November 21, 2024

தமிழர் எம் மரபுரிமைகள் பாதுகாப்போம்

தமிழர் எம் மரபுரிமைகள் பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் அடையாள உண்ணாநோன்பு போராட்டத்திற்கும், தமிழர் தாயகம் தழுவிய  கையெழுத்துப் போராட்டத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் நல்லை ஆதீன முன்றலில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பால் போராட்டம் நடத்தப்படவுள்ளது. 

அது தொடர்பில் ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிக்கையில்,

1.அழிக்கப்பட்ட வெடுக்குநாறி மலை ஆதி சிவன் கோவில் சிவலிங்கம், தெய்வ சிலைகள் உடனடியாக மீள் நிர்மாணம் செய்யப்பட வேண்டும். நீதியான விசாரணை துரிதப்படுத்தப்பட்டு குற்றவாளிகள் கண்டறியப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.

2.குருந்தூர் மலை, கன்னியா வெந்நீரூற்று ஆதி சிவன் வழிபாட்டு உரிமைகள் உடனடியாக மீள வழங்கப்படுவதுடன் புதிய பௌத்த கட்டுமானம் மற்றும் பௌத்த தொல்லியல் புதிய வர்த்தமானி இரத்து நடைமுறையில் செயற்படுத்தப்பட வேண்டும்.

3.இன மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் தமிழர் தாயகத்தின் தொன்மங்களை, மரபுரிமைகளை மாற்றியமைக்கும் தொல்லியல் திணைக்களத்தின் அத்துமீறிய செயற்பாடுகள் அனைத்தும் முற்றாக நிறுத்தப்பட வேண்டும்.

4.மட்டு. மயிலத்தனை மடு மேய்ச்சல் தரையில் பெரும்பான்மை இன மக்களின் ஆக்கிரமிப்புக்கள் சகலதும் நிறுத்தப்பட்டு தமிழ் பண்ணையாளர்களின்  மரபுரிமையான மேய்ச்சலுக்கான வாழ்வுரிமை  உறுதிப்படுத்த வேண்டும்.

5.போருக்கு பிந்திய இன மதப்பரம்பலை மாற்றி அமைக்கும் திட்டமிட்ட பாரிய குடியேற்றம் உள்ளிட்ட செயற்பாடுகள் அனைத்தும் முற்றாக நிறுத்தப்பட வேண்டும்.

ஆகிய பிரதான கோரிக்கைகளை முன்வைத்து மாபெரும் அடையாள உண்ணாநோன்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

எம் மரபுரிமைகளை வென்றெடுக்க ஆன்மீகத் தலைவர்கள், ஆலய அறங்காவலர்கள், தமிழ் தேசிய அரசியல் கட்சிகள்,

சமுக மட்ட அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள், பல்கலைக்கழக சமூகம் ஆகியவற்றின் பங்குபற்றலுடன் முன்னெடுக்கப்படும் இந்த எழுச்சி போராட்டத்தின் மூலம் தமிழர் மரபுரிமைகளை வென்றெடுக்க தமிழ் மக்கள் திரண்டு வந்து பங்கெடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

கடந்த காலங்களில் பல கால அவகாசங்கள் வழங்கப்பட்டு , ஏமாற்றப்பட்ட நிலையில் உரிய தீர்வு உடனடியாக வழங்கப்படாவிடுத்து தொடர் போராட்டங்களை பல்வேறு பரிணாமங்களில் முன்னெடுக்கப்படும் என்பதை அரசுக்கும் சர்வதேசத்திற்கும் இச்சந்தர்ப்பத்தில் ஆழமாக வலியுறுத்தி நிற்கின்றோம் – என்றுள்ளது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert