1990, ல் கிழக்கில் பிரமதாசாவால் அரங்கேற்றப்பட்ட தமிழ் முஷ்லிம் பிரித்தாளும் தந்திரம் இன்றுவரை தொடர்கிறது!-பா.அரியநேத்திரன்.
1990, ல் கிழக்கில் பிரமதாசாவால் அரங்கேற்றப்பட்ட தமிழ் முஷ்லிம் பிரித்தாளும் தந்திரம் இன்றுவரை தொடர்கிறது!
-பா.அரியநேத்திரன்.
ஈழவிடுதலைப்போராட்டம் இளைஞர் அமைப்புகள் கரந்தடி தாக்குதல்களை ஆரம்பித்த காலம் அல்பிரட் துரையப்பா 1975 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் நாள் யாழ்ப்பாணம் சுழிபுரம் பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலய முன்றலில் வைத்து விடுதலைப் புலிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதுவே இலங்கைத் தமிழர் வரலாற்றில் இடம்பெற்ற முதலாவது அரசியல் கொலையாகும். அன்று தொடக்கம் 1986, நவம்பர், 23, வரை கரந்தடி தாக்குதல்கள் பரவலாக வடக்கு கிழக்கு முழுவதும் இடம்பெற்றன. கரந்தடி தாக்குதல் ஆரம்பித்த காலத்தில் பல்வேறு சுற்றிவளைப்புகள் கைதுகள், கடத்தல்கள், என இராணுவத்தினரால் அரங்கேற்றப்பட்டன.
அந்த காலத்தில் கிழக்கு மாகாணத்தில் முதன் முதலாக கடந்த 1987, ஜனவரி,28ம் திகதி கொக்கட்டிச்சோலை படுகொலை என பேசப்பட்ட இறால் வளர்ப்பு பண்ணை மற்றும் படுவான்கரை பெருநிலத்தில் இடம்பெற்ற இனப்படுகொலைகள் பாரிய படுகொலைகளாக உள்நாட்டிலும் சர்வதேச அரங்கிலும் பேசப்பட்டன.
இதன் பின்னர் 1987, யூலை,29,ல் இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட கையோடு 1987,யூலை,30,ல் இந்திய அமைதிப்படை இலங்கைக்கு வருகை தந்தது. 1987,அக்டோபர்,10,ல் இந்தியப்படைக்கு எதிராக விடுதலைப்புலிகள் 1,ம் கட்ட ஈழப்போர் என பெயரிட்டு மோதல் இடம்பெற்றன. விடுதலைப்புலுகள் கரந்தடி தாக்குதலில் இருந்து மரபு படையணியாக வளர்ச்சி பெறுவதற்கு முதலாம் கட்ட ஈழப்போர் என இதற்கு பெரிட்டனர்.
1990, மார்ச்,24,ல் இந்தியப்படை இலங்கையை விட்டு வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சராக இருந்த வரதராஜப்பெருமாளையும் அழைத்துக்கொண்டு வெளியேறியது.
அதற்கு முன்னர் 1988,டிசம்பர்,18, ம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில்தான் ஆர். பிரமதாசா ஜனாதிபதியாக பதவி ஏற்றிருந்தார் இந்தியப்படை வெளியேற விடுதலைப்புலிகளை பயன்படுத்திய ஆர் .பிரமதாசா இந்தியப்படை வெளியேறிய கையோடு அடுத்த காய்நகர்த்தலாக தமிழ் முஷ்லிம் மக்களை பிரித்தாளும் திட்டத்தை வகுத்தார்.
இதற்கு ஒரு காரணம் இருந்தது இலங்கை அரசுக்கு எதிரான ஈழவிடுதலைப்போராட்டத்தில் பல இயக்கங்களில் முஷ்லிம் இளைஞர்களும் இணைந்து போராடியவரலாறுகளும், பல தமிழ் போராளிகள் முஷ்லிம் கிராமங்களில் பாதுகாப்பாக இருந்த சம்பவங்களும் 1976,தொடக்கம் 1990, காலம் வரை இருந்தது.
