April 30, 2024

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு எதிராக முறைப்பாடு

யாழ்ப்பாணத்தில் இருந்து புலம்பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வசிக்கும் பெண்ணை திருமணம் செய்வதாக கூறி சுமார் 50 இலட்ச ரூபாயை மோசடி செய்ததாக பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் மீது முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண்ணொருவர் புலம்பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வசித்து வருகின்றார். அவருக்கு திருமணமாகி பிள்ளைகள் உள்ள நிலையில் சுவிஸ் நாட்டில் கணவனை பிரிந்து பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகின்றார். 

இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் குறித்த பெண் யாழ்ப்பாணம் வந்திருந்த போது , பெண்ணின் பூர்வீக சொத்துக்கள் தொடர்பில் ஏற்பட்ட முரண்பாடுகள் தொடர்பில் பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்ய சென்று இருந்தார். 

முறைப்பாடு செய்ய சென்ற நேரத்தில் பொலிஸ் நிலையத்தில் கடமையில் இருந்த தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

அந்த பழக்கம் பெண் வெளிநாடு சென்ற பின்னரும் தொடர்ந்து உள்ளது. ஒரு கட்டத்தில் அது காதலாக மலர்ந்துள்ளது. அதனை அடுத்து சுவிஸ் நாட்டு பெண் , இங்குள்ள பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு பணம் , நகை என்பவற்றுடன் அன்பளிப்பு பொருட்கள் என பலவற்றை வழங்கி வந்துள்ளார். 

ஒரு கட்டத்தில் பொலிஸ் உத்தியோகஸ்தரை சுவிஸ் நாட்டிற்கு எடுப்பதற்கான முயற்சிகளையும் அப்பெண் மேற்கொண்டுள்ளார். அதற்கு பொலிஸ் உத்தியோகஸ்தர் மறுப்பு தெரிவித்து , தான் நாட்டை விட்டு வர மாட்டேன் என கூறியுள்ளார். 

அதனால் அப்பெண் மீண்டும் யாழ்ப்பாணம் வந்து தன்னை திருமணம் செய்யுமாறு வற்புறுத்திய வேளை , அதற்கு அவர் உடன்படாத நிலையில் , அது தொடர்பில் பொலிஸ் உயர் அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளார். 

அதனை அடுத்து , இப்பெண்ணிடம் இருந்து பெற்றுக்கொண்ட ஒரு தொகை நகை , பணம் என்பவற்றை மீள அளித்துள்ளார். மிகுதியை சிறு கால இடைவெளியில் மீள கையளிப்பதாக உறுதி அளித்துள்ளார். 

அதன் பிரகாரம் உரிய காலத்தில் மிகுதி பணம் நகையை மீள கையளிக்காததால் , அப்பெண் குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளார். 

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert