நான் எடுத்த இந்த முடிவில் இறுதி வரை பயணித்தே தீருவேன் – அரியநேத்திரன்
தமிழ் பொது வேட்பாளர் என்ற ரீதியில் என்னை எந்த பிரதான கட்சித் தலைவர்களும் பேசுவதற்காக அழைக்கவில்லை. அவ்வாறு அவர்கள் அழைத்தாலும் நான் செல்லப்போவதில்லை. நான் எடுத்த இந்த முடிவில் இறுதி வரை பயணித்தே தீருவேன் என தமிழ் பொது வேட்பாளர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பிலுள்ள அவரது அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
தமிழ் தேசிய பொது கட்டமைப்பின் வெற்றியை அல்லது இலக்கை உடைப்பதற்கு இப்போது பல சக்திகள் இறங்கியுள்ளன. இந்த நபர்களினால் இன்னும் சில தினங்களில் அல்லது தேர்தலுக்கு முதல் நாளிலோ என்னைப் பற்றி துண்டுப்பிரசுரங்கள் வெளியிடப்படலாம்.
நான் தேர்தலில் இருந்து ஒதுங்கிவிட்டேன் என்று கூட அவர்கள் துண்டுப்பிரசுரங்கள், காணொளிகளை வெளியிடக்கூடும். இவை எதையும் மக்கள் நம்ப வேண்டாம்.
தமிழ் மக்களுக்கு நான் ஒன்று கூறுகின்றேன். நீங்கள் குழப்பமடையத் தேவையில்லை. விருப்பு வாக்கு, விருப்பத் தேர்வு என்கின்ற விடயத்தில் பலர் மக்களை குழப்பமடையச் செய்து வருகின்றனர். மக்களாகிய நீங்கள் எனது சங்கு சின்னத்துக்கு மட்டும் ஒரு புள்ளடியிடுங்கள் அவ்வளவுதான்.
இன்று இந்த பொது வேட்பாளர் என்கின்ற விடயம் இலங்கையில் மட்டுமல்ல, இந்தியா உள்ளிட்ட சில நாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஏனென்றால் எங்கள் விடுதலைப் போராட்டத்தில் அகிம்சை ரீதியிலான, ஆயுத ரீதியிலான இராஜதந்திர செயற்பாட்டிலே கூர்மை பெற்றபோது எல்லோருமே இதை அவதானித்துக்கொண்டு இருக்கின்றார்கள். அவர்கள் எல்லோருமே தவறு விட்டிருக்கின்றார்கள்.
இலங்கை மட்டும் எங்களை ஏமாற்றவில்லை. இந்தியாவும் எங்களை ஏமாற்றி இருக்கின்றது. இறுதிப் போரில் இனப்படுகொலையை செய்வதற்காக பல நாடுகள் இலங்கைக்கு துணை போயிருக்கின்றது. எனவே அவர்கள் அனைவருக்கும் ஒரு மனச்சாட்சி இருக்கின்றது. இணைந்த வட கிழக்கிலே ஒரு அரசியல் தீர்வினை தமிழர்களுக்கு வழங்க அவர்கள் தவறியிருக்கின்றார்கள். அந்த தவறை சுட்டிக்காட்டவேண்டிய உரிமை வடகிழக்கு மக்களுக்கு இருக்கிறது. அதை ஒரு ஜனநாயக வடிவமாக நாங்கள் காட்ட இருக்கின்றோம்.
தமிழ் தேசிய பொது கட்டமைப்பின் வேட்பாளராக நான் வரவேண்டும் என்று ஆசைப்படவில்லை. வேட்பாளராக என்னை தெரிவு செய்வதற்கு முன் நானே இரண்டு பேரை வேட்பாளராக முன்மொழிந்தேன். இறுதியாக சில மாற்றங்கள் ஏற்பட்டதன் காரணமாக நான் இதை ஏற்றிருக்கின்றேன்.
அனைவரும் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். தமிழ் அரசுக் கட்சியில் இருந்து வேறு அரசியல் கட்சியில் போட்டியிடுவது தமிழ் அரசு கட்சியை விட்டு விலகிச் செல்வதாக கருதப்படலாம். நான் இன்னுமொரு கட்சியில் அங்கத்துவம் பெறவில்லை. இப்பொழுதும் தமிழ் அரசுக் கட்சியில் தான் இருக்கின்றேன். நான் தமிழ் தேசிய கொள்கையுடையவன். கட்சியின் கொள்கையை நான் ஏற்றுக்கொள்கிறேன். அதே போன்று எனது தமிழ் தேசிய கொள்கையினையும் கட்சி ஏற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.