விடுதலைப்புலிகளில் இணைந்து போராடி மாவீரர்களாக 26, முஷ்லிம் இளைஞர்கள் உயிர் நீத்த வரலாறுகளும் இருந்தது இந்த உண்மையை அறிந்த ஜனாதிபதி ஆர் .பிரமதாசாவும்,பிரதமரான டீ.வி.விஜயதுங்காவும் பதவி வகித்த ஜக்கியதேசிய கட்சி அரசாங்க காலத்தில் தமிழ் முஷ்லிம் மக்களை பிரித்தாளும் தந்திரமாகவே முஷ்லிம் இளைஞர்களை கொண்டு தமிழர்களை அடக்கும் செயல் திட்டமாக முஷ்லிம் ஊர்காவல் படையினர் 1990, ல் இராணுவத்துடன் சேர்ந்து கிழக்கு மாகாணத்தில் தமிழர்களை குறிவைத்து தாக்குதல்கள் இடம்பெற்ளன.
முஷ்லிம் ஊர்காவல்படையினருக்கு இராணுவ முகாங்களில் பயிற்சியும் ஆயுதங்களும் வழங்கப்பட்டன. முதலாவது நடவடிக்கைக்காக கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டம் தேர்த்தெடுக்கப்பட்டது.
1990,யூண்,10,ல் தமிழீழ விடுதலைப்புலிகள் இலங்கை இராணுவத்திற்கு எதிராக 2,ம் கட்ட ஈழப்போரை ஆரம்பித்தனர் இந்தப்போராட்டம் ஆரம்பித்து மறுதினம்
ஆரம்ப நடவடிக்கை 1990, யூண், 11,ம் திகதி காரைதீவு சந்தியில் இருந்து ஆரம்பித்த சுற்றிவளைப்பு, தேடுதல் நடவடிக்கை மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனை வரை பிரதான வீதி ஊடாக தொடர்ந்தது.
பல கிராம தமிழ் இளைஞர்கள் எழுவான்கரை பகுதியில் வசிக்கமுடியாமல் படுவான்கரை பெருநிலப்பகுதிகளில் உள்ள பல கிராமங்களுக்கு இடம்பெயர்ந்தனர். பழுகாமம், அம்பிளாந்துறை, கடுக்காமுனை, அரசடித்தீவு, பண்டாரியாவெளி, படையாண்டவெளி, மகிழடித்தீவு, முதலைக்குடா, கொக்கட்டிச்சோலை, பட்டிப்பளை, முனைக்காடு, களுமுந்தன்வெளி, தும்பன்கேணி, திக்கோடை, நாற்பதாம்கிராமம் என பல கிராமங்களில் அக்கரைப்பற்று தொடக்கம் சித்தாண்டி வரையிலான படையினரின் கட்டுப்பாட்டு பகுதியாக அப்போது இருந்த எழுவான்கரைபகுதி இளைஞர்கள் உறவினர் வீடுகளில் படுவான்கரைபெருநிலப்பக்கம் இடம்பெயர்தனர்.
படுவான்கரைபெருநிலம் அப்போது விடுதலைப்புலிகளின் பூரண கட்டுப்பாட்டு பிரதேசமாக இருந்தது என்பதால் எழுவான்கரைப்பகுதி இளைஞர்கள் அங்கு தஞ்சம் அடைந்தனர்.
எஞ்சிய தமிழ் இளைஞர்கள் பலரை கைதுசெய்து படையினரும்,முஷ்லிம் உர்காவல் படையினரும் சந்திகளில் அவர்களை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்து பெற்றோல் இட்டு தீயிட்டு எரித்தனர். கிழக்கு மாகாணம் குறிப்பாக மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட தமிழ் கிராமங்களில் அச்சமும் ஒருவித பதட்டமும் தொடர்ந்தவண்ணம் இருந்தது.
1990,யூண்,20, ல் அம்பாறை மாவட்டம் வளத்தாப்பிட்டியிலும்,1990, யூண்,29,ல் வீரச்சோலையிலும்,1990, யூலை,04,ல் மல்லிகைத்தீவிலும்,1990, யூலை,10,ல் அம்பாறையிலும்,1999,ஆகஷ்ட்,08,ல் சவளக்கடையிலும்,பல நூற்றுக்கணக்கான தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர்.
