November 21, 2024

மயிலத்தமடு பசுக்களுக்கு நீதி கோரி யாழில் போராட்டம்

தமிழர்களின் பட்டிப் பொங்கலன்று மட்டு மயிலத்தமடு பசுக்களுக்கும் காளைகளுக்கும் இழைக்கப்படும் கொடுமைகளை கண்டித்து யாழில் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

யாழ் நல்லை ஆதீன முன்றலில் பட்டிப் பொங்கலான நாளை மறுதினம் செவ்வாய் மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ள கவனயீர்ப்பில் அனைவரையும் அணி திரளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.   

ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பின் சார்பில் தென்கயிலை ஆதீன தவத்திரு அகத்தியர் அடிகளார் விடுத்துள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த செய்தி குறிப்பில்,

மட்டக்களப்பு மாதவனை மயிலத்தமடு மேய்ச்சல்தரையில் அத்துமீறி குடியேறவும் பயிர்செய்யவும் முனையும் ஆக்கிரமிப்பாளர்கள் தொடர்ச்சியாக அங்கு மேய்ச்சலில் ஈடுபடும் பசுக்களுக்கும் காளைகளுக்கும் சொல்லொணாத் துயரங்களை ஏற்படுத்தி வருகின்றனர்

வெங்காய வெடி வைத்து அவற்றின் வாயில் கொடும் காயங்களை ஏற்படுத்தி அவை உணவு உண்ணக்கூட முடியாத, வார்ததையால் வடிக்க முடியாத கொடுமைகளை வாயில்லா ஜீவன்களுக்கு ஏற்படுத்தி வருகின்றனர்.

அதனை விட சுட்டும், வெட்டியும், மின்சாரம் பாய்ச்சியும் இந்த பசுக்களுக்கும் காளைகளிற்கும் ஏற்படுத்தப்பட்டு வரும் கொடுமைகள் பூரணமாக நிறுத்தப்பட வேண்டும்.

அரசினால் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளும், நீதிமன்றத் தீர்ப்புக்களும் முறையாக அமுல் செய்யப்படுவது உறுதிப்படுத்தப்பட்டு, பட்டி மேய்ச்சல் தரைகளிலிருந்து அனைத்து சட்டவிரோதிகளும் அகற்றப்பட வேண்டும்.

மேய்ச்சல் நிலத்தில் எந்தவொரு பிற நடவடிக்கைளும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்

இவற்றை ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தின் குரலாக ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பாக அரச இயந்திரத்திற்கு ஆணித்தரமாக வலியுறுத்துகின்றோம்.

சொல்லொணாத் துயரை சந்தித்துள்ள கிழக்கின் பண்ணையாளர்களையும் பசுக்களையும் பாதுகாக்க அனைவரும் அணி திரள்வோம் என்றுள்ளது

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert