யாழில் மற்றுமொரு விகாரை – இரகசிய திட்டம் அம்பலம்..
சுன்னாகம், கந்தரோடையில் தமிழ் – பௌத்த எச்சங்கள் காணப்படும் இடத்துக்கு அருகில் தனியார் ஒருவரின் காணியில் விகாரை அமைப்பதற்கான விண்ணப்பத்தை தென்னிலங்கையைச் சேர்ந்த பிக்கு ஒருவர் தொல்லியல் திணைக்களத்துக்கு சமர்ப்பித்துள்ளார்.
இதற்கான அனுமதிகளை வழங்குவதற்கு தொல்லியல் திணைக்களமும் இணங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் குறித்த விகாரைக்கான கட்டுமானப் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளன.
விகாரை அமைப்பதற்கான நடவடிக்கை
சுன்னாகம், கந்தரோடையில் தமிழ் – பௌத்த எச்சங்கள் காணப்படுகின்றன. இவை தொல்லியல்திணைக்களத்தின் கண்காணிப்பில் உள்ளன.
இந்த நிலையில் இதன் எல்லையிலுள்ள தமிழர் ஒருவரின் 6 பரப்புக் காணியை தென்னிலங்கையைச் சேர்ந்த பிக்கு ஒருவர் ஒரு வருடத்துக்கு முன்னர் வாங்கியுள்ளார். அந்தக் காணியில் விகாரை அமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.
அருகில் தொல்லியல் திணைக்களத்துக்குச் சொந்தமான எச்சங்கள் காணப்படுவதால், தனியார் காணியில் விகாரை அமைப்பது ஏதாவதுவகையில் இடையூறாகுமா என்றும் விகாரையை அமைக்க முடியுமா எனவும் கேட்டு தொல்லியல் திணைக்களத்துக்கு ஒரு மாதத்துக்கு முன்னர் கடிதம் அனுப்பியுள்ளார்.
அவரது கடிதத்தை சாதகமாக பரிசீலித்துள்ள தொல்லியல் திணைக்களம் விரைவில் விகாரையை அமைக்க அன மதி வழங்கவுள்ளதாக அறியமுடிகின்றது. இதனையடுத்து கட்டுமானப் பணிகளை விரைந்து தொடங்குவதற்கான ஏற்பாடுகளையும் பிக்கு முன்னெடுத்து வருகின்றார்.
தமிழர் தாயகத்தில் தொடர்ச்சியாக மத ரீதியான ஆக்கிரமிப்புக்கள் முடுக்கிவிடப்பட்டுள்ள சூழலில் இவ்வாறானதொரு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.