விடுதலைப் புலிகளின் காலத்தில் பெண்கள் சுதந்திரமாக திரிந்தார்கள்..! சபையில் சார்ள்ஸ் எம்.பி
விடுதலைப் புலிகளின் காலத்தில் வடக்கு கிழக்கு பகுதிகளில் வாழ்ந்த தமிழ்ச் சிறுமிகளுக்கும் பெண்களுக்கும் பாதுகாப்பான சூழல் இருந்தது ஆனால் இன்று அவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் உருவாகியுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
அண்மைக்காலமாக நாட்டில் பெண்களுக்கெதிரான அரங்கேறும் வன்செயல்கள் குறித்து நேற்றையதினம் (21) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறியிருந்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
„கடந்த 15 ஆம் திகதி மன்னார், தலைமன்னார் பகுதியில் ஒரு கொடூரமான சம்பவம் நிகழ்ந்தேறியது.
10 வயது நிரம்பிய பாடசாலை மாணவியான அன்சியான் கியானுசியா என்ற சிறுமி தகாத செயலுக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் மெல்லிய நூலினால் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டார்.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவரென சந்தேகிக்கப்பட்டு 52 வயதுடைய ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.
இதன் போது தான் சிறுமியிடம் தகாத முறையில் நடந்துகொள்ளவில்லை எனவும் கொலை மட்டும் தான் செய்தேன் என்றும் கூறியுள்ளார்.
மன்னார் சிறுமி கொலைக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம் நடத்தும் பிள்ளையான் குழு : கேலிக்கூத்தென கண்டனம்
மரண தண்டனை
இதுவே விடுதலைப் புலிகளின் காலத்தை எடுத்துப்பார்த்தால் அப்போது தமிழ்ச் சிறுமிகளுக்கும் பெண்களுக்கும் பாதுகாப்பு இருந்தது.
1998 ஆம் ஆண்டு 13 வயது சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த ஒருவருக்கு முல்லைத்தீவு காவல்துறை நீதிமன்றில் மரணதண்டனை தீர்ப்பு வழங்கியது.
அந்த நபரை புதுக்குடியிருப்பு சந்தியில் பொது மக்கள் முன்னிலையில் கட்டி வைத்து விடுதலைப்புலிகளால் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.“ என்றார்.
இங்கு எமது சட்டங்கள் மாற்றியமைக்கப்பட வேண்டும் பெண்களுக்கும், சிறுமிகளுக்குமான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படவேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.