ஆற்றில் பெண்கள் குளிப்பதை வீடியோ எடுக்கும் பிள்ளையானின் சகாக்கள்
ஆற்றில் பெண்கள் குளிப்பதை , ட்ரான் மற்றும் சிசிரிவி கமராக்கள் மூலம் வீடியோ பதிவு செய்கிறார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனிடம் மக்கள் முறையிட்டுள்ளனர்.
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சின்ன உப்போடையில் உள்ள பொது நீரோடையை மறித்து மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் அமைச்சர் ஒருவரின் ஆதரவில் இடம்பெறும் மீன் வளர்ப்பு திட்டத்தினை இரா. சாணக்கியன் நேற்றைய தினம் பார்வையிட்டார்.
அதன் போது, பண்ணை அமைத்துள்ளவர்கள் ட்ரான் மற்றும் சிசிரிவி கமராக்கள் மூலம் அவ் ஊர் மக்கள் குளிப்பதை வீடியோ வேறு எடுக்கின்றனர் என்ற குற்றச்சாட்டுக்களும் மக்களால் முன்வைக்கப்பட்டது.
அதன் போது, பெண்கள் குளிக்கும் பகுதியில் கமராவை வைத்து பார்க்கும் அளவிற்கு மோசமான செயலை இப்போது தான் முதல் முதலாக பார்க்கிறேன் என சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
பண்ணையாளர் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் , மாநகர சபை உறுப்பினர் மற்றும் சுற்று சூழல் அதிகாரிகளுடன் உரையாடிய போது இந்த ஆற்றில் மீன் வளர்ப்பதற்கு ஒருவர் அனுமதி எடுத்துள்ளதுடன் அவர் கனடாவிற்கு சென்றுள்ளார் எனவும் , அவரது பண்ணையை ஊரில் உள்ள ஒரு நபரே பொறுப்பாக பார்த்துக்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டது.
குறித்த நன்னீர் மீன் திட்டத்தை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முக்கியஸ்தர்கள் முன்னெடுத்து வருவதாகவும் அப்பிரதேசத்தில் அந்த வாவியை நம்பி வயிற்றுப் பசிக்காக இறால், மீன்களைப் பிடிப்பவர்களை அந்த நபர்களால் தாக்கப்படுவதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக அந்த வாவியில் மீன்பிடித்த ஒருவரை தாக்கி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவர் வீடு திரும்பி உள்ள வேலையில் அவ்விடத்தில் யாரும் மீன் பிடிக்ககூடாது என்று பதாதை இடப்பட்டு இருப்பதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது எனவும் மக்கள் தெரிவித்தனர்.