சிறிலங்காவின் சுதந்திரநாள்! ஈழத்தமிழர்களின் கரிநாள்!
சிறிலங்காவின் சுதந்திரநாள்! ஈழத்தமிழர்களின் கரிநாள்!
பறிக்கப்பட்ட தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை மீளப்பெற்றுத்தர வலியுறுத்தி
மாபெரும் கண்டனப் பேரணி.
” ஒரு நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு என்பது அந்நாட்டில் உள்ள இனக்குழுக்களை சமமாக நடத்துவதை அடிப்படையாகக் கொண்டது. ஒரு இனக்குழுவிற்கு சமத்துவம் வழங்கப்படாத பட்சத்தில், சமத்துவம் மற்றும் இறுதியில் பிரிவினைக்கான அதன் உரிமைகோரல்களை வலியுறுத்த உரிமை உள்ளது என்பதை சுயநிர்ணய உரிமை, மக்களின் சமத்துவம் மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவற்றை உள்ளடக்கிய சர்வதேச சட்டம் வலியுறுத்துகிறது ”
இவ்வரையறைக்குள் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையில் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை மீளப்பெற்றுத்தர வலியுறுத்தி, எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் நாள் அன்று பிரித்தானிய தலைநகர் லண்டனில் பாரிய கவனயீர்ப்பு பேரணி நடைபெறவுள்ளது.
உலகெங்கிலும் இருந்து பல்லாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழின உணர்வாளர்கள் கலந்துகொண்டு உரிமைக்குரல் எழுப்பவுள்ள இப் பேரணியானது சிறிலங்கா உயர் ஆணையர் அலுவலகத்திற்கு முன்பாக ஆரம்பித்து நடைபவனியாக செல்லவுள்ளது. சிறிலங்கா உயர் ஆணைய இல்லத்தின் முன்றலில் இருந்து (இலக்கம் .13, ஹைட் பார்க் கார்டன்ஸ், லண்டன், W2 2LU ) எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4ம் நாள், ஞாயிற்றுக் கிழமை அன்று காலை 11 மணிக்கு ஆரம்பமாகி ஐக்கிய இராச்சியத்தின் மன்னரின் நிர்வாகத் தலைமையகம் மற்றும் அரச வதிவிடமாக விளங்கும் பக்கிங்ஹம் அரண்மனையை நோக்கிச்சென்று பின் அங்கிருந்து பாராளுமன்ற சதுக்கத்தை வந்தடையும்.
பேரணியின் நிறைவில், மேன்மைதங்கிய பிரித்தானிய அரசர் மூன்றாம் சார்ள்ஸ், பிரித்தானியப் பிரதம மந்திரி மதிப்புக்குரிய ரிஷி சுனக் மற்றும் ஏனைய அரசாங்க அதிகாரிகளுக்கு தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைகளை மீளப் பெற்றுத்தருவதில் அவர்களுக்கு உள்ள பொறுப்பின் ஆழத்தை வலியுறுத்தும் கடிதம் ஒன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது.
அனைத்துலக ஈழத் தமிழர் பேரவை (ICET), தமிழர் ஒருங்கிணைப்புக் குழு (TCC), சர்வதேச தமிழீழ இராஜதந்திர கட்டமைப்பு (IDCTE), மற்றும் தமிழ் இளையோர் அமைப்பு (TYO) ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ள இப்பேரணியில் அனைத்து ஊடகங்களும் பங்கேற்று எமது தேசத்துக்கான பணியை ஆற்றுவீர்கள் என நம்புகிறோம். இப்பேரணியில் கலந்துகொள்பவர்கள் அனைவரும் தமிழர்கள் என்ற தேசிய உணர்வில் ஒன்றிணைவதால், தமிழீழத் தேசியக் கொடியுடன் தத்தமது நாட்டின் தேசியக் கொடிகளையும் பெருமையுடன் ஏந்திச் செல்ல அனுமதிக்கப்படுவீர்கள் என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.