இதனால் மக்கள் ஆலயங்கள், பொது இடங்களில் கூடி இராப்பொழுதுகளை கழித்தனர் இவ்வாறான அவலமும் துன்பமும் அம்பாறை மாவட்டம் முமுவதுமாக தமிழ் கிராமங்களில் இடபெற்றுக்கொண்டி இருந்த வேளையில்தான் வீரமுனை படுகொலை இடம்பெற்றது.
ஆம் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேசத்தில் வீரமுனையையும் அதன் சுற்றுவட்டக் கிராமங்களான வீரச்சோலை, மல்லிகைத்தீவு, மல்வத்தை, வளத்தாப்பிட்டி, சொறிக்கல்முனை, அம்பாறை பகுதிகளைச்சேர்ந்த பல நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் குழந்தை குட்டிகளுடன் வீரமுனை சிந்தா யாத்திரைப் பிள்ளையார் கோயில் வளவினுள்ளும் வீரமுனை இராமகிருட்டிண மிசன் பாடசாலை வளவினுள்ளும் 1990 சூன் மாதம் முதல் சூலை மாதம் வரை தஞ்சம் புகுந்திருந்தனர்.
இக்காலகட்டத்தில், 1999,ஆகத்து 12 ம் நாளன்று இவற்றினுள் புகுந்த முஷ்லிம் ஊர்காவல்படைக் கும்பல் ஒன்று 400க்கும் அதிகமான பொதுமக்களை சுட்டும் வெட்டியும் தாக்கினர். இவர்களில் பெண்கள், குழந்தைகள் உட்பட 55 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். அதிகமானோர் படுகாயமுற்றனர். அவ்வேளையில் கடத்தப்பட்டோர் பற்றி எவ்விதத் தகவலும் இல்லை.
1990, ஆகஷ்ட் மாதம் வரையும் அம்பாறை மாவட்ட தமிழர்களை பதம்பார்த்த இராணுவமும் முஷ்லிம் ஊர்காவல் படையினரும் அடுத்த கட்ட நடவடிக்கையாக மட்டக்களப்பு மாவட்டத்தை இலக்கு வைத்து படுகொலைகளை ஆரம்பித்தனர்.
1990, ஆகஷ்ட்,22,ல் சித்தாண்டி கிராமத்தில் சுற்றிவளைப்பு செய்து சுமார் 52, தமிழர்கள் கைது செய்யப்பட்டு கொண்டு சென்றனர் இன்றுவரை என்ன நடந்தது என்றே தெரியவில்லை.
அதுபோலவே கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலைகள் அல்லது வந்தாறுமூலை வளாகப் படுகொலைகள் என்பது 1990 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் நாள் இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தில் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தஞ்சமடைந்திருந்த தமிழ் அகதிகள் 158 பேர் இலங்கை இராணுவத்தினரால் சுற்றி வளைக்கப்பட்டுக் கைது செய்யப்பட்டுப் பின்னர் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வைக் குறிக்கும். அதே மாதம் 23 ஆம் நாள் மேலும் 16 பேர் கைது செய்யப்பட்டுக் கொண்டு செல்லப்பட்டனர். இலங்கை இராணுவத்தினரே இவர்களைக் கைது செய்ததாக நேரில் கண்ட சாட்சியங்கள் தெரிவிக்கின்றன.
அடுத்து 1990 செப்டம்பர் 09 அன்று மட்டக்களப்பு மாவட்டம் சத்துருக்கொண்டான் பகுதியில் தங்கியிருந்த 184 இலங்கைத் தமிழ் அகதிகள் இலங்கை அரச படைகளால் ஊர்காவல் படையினராலும் படுகொலை செய்யப்பட்ட கொடூரம் ஆகும்.இது தொடர்பாக இலங்கை அரசு இரு விசாரணைக் குழுக்களை அமைத்தும், எவரும் கைது செய்யப்படவில்லை வழமையாக காலம் கடத்தி மூடி மறைக்கப்பட்டது.
