதிகாரபீடம், சிங்களத்தின் தமிழர்மீதான ஒடுக்குமுறைக்குத் தொடர்ந்தும் ஒத்துழைத்துவருவது, மனிதத்தையும் ஜனநாயகத்தையும் மதிக்கும் அனைத்துமக்களையும் கேள்விகேட்க வைக்கின்றது. 16ஆம் நூற்றாண்டிலிருந்து கடல்கடந்த வணிகத்தில் ஈடுபடுவதற்காக இங்கிலாந்தில் தோற்றுவிக்கப்பட்ட பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியினால் கையகப்படுத்தப்பட்ட தமிழர் தாயகமானது, பிரித்தானிய ஆளுநர்களின் தனிப்பட்ட எதேச்சாதிகார போக்குகள் காரணமாக, அதிக இலாபம் பெறும்நோக்கில் 1833 இல் சிங்களத்தேசத்துடன் வலிந்து இணைக்கப்பட்ட பின்னணியை வலிசுமக்கும் ஈழத்தமிழினம் ஒருபோதும் மறக்கலாகாது. லட்சக்கணக்கான சுதந்திரமான மனிதர்களை அடிமைப்படுத்தி வியாபாரம் செய்தமை, போதைப்பொருள் வர்த்தகம் என மானிடவிரோத அநாகரிகங்களை வணிகம் என்ற பெயரில்  முன்னெடுத்துவந்த இக்கம்பெனியை 1873 இல் பிரித்தானிய அரசே East India Stock Dividend Redemption Act மூலம் முடிவுக்குக்கொண்டுவந்தது. 1800களில் ஆக்கிரமிக்கப்பட்ட நாடுகளிலிருந்த சுமார் 200 000 படையினரைக் கொண்டதான இக்கம்பெனி   (அன்றைய பிரித்தானிய இராணுவத்தைவிட இரண்டு மடங்கு) ஊடாகத் தாம் ஆக்கிரமித்துக்கொண்ட சொத்துக்கள் யாவும் பிரித்தானிய பேரரசின் உடைமைகளாக்கப்பட்டன. சொத்துகளைத் தமது உடைமையாக்கிக் கொண்டவர்கள், தம்மால் அந்தந்த நாடுகளிலே உருவாகிய பிரச்சினைகளுக்குப் பொறுப்பேற்கவோ, அவற்றின் நியாயத்தன்மையை ஏற்றுக்கொள்ள மறுப்பதோ ஏற்றுக்கொள்ளமுடியாத தவறுகளாகும்.
இந்த வரலாற்றுப்பின்னணியின் அடிப்படையிலே 1948 இலிருந்து ஈழத்தமிழினம் முகங்கொடுக்கும் இனவழிப்பையும், அவலம் நிறைந்த அகதிவாழ்க்கையையும் நாம் விளங்கிக்கொள்ளவேண்டும். இந்த மரண அவல நிலை ஒன்றும் எம்மினத்துக்க்குச் சபிக்கப்பட்டதல்ல. அடுத்தவர்களின் அற்ப இலாபநோக்கங்களுக்காக சிறுபான்மை இனமாக நாம் வலிந்து ஆக்கப்பட்டிருக்கிறோம். தவறிழைத்தவர்களிடம் தயங்காது நீதி கேட்பதற்கும், கிடைக்காத நீதியை அனைத்துலகத்திடம் உரக்கச்சொல்லி, எமது ஜனநாயக உரிமைகளை உடைமைகொள்ளவும் நாம் துணியவேண்டும். தமக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை மறக்காது ஒன்றுபட்டுத் துணிந்து உரக்க எடுத்துக்கூறியதால் தான் யூதர்களின் வலிதன்னை உலகம் இன்றும் நினைவுகொள்கிறது. அதைவிட இன்னும் துணிந்து உரத்துச் சொல்வோம் எங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளையும் அவற்றுக்கான காரணகர்த்தாக்களையும் !
பதிவு இணையம்
14-06-2020
Quellen:
https://www.iro.umontreal.ca/~vaucher/History/Asia/
EuropeanExploration.html#france
The Cleghorn Papers. A Footnote to History. Being the
Diary 1795-96 of Hugh Cleghorn of Stravithie by William
Neil
https://www.britannica.com/place/Sri-Lanka/British-
Ceylon-1796-1900
https://www.britannica.com/place/Sri-Lanka/The-
Republic-of-Sri-Lanka)
DUTCH AND BRITISH COLONIAL INTERVENTION IN SRI
LANKA c. 1780-1815: EXPANSION AND REFORM Alicia
Frederika Schrikker
https://www.britannica.com/story/5-fast-facts-about-the-
east-india-company