September 9, 2024

தேர்தலில் ரணில் செய்யும் சூழ்ச்சி! வீடு செல்ல நேரிடும் என எச்சரிக்கும் அனுர

இலங்கை அதிபர் தேர்தல் மற்றும் பொதுத்தேர்தலை உரிய காலத்தில் நடத்தாவிட்டால் அதன் விளைவு பாரதூரமானதாக அமையும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

குருநாகல் பகுதியில் நேற்றையதினம் (18) இடம்பெற்ற அரசியல் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“2020 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத்தேர்தலில் குருநாகல் மாவட்ட மக்கள் மகிந்த ராஜபக்சவுக்கு 5 இலட்சத்துக்கும் அதிகமான விருப்பு வாக்குகளை வழங்கினார்கள்.

இதனால் என்ன பயன் கிடைக்கப் பெற்றது என்பதை குருநாகல் மாவட்ட மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.பொதுஜன பெரமுனவுக்கு மக்கள் வழங்கிய மக்களாணை இன்று முழுமையாக இல்லாதொழிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தனி ஆசனத்துடன் நாடாளுமன்றத்துக்கு வந்தார். நெருக்கடியான நிலையில் அரசாங்கத்தை பொறுப்பேற்றார் என்று பொதுஜன பெரமுனவினர் தற்போது புகழ்பாடுகிறார்கள்.

மூன்று நாட்களுக்கு பின்னர் பதிலளிப்பதாக அவர் குறிப்பிட்டார். மூன்று நாட்கள் கூட நெருக்கடியை சமாளிக்க முடியாத நிலையில் கோட்டாபய ராஜபக்ச, ரணில் விக்ரமசிங்கவுக்கு அழைப்பு விடுத்தார் அவர் எவ்வித நிபந்தனைகளும் இல்லாமல் பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டார்.

2020 ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் பிரசாரங்களில் ‚மத்திய வங்கியின் பிரதான சூத்திரதாரியான ரணிலை சிறைக்கு அனுப்புவோம்‘ என்பது பொதுஜன பெரமுனவின் பிரதான அரசியல் வாக்குறுதியாக அமைந்தது. ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராகவே 2019 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலிலும், 2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலிலும் மக்கள் ராஜபக்சர்களுக்கு ஆணை வழங்கினார்கள்.

ஆகவே தனக்கு எதிரான மக்களாணையில் ஆதிக்கம் செலுத்துவதையிட்டு அதிபர் ரணில் விக்ரமசிங்க வெட்கப்பட வேண்டும். ராஜபக்சர்களின் நம்பிக்கையான பாதுகாவலன் ரணில் விக்ரமசிங்க என்பதால் பொதுஜன பெரமுன ரணில் விக்ரமசிங்கவை அதிபராக தெரிவு செய்தது.

அதிபர் தேர்தல்

அரசியலமைப்பின் பிரகாரம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் அல்லது ஒக்டோபர் மாதமளவில் அதிபர் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதிபர் தேர்தல் நெருங்குகின்ற நிலையில் தான் நிறைவேற்று அதிகாரமிக்க அதிபர் முறைமை என்பதொன்று நாட்டில் நடைமுறையில் உள்ளது என்பது அதிபருக்கு நினைவுக்கு வந்துள்ளது.

நிறைவேற்று அதிகாரமுள்ள அதிபர் முறைமை தேவையா, இல்லையா என்பதை நாட்டு மக்களே தீர்மானிக்க வேண்டும். மக்களாணை இல்லாத இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசிங்கவால் தீர்மானிக்க முடியாது.

அதிபர் தேர்தலை பிற்போட்டு தனது பதவி காலத்தை நீடித்துக் கொள்ள அதிபர் முயற்சித்தால் பதவி காலம் முடிவடைவதற்கு முன்னர் அவர் வீடு செல்ல நேரிடும். அதிபர் மற்றும் பொதுத்தேர்தலை உரிய காலத்தில் நடத்தாவிடின் அதன் விளைவு பாரதூரமானதாக அமையும்” என தெரிவித்தார்.

2022 ஆம் ஆண்டு மார்ச் மாதமளவில் அப்போதைய பிரதமர் மகிந்த ராஜபக்ச உட்பட அமைச்சரவை பதவி விலகியதை தொடர்ந்து பிரதமர் பதவியை ஏற்குமாறு கோட்டபய ராஜபக்ச எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு அழைப்பு விடுத்தார். அவர் அதனை ஏற்கவில்லை. அதன் பின்னர் கோட்டபய ராஜபக்ச,சரத் பொன்சேகாவிற்கு அழைப்பு விடுத்தார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert