November 23, 2024

இதுவரை 60 பேர் உயிரிழப்பு… 2 பேர் உயிருடன் மீட்பு… விமானியின் கடைசி உரையாடல்!

இதுவரை 60 பேர் உயிரிழப்பு… 2 பேர் உயிருடன் மீட்பு… விமானியின் கடைசி உரையாடல்!

பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் (பிஐஏ) பயணிகள் விமானம், கராச்சியின் ஜின்னா சர்வதேச விமான நிலையத்திற்கு அருகிலுள்ள மொடல் கொலனியில் இன்று (22) வெள்ளிக்கிழமை விபத்துக்குள்ளானது.

இதுவரை 60 பேர் இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சிந்து மாகாண சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எவ்வாறாயினும், இந்த எண்ணிக்கை விமான பயணிகள் மட்டுமா அல்லது விமானம் விழுந்த பகுதியில் வசித்தவர்களையும் உள்ளடக்கியதா என்பதை பாகிஸ்தான் தரப்பில் உறுதி செய்யவில்லை. மீட்பு பணிகள் தொடர்ந்து வருகிறது.

இதுவரை, விபத்தில் இருவர் உயிர் தப்பியது உறுதியாகியுள்ளது.

PK 8303 இலக்கமுடைய ஏ 320 ஏர்பஸ் விமானத்தில் 91 பயணிகளும், 8 பணியாளர்களும் பயணம் செய்துள்ளனர்.

விமானம் புறப்பட்ட உடனேயே தொழில்நுட்ப கோளாறை அறிந்து கொண்ட விமானி, அறையை தொடர்பு கொண்டு பேசினார்.

விமானம் புறப்பட்ட சில நூறு அடி உயரத்திலேயே தீப்பற்ற ஆரம்பித்துள்ளது. விபத்திற்குள்ளாகுவதற்கு முன்பாக 2 அல்லது 3 முறை தரையிறக்க முயற்சித்ததாக விபத்தை நேரில் கண்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

விமானம் முதலில் ஒரு தொலைத்தொடர்பு கோபுரத்தில் மோதி, குடியிருப்புக்களின் மீது விழுந்தது. விமான நிலையத்தில் இருந்து சில கிலோமீற்றர் தொலைவில் விபத்து நடந்தது.

சிந்து சுகாதார அமைச்சரின் ஊடக ஒருங்கிணைப்பாளர் மீரன் யூசுப், இரண்டு பயணிகள் உயிர்தப்பி மருத்துவமனைகளுக்கு கொண்டு வரப்பட்டதை உறுதிப்படுத்தினார். தப்பியவர்கள் ஜுபைர் மற்றும் பஞ்சாப் வங்கியின் தலைவரான ஜாபர் மசூத் என அடையாளம் தெரிவித்தார்.

இதேவேளை, விமானிக்கும் கட்டுப்பாட்டு அறைக்குமான இறுதி விநாடி உரையாடல்கள் பாகிஸ்தான் ஊடகங்களில் வெளியாகியுள்ளது. இதில் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட விமானி, “நாங்கள் நேரடியாக சொல்கிறோம் சேர்.. நாங்கள் விமானத்தின் இயந்திரத்தின் கட்டுப்பாட்டை முழுமையாக இழந்து விட்டோம்“ என குறிப்பிடுகிறார்.