மக்களின் உயிர் பிரிந்தாலும் தாம் வாழ வேண்டும் என நினைக்கின்றது அரசு: கடுமையாகச் சாடும் ரணில்

சர்வதேச நாடுகள் தமது மக்களின் நலன்களை முன்நிறுத்தி செயற்பட்டுக்கொண்டிருக்கும் தருணத்தில், எமது அரசு மக்களின் உயிர் பிரிந்தாலும் தாம் வாழ வேண்டும் என்ற எண்ணத்துடன் செயற்பட்டுக் கொண்டிருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு அண்மையில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

தற்போதைய அரசால் பொருளாதாரப் போரில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது. சுற்றுலாத்துறையையும், ஏற்றுமதியையும் அரசு முழுமையாக மறந்து போயிருக்கின்றது.

அரச சேவையாளர்களுக்கான ஊதியத்தில் குறைப்புச் செய்யப்பட்டிருக்கின்றது.

கொரோனா வைரஸ் பரவலினால் முழு உலகமுமே ஒரு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்திருக்கின்றது.

ஏனைய சர்வதேச நாடுகள் அந்த நெருக்கடியிலிருந்து தமது பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கும், அதுவரையில் மக்களுக்கு அவசியமான நிவாரணங்களைப் பெற்றுக்கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுத்து வருகின்றது.

ஆனால், எமது நாட்டின் அரசு என்ன செய்திருக்கின்றது? அவுஸ்திரேலிய அரசு அனைத்து குடும்பங்களுக்கும் நிவாரணமாக 3 ஆயிரம் டொலர்களை வழங்கியது.

மக்கள் குறித்து சிந்திக்கின்ற, அவர்களுடைய நலன்களை முன்நிறுத்துகின்ற அரசு இவ்வாறுதான் செயற்படும்.

ஆனால், எமது நாட்டில் நீர் மற்றும் மின்சார கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டது. மக்களின் உயிர் பிரிந்தாலும் தாம் வாழ வேண்டும் என்றே அரசு நினைக்கின்றது என்று கூறியுள்ளார்.