முடக்க முற்படுகின்றனர்:சிவி
தமிழ் மக்களின் பிரச்சினைக்கான முறையான தீர்வு சுய நிர்ணய உரிமையே என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
13வது திருத்தச்சட்டம் தமிழ் மக்களுடைய பிரச்சினைக்கு தீர்வாகாது. அதனை நாட்டின் ஜனாதிபதி நடைமுறை படுத்த நினைத்தால் அது தற்காலிக தீர்வே அன்றி நிரந்தரமானது அல்லவெனவும் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
13இன் கீழ் ஏழு மாகாணங்களில் பெரும்பான்மையாக உள்ள சிங்களவர்கள் இரண்டு மாகாணங்களில் பெரும்பான்மையாக உள்ள தமிழர்களை அடிமையாக நடத்துகின்றனர்.
தெற்கிலே ஒரு இந்து ஆலயத்தை தொல்பொருள் திணைக்களத்தினர் கண்டால் அதை கோவிலாக வடிவமைப்பார்களா? அப்படி இருக்க வடகிழக்கில் வந்து விகாரைகளை அமைப்பதற்கான காரணம் என்ன? எனவும் சி.வி.விக்கினேஸவரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழர் பகுதிகளில் சிங்கள ஆதிக்கத்தை நிலை நிறுத்தவே அவ்வாறான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
வெறுமனே சிங்களவர்கள் என்ற காரணத்திற்காக மாத்திரம் தமிழர் பகுதிகளில் உள்ள பௌத்த அடையாளங்களை உரிமைக் கோருவது முறையற்றது.
நாட்டில் பிரச்சினைகள் ஏற்படும் போது அதை தடுப்பதற்கு பல்வேறு சட்டங்கள் காணப்படுகின்றன.அவர்கள் பயங்கரவாத தடை சட்டம் என்ற ஒன்றை கொண்டுவந்ததன் நோக்கம் அவரது எதிரிகளை அடைத்துவைத்து அவர்களை அடக்குவதற்காகவே எனவும் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.