அமரர். திரு. விராஜ் மென்டிஸ் அவர்களுக்கு இதயவணக்கம் – தமிழர் ஒருங்கிணைப்புக் குழு- யேர்மனி
தமிழீழ விடுதலைக்கான போராட்டத்தின் நியாயக் கோட்பாடுகளையும், தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே. பிரபாகரன் அவர்களது போரியல்ச் சித்தாந்தங்களையும், புலம்பெயர்ந்து வாழும் தமிழீழ மக்களது வாழ்வுரிமைகளையும், குறிப்பாக புலம்பெயர்ந்த மக்களது அறவழிப் போராட்டக் களங்களையும் மானசீகமாகப் புரிந்து, உணர்வுபூர்வமாக ஏற்று, மொழிவழியிலே ஓர் சிங்கள இனத்தவராகத் தனது பிறப்புரிமைக்கு மட்டும் முதன்மையளித்து, அவ்வினத்தின் அதிகார வர்க்கங்களால் நசுக்கப்பட்டு, நாடற்றவராக்கப்பட்டுத் துன்பியல் வாழ்விலே துவண்டு, தான் பெற்றுக்கொண்ட கசப்பான பட்டறிவிலிருந்து நோக்கிய தெளிந்த பார்வைக்கூடாக, தமிழ்த்தேசிய இனம்மீதும் சிறிலங்காப் பேரினவாதம் கட்டவிழ்த்துவிட்ட வன்முறைகளையும், முரண்பாட்டு எடுகோள்களையும் எதிர்த்து, தமிழரின் தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை என்ற உயர்ந்த பண்புரிமைகளைத் தர்க்க ரீதியாகவும், விஞ்ஞான ரீதியாகவும், ஆய்வு ரீதியாகவும் புரிந்து, அசைக்க முடியாத அந்த உண்மைகளின் பக்கம் நின்றபடி, தன்னாலியன்ற அனைத்து வழிமுறைகளிலும் இதயசுத்தியோடு குரல்கொடுத்து வாழ்ந்த ஓர் அற்புதமான உறவான மரியாதைக்குரிய திரு. விராஜ் மென்டிஸ் அவர்கள், இயற்கையின் அணைப்பிலே விழிமூடிய செய்தியறிந்து துயருற்றோம்.
தமிழீழ விடுதலைக்கான போராட்டத்தின் வரலாற்றுக் காலங்களில், தமிழினம் தமக்கான விடுதலையை யாரிடமிருந்து கோரியதோ அவ்வினத்திலிருந்தே எமது உரிமைகளை புரிந்து, மதித்துக் குரல்கொடுத்து வாழ்ந்த மிகச் சொற்ப சிங்களக் கல்வியாளர்களிலே விராஜ் மென்டிஸ் அவர்கள் முன்மாதிரியானவராக, தமிழர்களோடு ஒன்றித்தவராக, புலம்பெயர்ந்த தமிழர்களின் அறவழிப் போராட்டத் தளங்களிலே, ஐக்கிய நாடுகள் சபையிலே, மனித உரிமை அமைப்புக்களின் மையத்திலே எமக்கான மனிதராக முழுமையாகத் திகழ்ந்தமையைத் தமிழினம் என்றும் மறவாது, அவரைப் பண்பான மனித உச்சப் புகழிலே தாங்கிக் கொள்ளும்.
தமிழ்த்தேசிய மக்களது கலாச்சாரத்திலும், சமூக வாழ்விலும், பொருளாதார வழிமுறைகளிலும் தன்னிறைவும், தாராள நிலையும் பெற்றேக வேண்டுமெனும் பெருவிருப்பும், திறன்வாய்ந்த கட்டமைப்புக்களாகப் புலம்பெயர் அமைப்புக்கள் இயங்குநிலை பேணவேண்டும் என்பதிலே பேரவாவும், புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் காலப்பகுதிகளில் தங்களுடைய தாய்நாட்டுக்காக தமிழர்கள் ஆற்ற வேண்டிய இணையற்ற பங்களிப்புக்கள் தொடர்பாகவும் தெளிந்த கருத்தாய்வுகளை முன்மொழிந்தார். அவ்வாறான நோக்கானது தமிழ்த்தேசிய இனத்திற்கான விடுதலையென்பதை தன் இதயப்பரப்பிலே ஆணித்தரமாக செதுக்கி நிறுத்தியிருந்ததை, அவரோடு இணைந்து பணியாற்றிய உணர்வுமிக்க தடங்களே சாட்சியாகின்றன.