இச்சம்பவத்தை விசாரணை செய்த நீதிபதியின் அறிக்கைப்படி 27 வயதான மோகன சுந்தரி எனும் தாயும் அவரது 3 மாதக்குழந்தையும் படையினரால் „மண்ணா“ கத்திகளால் சாகும்வரை குத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டனர்.அத்தோடு 5 கைக்குழந்தைகள், 42 பத்துவயதுக்கு குறைவான சிறுவர்கள், 85 பெண்கள், 28 முதியவர்கள் இச்சம்பவத்தின் போது கொல்லப்பட்டுள்ளனர்.
இப்படுகொலைகள் குறித்து விசாரணை செய்ய இலங்கை அரசு சனாதிபதி ஆணைக்குழு ஒன்றை நியமித்திருந்தது. விசாரணை முடிவுகள் சட்டவிரோதக் கைது மற்றும் படுகொலைகள் இடம்பெற்றுள்ளதை உறுதிப்படுத்தியது. அத்துடன் இதில் சம்பந்தப்பட்டோரையும் அது இனக்கண்டிருந்தது, ஆனாலும் இது குறித்து மேலதிக விசாரணைகள் எதுவும் இடம்பெறவில்லை.
மேலும் 1990,செப்டம்பர்,21,ல் மட்டக்களப்பு மாவட்டம் புதுக்குடியிருப்பு கிராமத்திற்குள் நள்ளிரவில் உள்நுளைந்த முஷ்லிம் ஊர்காவல் படையினர் கண்ணுக்கு பட்டவர்களை எல்லாம் கடல்கரை பக்கமாக முந்திரி தோட்டத்தில் வைத்து ஆண் பெண்கள் என 17, பேரை வெட்டியும் சுட்டுக்கொன்றனர்.
இதேவேளை ஆகஸ்ட் 3, 1990ல் கிழக்கிலங்கையில் காத்தான்குடியில் ஆயுதக்குழுவினால் நடத்தப்பட்ட தாக்குதலைக் குறிக்கும். இத் தாக்குதல் ஒரே நேரத்தில் இரண்டு முஸ்லீம் பள்ளிவாசல்களில் நடத்தப்பட்டது. ஒன்று கிரவல் தெருவில் உள்ள பள்ளிவாசலும், மற்றொன்று உசைனியா பள்ளிவாசலும் தாக்குதலுக்குள்ளாயின.இதில் முஸ்லிம்கள் இரவுத்தொழுகை நடாத்திக்கொண்டிருக்கும் பொழுது நடத்தப்பட துப்பாக்கிப் பிரயோகத்தில் 25 குழந்தைகள் உட்பட 103 பேர் படுகொலை செய்யப்பட்டனர். அதேபோல் ஏறாவூரில் ஏறாவூர் நகரப்பகுதி, சுரட்டையன்குடா, புன்னைக்குடாவீதி, ஐயன்கேணி, சத்தாம் ஹுஸைன் கிராமம் உள்ளிட்ட இடங்களில் வீடுகளில் உறங்கிக் கொண்டிருந்தோர் மீது 1990ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குல்களில், சுமார் 121 பேர் கொல்லப்பட்டிருந்தனர். இத்தாக்குதலை தமிழீழ விடுதலைப் புலிகளே மேற்கொண்டனர்.என அப்போது கூறப்பட்டாலும் அதனை அவர்கள் எப்போதும் மறுத்தே வந்திருக்கின்றனர்.
இதன் எதிரொலி வடமாகாணத்திலும் இவ்வாறான சம்பவங்கள் நிகழலாம் என்ற நோக்கில் விடுதலைப்புலிகள் யாழ்ப்பாண முஷ்லிம்களை 1990 அக்டோபர் 30 இல் பாதுகாப்பாக வெளியேற்றினர்.வாகனங்களில் வந்திருந்த விடுதலைப் புலிகள் அனைத்து முஷ்லிம்களையும் யாழ்ப்பாணம் ஒசுமானியா கல்லூரியில் கூடும்படி கட்டளை இட்டனர். அங்கு கூடியிருந்தோரை வெளியேறும்படி உத்தரவிட்டனர்.
