கிழக்கில் இணைகின்றது தமிழ் தேசம்!
தமிழர் தாயகத்தை மீட்போம், சுயநிர்ணயத்தை காப்போம் எனும் கோங்களுடன் கடந்த 4ஆம் திகதி சுதந்திர தினத்தன்று யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்றலில் இருந்து கிழக்கு நோக்கி ஆரம்பமான உரிமைக்கான பேரணி திருகோணமலையை சென்றடைந்துள்ளது.
நாளை திருகோணமலையிலிருந்து பெருந்திரளான மக்களுடன் பயணிக்கும் பேரணி மட்டக்களப்பினை சென்றடையவுள்ளது.
இன்று திருகோணமலையை சென்றடைந்த பேரணிக்கு அங்கு கூடியிருந்த தமிழ் உணர்வாளர்கள் உற்சாக வரவேற்பளித்து வரவேற்றதோடு, கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களும் எழுச்சிப் பேரணியுடன் இணைந்துகொண்டுள்ளனர்.
இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்தை தமிழரின் கருப்பு தினமாக பிரகடனப்படுத்தி முன்னெடுக்கப்பட்டு வரும் பேரணி தற்போது, கிழக்கு பல்கலைக்கழக வளாக மாணவர்களின் இணைவுடன் திருமலை நகரை சென்றடைந்துள்ளது.
இதனிடையே வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய உரிமைக்கான போராட்டத்தில் கிழக்கு மக்களும் அணி திரள வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு கிழக்கு பல்கலைகழக மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, வடக்கிலிருந்து கிழக்கு நோக்கி வரும் மாபெரும் பேரணியானது நாளை செவ்வாய்க்கிழமை காலை 9 மணி அளவில் மட்டக்களப்பு வெருகலை சென்றடையவுள்ளது.
வெருகல் பேரணியுடன், மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து செல்வோர் மு.ப.10, மணிக்கு கதிரவெளியில் இணைந்து கொள்வார்கள். அதேவேளை அம்பாறை மாவட்டத்தில் இருந்து வருகை தரும் மற்றுமொரு பேரணி களுதாவளை பிள்ளையார் கோயில் சந்தியில் சந்திப்பதோடு, அங்கிருந்து மட்டக்களப்பு நகரை நோக்கி பேரணி சென்று பிற்பகல் மட்டக்களப்பு காந்தி பூங்காவை சென்றடையுமென ஏற்பாட்டாளர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.