„எங்களைப் பார்க்க எப்போ கோவை வரீங்க?”-முதியவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகர் மோகன்லால்

தனது பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் மோகன்லால் கோவையில் உள்ள முதியோர் இல்லத்தில் உள்ள முதியவர்களுடன் வீடியோ காலில் பேசினார்.

கேரள திரையுலகத்தின் சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் நடிகர் மோகன்லால் தமிழக மக்களிடமும் நல்ல பரிச்சயம். இந்த நிலையில், மோகன்லால் தனது 60-வது பிறந்தநாளை நேற்று கொண்டாடி முடித்திருக்கிறார். பிறந்தநாளை முன்னிட்டு, த்ரிஷ்யம் 2 பட அறிவிப்பை வெளியிட்டார் மோகன்லால். ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடித்த த்ரிஷ்யம் படம் பட்டிதொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பியது. தமிழில் கமல்ஹாசன் கௌதமி நடிப்பில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக்கும் ஆனது.

மோகன்லால்

த்ரிஷ்யம் 2 அறிவிப்பால் கேரள மக்கள் மகிழ்ச்சியில் இருக்கும் அதேநேரத்தில், சத்தமே இல்லாமல் மோகன்லால் இன்னொரு விஷயத்தையும் செய்துள்ளார். ஆனால், அது கேரளாவில் இல்லை. நம்முடைய தமிழகத்தில்தான் அந்தச் சம்பவம் நடந்தது.

மோகன்லால் தனது பெற்றோர்களின் நினைவாக விஷ்வ சாந்தி என்ற அறக்கட்டளையை நடத்தி வருகிறார். இந்த அறக்கட்டளையின் மூலமாக கேரளா மட்டுமன்றி, தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களிலும் அவர் நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார். இந்த நிலையில், கோவை ராமநாதபுரம் பகுதியில் அமைந்துள்ள ஒரு முதியோர் இல்லத்தில் 60-க்கும் மேற்பட்ட முதியவர்கள் வசித்து வருகின்றனர்.

மோகன்லால்

மோகன்லால்

மோகன்லாலின் பிறந்தநாளை முன்னிட்டு, அந்த முதியோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டதோடு, முகக்கவசங்கள், சானிடைஸர்கள் வழங்கப்பட்டன. மேலும், கேக்கும் வெட்டப்பட்டது. அப்போது, திடீரென வீடியோ கால் மூலம் வந்து முதியவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார் மோகன்லால்.

தன் மனைவி சுஜித்ராவுடன் முதியவர்களுடன் பேசிய மோகன்லால், „எப்படி இருக்கீங்க..? உங்களோட பிறந்தநாள் கொண்டாடுவதுதான் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய ஆசிர்வாதம். உங்களுக்கு என்ன உதவி வேண்டுமானாலும் கேளுங்கள். உங்களுக்குத் தேவையான அனைத்து விஷயங்களையும் செய்து கொடுக்க நான் கடமைப்பட்டுள்ளேன்” என்று கூறியுள்ளார்.

மோகன்லால்

மோகன்லால்

அப்போது சில முதியவர்கள், „எங்களை எல்லாம் பார்க்க எப்போ கோவை வரீங்க?” என்று கேட்க, „சீக்கிரமே வருகிறேன்” என்று மோகன்லால் பதிலளித்தார். இதுகுறித்து மோகன்லால் நண்பர் அனூப், „லால் சாருக்கு அப்பா, அம்மா மீது பாசம் அதிகம். அதிலும், தாய்ப்பாசம் ரொம்பவே அதிகம்.

அதனாலேயே, எல்லா தாய்மார்களிடமும் அன்பாகப் பேசுவார். இப்போதுகூட வீடியோ காலில் பேசும்போது, இங்குள்ள முதியவர்களை அம்மா என்றுதான் அழைத்தார். அவர் பேசியது இங்கிருக்கும் முதியவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறது. அவர் ஏற்கெனவே பத்து லட்சம் ரூபாய் மதிப்பிலான `என்-95′ முகக்கவசங்கள் மற்றும் பி.பி.இ கிட்டுகளை கோவைக்கு வழங்கியிருந்தார்.

மோகன்லால்

மோகன்லால்

கேரளா, தமிழகம், மஹாராஷ்டிரா உட்பட பல்வேறு மாநிலங்களில் ரூ.3 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களைச் செய்திருக்கிறார். தொடர்ந்து பல உதவிகளைச் செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்” என்றார்.