November 21, 2024

ஹோமாகம தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் இரசாயன புகை – மக்கள் அவதி

ஹோமாகமவில் உள்ள தொழிற்சாலையொன்றில் நிலத்தடி இரசாயன தொட்டியொன்று சேதமடைந்ததால் வெளியேறிய புகை காரணமாக அப்பகுதி மக்களுக்கு சுவாச கோளாறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக தொழிற்சாலைக்கு செல்லும் வீதிகளையும் பொலிஸார் மூடியுள்ளனர், மேலும் தீயணைப்பு வாகனங்கள் மற்றும் நோயாளர் காவு வண்டி சேவைகளும் தயார் செய்யப்பட்டு நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஹோமாகமவில் உள்ள இத்தொழிற்சாலை வளாகத்தில் இருந்து இன்று (08) காலை முதல் வெள்ளை புகை வெளியேறி வருகிறது.

தொழிற்சாலையில் உள்ள நிலத்தடி தொட்டியில் ஏற்பட்ட சேதம் காரணமாக வெளியான வாயுவால் ஏற்பட்ட இரசாயன எதிர்வினையின் விளைவாக இந்த வாயு உற்பத்தியாகியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

புகை பரவத் தொடங்கியதையடுத்து, அப்பகுதி மக்கள் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால்,  பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதன்போது, முகக்கவசம் அணியுமாறும் பொலிசார் அவர்களை அறிவுறுத்தியுள்ளனர்.

இத்தொழிற்சாலையில் கடந்த ஓகஸ்ட் மாதம் 17ஆம் திகதி தீவிபத்து ஒன்று ஏற்பட்டதையடுத்து, தொழிற்சாலை முழுவதும் இரசாயன பொருட்கள் பரவி, அவற்றை முறையான முறையில் அகற்றும் வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

பின்னர், மத்திய சுற்றாடல் அதிகார சபையினர் வருகை தந்து அவற்றை முறையாக அப்புறப்படுத்தும் வரை அவற்றை முறையாக சேமித்து வைக்குமாறு கூறியுள்ளனர்.

இந்நிலையில், ஆலை ஊழியர்கள் இந்த இரசாயனங்களை நிலத்தடி தொட்டிகளில் சேமிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கட்டுமான பணியின் போது இரசாயனங்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த நிலத்தடி தொட்டி சேதமடைந்தது.

நேற்று (07) பெய்த கனமழையின் போது ஏற்பட்ட இரசாயன எதிர்வினையின் விளைவாக வாயு வெளியேறியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

எவ்வாறாயினும், நிலைமையை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert