கச்சத்தீவு விவகாரம் தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையில் புதிய இணக்கம்!
இந்தியா – இலங்கை கடற்பரப்பின் எல்லை மற்றும் கச்சத்தீவு பிரச்சினை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் விரிவான இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான அறிவிப்பு இன்று மாலை விடுக்கப்படும் என இந்திய தரப்பு பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளதாக இந்திய செய்தித்தளம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.
இந்தநிலையில், உடன்படிக்கையின் விபரங்கள் தொடர்பில் அவர் தெரிவிக்க மறுத்துவிட்டதாக கூறப்பட்டுள்ளது.
1974ஆம் ஆண்டு கச்சத்தீவு உடன்படிக்கை ஜூன் மாதம் 26 – 28ஆம் திகதிகளில் செய்து கொள்ளப்பட்டு, 50 வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையிலே தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேலும், குறித்த உடன்படிக்கை 1974ஆம் ஆண்டு ஜூலை 8ஆம் திகதியன்றே நடைமுறைக்கு வந்தது.
இதற்கிடையில், நேற்றைய தினம் தமிழக முதல்வருக்கு அனுப்பிய கடிதம் ஒன்றில், கடற்றொழிலாளர்களின் பிரச்சினைக்கு மத்திய அரசாங்கம் முன்னுரிமை அளிக்கும் என்றும், அதனை நம்பலாம் என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.