அதனால் வடமாகாணத்தில் யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு,கிளிநொச்சி, வவுனியா ஆகிய இடங்களில் அங்கிருந்தும் பாதுகாப்பாக வெளியேறி புத்தளத்தில் சென்று முஷ்லிம்மக்கள் வாழ்ந்தனர்.
இந்த சம்பவத்தை 2014, ல் தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம் ஏ.சுமந்திரன் மட்டக்களப்பு வந்தாறுமூலையில் இடம்பெற்ற பொதுக்கூட்டமொன்றில் யாழ்ப்பாண முஷ்லிம்மக்களை விடுதலை புலிகள் வெளியேற்றியதை இனச்சுத்திகரிப்பு என கூறி கண்டித்தார்.
இந்த கருத்தை ஏற்கமுடியாது என மறுநாள் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினராக இருந்த பா.அரியநேத்திரன் முஷ்லிம்மக்களை பாதுகாப்பாக வெளியேற்றிய விடயம் இனபாதுகாப்பு எனவும் இனசுத்திகரிப்பு என சுமந்திரன் கூறியது தவறு எனவும் ஊடகங்களில் அறிக்கை விட்டிருந்தார்.
உண்மையில் பிட்டும் தேங்காய் பூவுமாக வர்ணிக்கப்பட்ட தமிழ் முஷ்லிம் மக்களின் உறவுமுறையை இலங்கை அரசாங்கத்தின் பிரித்தாளும் சதி வெற்றிகண்டது.
1990, ஜனாதிபதி ஆர். பிரமதாசாவால் ஏற்படுத்தப்பட்ட முஷ்லிம் தமிழ் மக்களின் குரோதம் அதற்கு பின்னர் ஜனாதிபதிகளாக இருந்தடி.விஜயதுங்கா,சந்திரிக்கா, மகிந்தராஷபக்ச, மைத்திரிபால சிறிசேனா, தற்போதய ஜனாதிபதி ரணில் ஆகியோரால் தொடர்ந்தும் பேணப்பட்டுகிறது.
இதன் தொடர்சியாகவே 2009, மே,18, ல் முள்ளிவாய்க்கால் மௌனமும், இலட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டும், முள்ளுக்கம்பி முகாம்களில் பல இலட்சம் தமிழர்கள் அகதியாக வவுனியாவில் தஞ்சம் அடைந்த போது தென்பகுதி மக்கள் பால்சோறும், கட்டச்சம்பலும் வீதிகளில் வழங்கி மகிழ்ச்சி கொண்டாட்டங்களை நடத்தியபோது வடக்கு கிழக்கில் உள்ள இஷ்லாம் மக்களும் காத்தான்குடி, ஏறாவூர்,ஓட்டமாவடி,கல்முனைகுடி, மருதமுனை, நிந்தவூர், அட்டப்பள்ளம், அக்கரைப்பற்று, மூதூர், கிண்ணியா, புத்தளம் மன்னார், வவுனியா எல்லாம் முஷ்லிம் மக்களில் பலர் பட்டாசி கொழுத்தி பேரீச்சம் பழம் வழங்கி தென்பகுதி சிங்க மக்களுடன் இணைந்து மகிழ்ச்சிகளை காட்டினர், ஆனால் அது தவறு என்பதை ஈஷ்டர் குண்டு தாக்குதல் 2019, ஏப்ரல்,21 ல் இடம்பெற்ற பின்னரே உணர்ந்தனர்.
இன்று 32, வருடங்களாக தமிழ் முஷ்லிம்மக்களின் அரசியல் சக்கதிகள் ஒன்றுபட்டு ஒரு குடையின் கீழ் ஒரு தீர்மானம் எடுக்கமுடியாமல் போனதற்கு அன்றய 1990, ல் ஜனாதிபதியாக இருந்த ஆர் .பிரமதாசாவின் பிரித்தாளும் தந்திரத்திற்கு கிடைத்த வெற்றி என்பதே உண்மை.