இலங்கையை வந்தடைந்தார் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்ஷங்கர்
இந்திய வெளிவிவகார அமைச்சர் அமைச்சர் எஸ். ஜெய்ஷங்கர் இன்றைய தினம் வியாழக்கிழமை நாட்டை வந்தடைந்துள்ளார்.
இந்த விஜயத்தின்போது வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்ஷங்கர், இருதரப்பு பங்குடைமையின் பரந்தளவான விடயங்கள் குறித்து இலங்கை தலைமைத்துவத்துடன் சந்திப்புகளை மேற்கொள்ளவுள்ளார்.
இந்தியப் பிரதமர் மோடியின் புதிய அரசாங்கத்தின்கீழ் வெளிவிவகார அமைச்சர் மேற்கொள்ளும் முதலாவது இருதரப்பு விஜயம் இதுவாகும்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட செய்தியுடன் இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் . ஜெய்சங்கர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்கவுள்ளார்.
அத்துடன் பிரதமர் தினேஸ் குணவர்தன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, அமைச்சர் ஜீவன் தொண்டமான், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதிநிதிகள், இலங்கை தமிழரசுக் கட்சி, ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி உள்ளிட்ட தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளையும் சந்திக்கவுள்ளார்.
இதேவேளை, இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் நுவரெலியா, கண்டி மற்றும் மாத்தளை உள்ளிட்ட மாவட்டங்களில் நிர்மாணிக்கப்பட்டு சகல உட்கட்டமைப்பு வசதிகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ள 109 வீடுகளையும் மெய்நிகர் ஊடாக உத்தியோகபூர்வமாக பொதுமக்களிடம் கையளிக்கவுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது டில்லி விஜயத்தின் போது இலங்கைக்கு வருமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
அதற்கமைய எதிர்வரும் ஆகஸ்டில் அவர் இலங்கை வரக்கூடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அது குறித்து ஆராய்வது காலநிதி ஜெய்சங்கரின் விஜயத்தில் முக்கிய அம்சமாகும்.
அது தவிர இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் மேலதிக வலுச்சக்தியை கொள்வனவு செய்தல், அதற்காக இந்தியா – இலங்கைக்கு இடையிலான குழாய் இணைப்பொன்றை கட்டமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்தல், மன்னார், பருத்தித்துறை மற்றும் முல்லைத்தீவை மீள் புதுப்பிக்கத்தக்க வலுச்சக்தி மையமாக அபிவிருத்தி செய்யும் திட்டம், இந்தியா – இலங்கைக்கு இடையிலான தரைமார்க்க இணைப்பை ஏற்படுத்துவதற்கான சாத்திக்கூறுகள் என்பன தொடர்பிலும் இவ்விஜயத்தில் ஆராயப்படவுள்ளது.
மேலும் இந்திய அரசாங்கத்தால் திருகோணமலையை கேந்திரமாகக் கொண்டு ஆரம்பிக்கப்படவுள்ள கைத்தொழில் வலயம் தொடர்பிலும், விவசாய நவீன மயமாக்கல் தொடர்பிலும் முக்கியமாக இரு நாட்டு மீனவர்களுக்கிடையிலான பிரச்சினைகள் குறித்தும் இரு தரப்பு கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன.
விசேடமாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்பின் போது, பெருந்தோட்டப்பகுதிகளிலுள்ள லயன் அறைகளை பெருந்தோட்டக் கிராமங்களாக்கிய பின்னர் அவற்றின் அபிவிருத்திகளுக்கு இந்தியாவின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்வது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.