செப்பியன்பற்றில் விடாது காணி அளவீடு!!
ஒருபுறம் தமிழ் மக்களது பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் அரச தரப்பில் பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட கடந்த ஞாயிறு (23) தொடக்கம் தொடர்ந்து நாலாவது நாளாக இன்றும் (27) காணி அளவீட்டு முயற்சிகள் வடமராட்சி கிழக்கில் இடம்பெற்றுள்ளது.
வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று வடக்கு பகுதியைச் சேர்ந்த தனியாருக்குச் சொந்தமான ஏறத்தாழ 15 பேர்ச் (ஒன்றரை பரப்பு) காணியை இலங்கை கடற்படையினருக்கு நிரந்தரமாக சுவீகரிக்கும் நோக்கில் அளவீட்டு பணிகள் முன்னெடுக்கப்படவிருந்தது.
எனினும் இன்றும் மக்கள் முன்னெடுத்த எதிர்ப்பு நடவடிக்கைகளால் காணி அளவீட்டுத் திட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.
அளவீட்டு முயற்சிக்கு எதிராக பிரதேச மக்களுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றிருந்தனர்.
இதனிடையே நாளை வெள்ளிக்கிழமையும் கடற்படைக்கான காணி அளவீட்டு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் எதிராக மக்கள் போராட்டங்களும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.