November 24, 2024

13 வருடத்தில் 80 விகாரை?

 2010ஆம் ஆண்டுக்குப் பின் வடக்கு கிழக்கில் 83 இடங்களில் விகாரையைக் கட்டியுள்ளனர். உண்மையைச் சொன்ன வரலாற்று ஆசிரியர்களை புறக்கணித்து பொய்களைப் புனைந்து பொய்களுக்கூடாக இந் நாட்டிலுள்ள தமிழ் மக்களை பூர்வீகக் குடிகள் இல்லை என்பதை வெளிப்படுத்த முயற்சிக்கின்றனர் என பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.

தமிழர்கள் வாழும் இடங்களைச் சிங்களமயப்படுத்துவதற்காக ஆரம்பத்தில் யுத்தத்தின் மூலமாக தமிழர்களை அழித்து நிலங்களைப் பறித்து இங்கிருந்து அகற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டது.

யுத்தத்திலே இனப்படுகொலையை செய்தார்கள் என சர்வதேச ரீதியில் எதிர்கொள்கின்றனர். இந்த நேரத்தில் வடக்கு கிழக்கிலுள்ள சைவ சமய அடையாளங்களை பௌத்த அடையாளங்களாக நிலைநிறுத்தி சிங்கள பௌத்த நாடு என நிரூபிக்க நினைக்கின்றனர்.

அந்த முயற்சியின் ஒரு கட்டமாக பறாளாய் முருகன் ஆலயத்திலுள்ள அரச மரத்தை சங்கமித்தை காலத்தில் நடப்பட்டதாகப் புனைந்து செய்தியைப் பரப்புகின்றனர். அதற்கெதிரான போராட்டமாகவே இது இடம்பெறுகின்றது. கடந்த தை மாதம் வர்த்தமானி அறிவித்தல் வெளிவந்தததை தற்போது தான் அவதானிக்க முடிந்தது. குறித்த வர்த்தமானியின் பிரகாரம் கீரிமலையில் நேர்த்திக்கடன்ளைச் செய்யும் மடமும் தொல்பொருள் அடையாளங்களென கூறப்படுகின்றது.

குருந்தூர்மலை தொல்பொருள் அடையாளமெனின் எவ்வாறு அங்கு பௌத்த விகாரையை அமைக்க முடியும். தொல்பொருள் அடையாளங்களுக்கு வேலியிட்டு பாதுகாப்பதே உலகத்திலே பேணப்படும் வழக்கம். ஆனால் குருந்தூர் மலையிலே சிவன் ஆலயத்தை மறைத்து பௌத்த விகாரையைக் கட்டி முடித்திருக்கின்றார்கள். அதேபோல் தையிட்டியில் தமிழர்களின் காணியில் விகாரையைக் கட்டியுள்ளனர்.

இவ்வாறு 2010ஆம் ஆண்டுக்குப் பின்னர் வடக்கு கிழக்கில் 83 இடங்களில் விகாரையைக் கட்டியுள்ளனர். தற்பொழுதும் இந்த இடத்தில் பௌத்தம் இருந்ததாக கூறி சிங்கள பௌத்தமாக அடையாளப்படுத்த முனைகின்றார்கள். இங்கு தமிழ் பௌத்தம் இருந்ததற்கான அடையாளங்கள் உண்டு.

விஜயன் இலங்கைக்கு வர முன்னரே இலங்கையில் பஞ்ச ஈச்சரங்கள் காணப்பட்டது. வரலாற்று வழியாக சிவனை வழிபடும் நாடாக இருந்ததால் தான் திருமூலர் சிவபூமி என இந்த நாட்டை வர்ணித்துள்ளார்.

உண்மையைச் சொன்ன வரலாற்று ஆசிரியர்களை புறக்கணித்து பொய்களைப் புனைந்து பொய்களுக்கூடாக இந் நாட்டிலுள்ள தமிழ் மக்களை பூர்வீகக் குடிகள் இல்லை என்பதை வெளிப்படுத்த முயற்சிக்கின்றனர்.

இந்த ஆலயத்தில் 1768ஆம் ஆண்டில் எழுதப்பட்ட உறுதியில் எந்தவிதமான அரசமரமும் இருந்ததாக இல்லை. இதை சர்வதேச சமூகத்திடம் கொண்டு செல்வதற்கும் இது தொடர்பான போராட்டங்களை முன்னெடுப்பதற்கும் தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகள் என்ற வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முழு முயற்சிகளை மேற்கொள்வோம் எனவும் தெரிவித்துள்ளார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert