September 19, 2024

கிருசாந்தியின் 28 ஆவது ஆண்டு நினைவேந்தல்

 யாழ்ப்பாணம் செம்மணிப் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்குளி மாணவி குமாரசாமி கிருசாந்தியின் 28 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்றைய தினம் சனிக்கிழமை மாலை செம்மணி பகுதியில் இடம்பெற்றது.

இதன்போது செம்மணிப் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட, அங்கு புதைக்கப்பட்ட ஏனையவர்களும் நினைவு கூரப்பட்டு, அவர்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

செம்மணிப் படுகொலை நினைவேந்தல் பேரவையின் தலைவர் கிஷோர் தலைமையில், நடைபெற்ற நினைவேந்தலில் சாவகச்சேரி பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளர் மயூரன் உள்ளிட்டவர்கள்  கலந்து கொண்டனர்.

1996 ஆம் ஆண்டு செம்டம்பர் மாதம் 7ஆம் திகதி 18 வயதுடைய யாழ்ப்பாணம் சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவி கிருஷாந்தி வீதியால் சென்று கொண்டிருந்த போது, செம்மணி பகுதியில் இராணுவத்தினரால் வழிமறித்து பாலியல் வன்கொடுமைக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

கிருஷாந்தியை, செம்மணி இராணுவ முகாமில் தடுத்து வைத்திருந்ததை பிரதேச மக்கள் அவதானித்ததையடுத்து மாணவியின் தாயாரிடம் கூறியுள்ளனர்.

இதனையடுத்து, மாணவியின் தாயாரான ஆசிரியை குமாரசாமி இராசம்மா, மாணவியின் சகோதரன், குமாரசாமி பிரணவன் மற்றும் மாணவியின் வீட்டுக்கு அயல் வீட்டில் வசிக்கும் தென்மராட்சி பல நோக்கு கூட்டுறவு சங்கத்தில் உதவியாளராக கடமையாற்றிய சிதம்பரம் கிருபாமூர்த்தி ஆகியோர் மாணவியை தேடி சென்று செம்மணி இராணுவ முகாமில் விசாரித்துள்ளனர்.

அதனையடுத்து மாணவியைத் தேடிச் சென்ற மூவரையும் இராணுவத்தினர் படுகொலை செய்திருந்தனர். 

அன்றைய தினம் நள்ளிரவு படுகொலை செய்யப்பட்ட நால்வரின் உடல்கள் செம்மணி பகுதியில் உள்ள வயல் வெளியில் புதைத்தனர். 

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert