பிள்ளையான் விடுத்துள்ள சவால் – முறியடிக்க அணிதிரள அழைப்பு
நாளை எமது வெற்றியை சரித்திரம் சொல்லும் இப்படை தோற்கின் எப்படை வெல்லும். என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப நாளை மட்டக்களப்பு மாவட்டத்தை நோக்கி வரும் பேரணி உலகிற்கு ஒரு சரித்திரத்தை பதிவு செய்ய உள்ளது என கூறப்படும் நிலையில்.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியத்திற்கு எதிரான கட்சியும் வடகிழக்கு இணைப்பை எதிர்க்கும் கட்சியுமான பிள்ளையானின் கட்சி நாளை மட்டக்களப்பில் நடைபெறும் தமிழ் தேசியத்திற்கு ஆதரவான போராட்டத்தில் மட்டக்களப்பு மக்கள் அதிகளவில் கலந்து கொள்ள மாட்டார்கள் என சவால் விடுத்துள்ளது.
மட்டக்களப்பு மக்களின் நிலைப்பாடு
அத்தோடு மட்டக்களப்பு மாவட்ட மக்கள் தமிழ் தேசியத்தை நிராகரிக்க தொடங்கி விட்டார்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரனும் சாணக்கியனும் சுதந்திர தினம் அன்று நடாத்திய போராட்டத்திற்கு பொதுமக்கள் ஆதரவு கிடைக்கவில்லை கட்சியின் உள்ளூராட்சி சபை வேட்பாளர்களை தவிர பொதுமக்கள் அதிகளவில் கலந்து கொள்ளவில்லை குறிப்பாக மட்டக்களப்பு மாவட்ட பொதுமக்கள் அதில் கலந்து கொள்ளவில்லை என கூறியுள்ளார்.
இந் நிலையில் கிழக்கில் தமிழ் தேசியத்திற்கான ஆதரவு, வடகிழக்கு மாகாணங்களின் இணைப்புக்கான ஆதரவு என்பவற்றுக்கான ஆதரவு குறித்து பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியுள்ளது.
தமிழ் தேசியத்திற்கான ஆதரவு மட்டக்களப்பு மாவட்டத்தில் குறைந்து வருகிறதா
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மிகப் பெரிய தியாகங்களை செய்து வீரம் விளை நிலம் என்ற போற்றுதற்குரிய மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் இன்றுவரை திகழ்கிறது. „எங்கும் செல்வோம் எதிலும் வெல்வோம்“ என்ற வெற்றிக் கோசத்துடன் விடுதலை வரலாற்றில் பல வெற்றிகளை குவித்த மட்டக்களப்பு மாவட்டம் ஒரு போதும் தமிழ் தேசியத்தில் இருந்து விலகியது கிடையாது.
தமிழர்களின் உரிமைப் போராட்டம் வீழ்ச்சி பெற்ற போதெல்லாம் அது மீண்டும் கிழக்கு மாகாணத்தில் இருந்தே உயிர்ப்பு பெற்றது என்பது வரலாறு. அந்த வகையில் நாளைய தினம் தியாக தீபம் திலீபனின் மண்ணில் இருந்து அன்னை பூபதியின் மண்ணிற்கு வரும் வடக்கில் இருந்து கிழக்கை நோக்கிய மக்கள் எழுச்சி பேரணி மற்றும் பொதுக்கூட்டம் தமிழ் தேசியத்தின் வெற்றியை பறைசாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சவால்களை உடைத்தெறிய அணிதிரள அழைப்பு
தமிழ் தேசியத்திற்கு எதிரான கட்சிகளால் நாளை தமிழ் தேசிய ஒற்றுமைக்கு விடுக்கப்பட்டுள்ள சவால்கள் மற்றும் தடைகளை எல்லாம் உடைத்தெறிந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் மீண்டும் ஒரு முறை தமிழ் தேசியத்தை எழுச்சி பெறச் செய்ய வேண்டும் என தமிழ் தேசிய உணர்வார்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
எனவே தமிழ் தேசியத்திற்கு எதிராக விடுக்கப்பட்டுள்ள சவாலை ஏற்று சிவில் சமூக அமைப்புகள், தமிழ் தேசிய கட்சிகள், தமிழ் தேசிய உணர்வார்கள் என அனைவரும் ஓரணியில் திரண்டு வருமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.