கந்தசாமி மலை முருகனும் இனி இல்லையா?
திருகோணமலையின் தென்னைமரவாடி தமிழ் மக்களால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கந்தசாமி மலை முருகன் ஆலயத்தின் மாதாந்த பௌர்ணமி தின பொங்கல் நிகழ்வு இலங்கை காவல்துறையால் தடுத்துநிறுத்தப்பட்டுள்ளது.
மாதாந்தம் பௌர்ணமி தினத்தன்று தென்னமரவாடி கிராம மக்களால் நடத்தப்படும் பொங்கல் விழா வழமை போன்று இன்றைய தினமும் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது.
பொங்கல் விழாவிற்கு கிராம மக்கள் மற்றும் திருகோணமலை மாவட்டத்தின் பல பிரதேசங்களிலிருந்து பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கிராம மக்களால் பொங்கலுக்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளையில் ஆலய வளாகத்திற்குள் திடீரென நுழைந்த 100க்கு மேற்பட்ட இலங்கை காவல்துறையினர் மற்றும் விசேட அதிரடி படையினர் ஆயுதங்களுடன் வருகை தந்து மக்களை விரட்டியடித்துள்ளனர்.
அத்துடன் பொங்கல் நிகழ்வில் கலந்து கொண்ட சிலருக்கு நீதிமன்ற தடையுத்தரவினை வழங்கி அவ்விடத்திலிருந்து வெளியேற்றியிருந்தனர்.
அத்துடன் பொங்கலை தடுத்து நிறுத்தி பக்தர்களைளையும் வெளியேற்றி பதற்றமான சூழலை தோற்றுவித்திருந்தனர்.
காவல்துறையின் தலையீடு ஒட்டுமொத்த தமிழ் சமுகத்தினுடைய கலாசார மற்றும் மத வழிபாட்டு உரிமையினை மீறும் செயலாகுமென கண்டனங்கள் எழுந்துள்ளது.