பரந்து விரிந்த உலகப் போராட்டக் களங்களிலே நிலவிய மிதமிஞ்சிய மனித உரிமை அத்துமீறல்களைக் கோடிட்டு, அவற்றிலிருந்து நியாயம் தேடி விடுதலை கோரும் வழிமுறைகளைக் கொண்ட நாடுகளின் எடுத்துக்காட்டுகளுக்கு ஊடாக, தமிழ்த்தேசிய இனத்திற்கான நியாயத் தேடலுக்காக, அனைத்துலக மனித உரிமைகள் அமைப்பின் இயக்குனராகவும் தன்னை உருவகித்துக் கொண்டு பல்வேறுபட்ட துறைசார் கட்டமைப்புக்களுடன் தொடர்பினைப் பேணினார். ஆயினும் தமிழீழம் என்ற உயர்ந்த எண்ணம் தாங்கிய மையம் கரையாதவராகத் திகழ்ந்தார்.
சிரிலங்காப் பேரினவாதம் தமிழர்கள் மீது கட்டவிழ்த்துவிட்டிருந்த அரசியல் அடக்குமுறைகள், சட்டவிரோதமான சிறைப்புடிப்புக்கள், சித்திரவதைகள் மற்றும், பூர்வீக நிலப்பறிப்புக்கள் போன்ற பாரிய அநீதியான விடயங்களை, அடக்குமுறைகளைப் பிரயோகிக்கின்ற அந்த இனத்திலே பிறந்துவிட்டேனே என்பதற்காக ஏற்காது, துணிந்து எதிர்த்து நின்ற நேர்மையும், நீதியின் வழிநின்று தமிழினத்தோடு தோழமை பூண்ட மாண்புமே, அடிப்படையான உரிமைகளை மதிக்கின்ற நியாபூர்வமான தோழமையாக உலகத்தமிழர்களின் இதயங்களிலே ஒன்றித்து, பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான வரலாற்றுப் புகழ் கொண்ட தமிழின் நீட்சியில் உயிர் வாழ்வார்.
சிங்களத் தீவிரவாத சக்திகளும், தேசியவாதிகளும் இணைந்து, தமிழர் நிலவுரிமைகளை மறுத்து, முழு இலங்கைத் தீவையுமே தனிச் சிங்கள பௌத்த தேசிய நாடாக நிறுவி விடுவதற்காகப் பல்வேறுபட்ட பிரயத்தனங்களை புனைவுகளாக முன்னிறுத்தி, அரசியல் சமூக பண்பாட்டு மாற்றங்களைத் தமக்கேற்ற வகையிலே முன்மொழிந்துவரும் தருணங்களிலெல்லாம், அதற்கு எதிராக தமிழர்களின் தொன்மைகளை நிலைகொள்ள வைப்பதற்காக தகைசான்றுகளின் அடிப்படையில், தமிழர் பக்கமாக நின்று வாதப்பிரதிவாதங்களை முன்வைக்கின்ற அற்புதமான தோழமையாளராக விராஜ் மென்டிஸ் அவர்கள் வாழ்ந்தார் என்பதை காலம் மறவாது. அவ்வாறான உயர்ந்த எண்ணம் கொண்ட மனிதரது ஆன்மா அமைதிபெற இயற்கையை வேண்டுவதோடு, அவரது பிரிவுத் துயர் சுமந்து வாடும் அனைவரோடும் நாமும் துயரைப் பகிர்ந்து, அவராற்றிய சிறந்த பணிகளை அவர் நினைவோடு தொடர்ந்து முன்னெடுப்போமென, அவரது புகழுடல்மீது உறுதியெடுப்போமாக.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.