November 23, 2024

எங்களுக்கு நிதி வேண்டாம் நீதியே வேண்டும்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எம் உறவுகளுக்காக நாம் 14 வருடங்களாக போராடி வருவது நிதிக்காக அல்ல , நீதி கோரியே என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் யாழ். மாவட்ட சங்க தலைவி சிவபாதம் இளங்கோதை தெரிவித்தார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

2024ஆம் ஆண்டு பாதீட்டில் காணாமல் போனவர்களுக்கு என பெரும் நிதி ஒதுக்கி உள்ளார்கள். 

எங்கள் பிள்ளைகள் வீதியிலையோ காடுகளிலையோ காணாமல் போனவர்கள் அல்ல. மன்னிப்பு அளிப்பதாக அவர்கள் கூறியதை கேட்டு , சரணடைந்தவர்கள், எங்கள் வீடுகளுக்குள் புகுந்து கைது செய்யப்பட்டோர். அவர்களையே காணாமல் ஆக்கியுள்ளார்கள்.

இது தொடர்பில், சர்வதேச விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என நாங்கள் கோரி வருகிறோம்.

விசாரணைகளை மேற்கொள்ளாது நிதியை தர முயல்கின்றனர். காணாமல் போனோருக்கான நிதியினை, தென்னிலங்கையில் காணாமல் போனருக்கு வழங்குங்கள். எங்களுக்கு இந்த காசு வேண்டாம். நாங்கள் தேடுவது எங்கள் பிள்ளைகளையே..

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பெற்றோர்களில், 100 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து விட்டனர். ஆனாலும் நாங்கள், தொடர்ந்து உறவுகளை தேடி வருகிறோம்.

எனவே காசு தந்து எங்களை ஏமாற்ற வேண்டும். நாங்கள் காசு வாங்க வர மாட்டோம். எங்களுக்கு நீதியே வேண்டும்.

14 வருடங்களாக தொடர்ந்து போராடுவது காசுக்காக இல்லை. எங்கள் பிளைகளுக்காகவே போராடி வருகிறோம் என மேலும் தெரிவித்தார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert