மட்டக்களப்பிலும் தடை?
மட்டக்களப்பில் தமிழரசு கட்சியின் பாராளுமன்ற வேட்பாளர்கள் 8 பேர் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் செய்வதற்கு நீதிமன்ற தடை உத்தரவையடுத்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நினைவேந்தல் கைவிடப்பட்டுள்ளது என கட்சியின் செயலாளர் கிருஸ்ணபிள்ளை துரைராஜசிங்கம் தெரிவித்தார்.
தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு நல்லையா வீதியில் அமைந்துள்ள காரியாhலயத்தில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கான நினைவேந்தல் கட்சியின் செயலாளர் கி. துரைராஜசிங்கம் தலைமையில் இன்று திங்கட்கிழமை (18) பகல் 12 மணிக்கு செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன
இந்த நிலையில் இன்று காலை பொலிசார் கட்சியின் காரியாலயத்துக்கு முன்னால் குவிக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு சென்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான கிருஸ்ணபிள்ளை துரைராஜசிங்கம், சீனித்தம்பி யோகேஸ்வரன், ஞானமுத்து சிறிநேசன் மற்றும் மாணிக்கம் உதயகுமார், ஞானப்பிரகாசம், இராசமாணிக்கம் சாணக்கியன், ஆகியோரிடம் அவர்கள் நினைவேந்தல் செய்வதற்கான நீதிமன்ற தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட கடிதங்களை பொலிசார் வழங்கினர்.
இந்த கடிதத்தில் – 2020-05-18 காலை 9 மணியில் இருந்து பகல் 12 மணிவரை காலப்பகுதியில் முள்ளிவாய்க்கால் மரணித்தவர்களுக்கு நினைவு கூர்ந்து இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு நல்லையா வீதியில் அமைந்துள்ள காரியாலயத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான கிருஸ்;ணபிள்ளை,துரைராஜசிங்கம், சீனித்தம்பி யோகேஸ்வரன், ஞானமுத்து சிறிநேசன் , கோவிந்தன் கருணாகரன், மாணிக்கம் உதயகுமார், ஞானப்பிரகாசம், நவரெத்தினராசா கமலதாஸ், இராசமாணிக்கம் சாணக்கியன், ஆகியோரால் விக்கேற்றி நினைவேந்தல் நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாகவும் –
உலகத்திலும் நாட்டிலும் ஏற்பட்டிருக்கின்ற கொரோனா நோய் காரணமாக அரசினால் இடப்பட்டுள்ள மக்களிடையே சமூக இடைவெளியினை சுகாதார நடவடிக்கையினையும் நாட்டு மக்கள் கடைப்பிடிக்கவேண்டிய அவசியம் இருப்பதால் , அவ்வாறவர்களினால் ஏற்பாடு செய்துள்ள அந் நிகழ்வின் போது பல மக்கள் ஒன்று கூட அதிகளவான வாய்ப்பு இருப்பதனாலும் அதன் வினைவாக கொரோனா தொற்று ஏற்பட அதிகளவான வாய்பு இருப்பதனால் நீதிமன்ற தடை உத்தரவு ஒன்றை பெற்று மட்டக்களப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.பி.கே.ஹெட்டியாராச்சி அறிவித்துள்ளார்.
இதனையடுத்தே – ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நினைவேந்தல் கைவிடப்பட்டுள்ளது என கட்சியின் செயலாளர் கிருஸ்ணபிள்ளை துரைராஜசிங்கம் தெரிவித்தார்.