November 25, 2024

யாழில் தொற்று உறுதி:விழிப்புடனிருக்க கோரிக்கை!

யாழ்ப்பாணம் இணுவிலில் இருந்து தமிழகம் சென்றிருந்த இந்திய வர்த்தகரிற்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதியாகியுள்ளது.

இதனை தொடர்ந்து அவர் தங்கியிருந்த இணுவில் மற்றும் ஏழாலையை பகுதியைச் சேர்ந்த 13 குடும்பங்கள் இன்று தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இதனிடையே அவர்கள் 13 பேருடைய மாதிரிகள் ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்.இணுவில் பகுதியில் தங்கியிருந்து இந்திய புடவை வியாபாரியே கொரோனா தொற்றுக்குள்ளாகியிருக்கும் நிலையில், இணுவில், ஏழாலை பகுதிகளில் சில வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை வடமாகாண சுகாதார பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதனிடையே யாழ்ப்பாணத்திலிருந்து தமிழகம் திரும்பியவருக்கு கொரோனா தொற்றுள்ளதாக வெளியான தகவலை யாழ்.இந்திய துணைத்தூதுவர் எஸ்.பாலச்சந்திரன் உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும் அவர் யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியா செல்லும்போது அவருக்கு எந்தவொரு அறிகுறிகளும் இல்லை. காரணம் இங்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அதேபோல் கொழும்பு துறைமுகத்திற்குள் நுழையும்போதும் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டது. கப்பலிலும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இது எவற்றிலும் அறிகுறிகள் இல்லாத நிலையிலேயே தொடர்ந்து பயணிக்க அனுமதிக்கப்பட்டிருந்தார்.எனினும் சில அறிகுறிகளுடன் காணப்பட்டவர்கள் பயணத்தை தொடர அனுமதிக்கப்படவில்லை எனவும் பாலச்சந்திரன் தெரிவித்திருந்தார்.
இதனிடையே யாழ்.மாவட்ட மக்கள் பீதியடையவேண்டிய அவசியமில்லை. மாவட்டத்தில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவும் சாத்தியங்கள் இல்லை என யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கூறியிருக்கின்றார்.
நாம் கொரோனா வைரஸ் தொற்று எற்படாத வகையில் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம் பொது மக்களும் சுகாதார நடைமுறைகளை முறையாக பின்பற்றி எமக்கு ஒத்தழைப்புத் தரவேண்டும். பதற்றம் கொள்ளத் தேவையில்லை தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னர் மேலதிக விபரங்களை எம்மால் தெரிவிக்கமுடியும் எனவும் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.