Juni 14, 2024

கவலைப்படுகின்றார் சங்கரி?

முள்ளிவாய்க்கால் படுகொலையை எமது தமிழ் அரசியல் தலைவர்கள் நினைத்திருந்தால் தடுத்து நிறுத்தி இருக்கலாம். யாருக்கெல்லாம்
தடுக்கக்கூடிய வல்லமையும் வாய்ப்பும் இருந்ததோ, அவர்கள் அதை தடுத்து நிறுத்தாமல் வேடிக்கை பார்த்து விட்டு, அதே நபர்கள் இன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அஞ்சலிக்கு அறிக்கை விடுவது வேதனையைத்தருகின்றது” என, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
ஊடங்களுக்கு அவர் இன்று (20) அனுப்பியுள்ள அறிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
அவர் அனுப்பியுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “எமது விடுதலைப் போராட்டத்துக்காக தங்கள் உயிரை அர்பணித்து செயற்பட்ட  தலைவர்கள் மற்றும் பல்வேறு விடுதலைப்போராட்ட அமைப்புக்களின் தலைவர்கள், போராளிகள், இறுதியாக முள்ளிவாய்க்காலில் ஏதும் அறியா அப்பாவி பொதுமக்கள் என பல்லாயிரக்கணக்கானவர்கள் மரணித்துள்ளார்கள்.
எனவே இவர்கள் அத்தனைபேருக்குமான ஒரு நிகழ்வாகவே நாம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனுஷ்டிக்க வேண்டும். அதுவே ஒட்டுமொத்த தமிழினத்துக்கும் நாம் செலுத்தும் உண்மையான நன்றிக்கடனாகும்.
ஆயுதப்போராட்டம் ஆரம்பித்த காலத்தில் விடுதலை வேட்கையை நெஞ்சிலே சுமந்து கொண்டு, ஆயுதத்தை தோளிலே தாங்கிக் கொண்டு விடுதலைப் போராட்டத்திற்கு ஆயிரக்கணக்கான இளைஞர்கள் களத்தில் முகம் கொடுத்தார்கள்.
இதில் பல விடுதலை அமைப்புக்கள் உக்கிரமாக போராடி பல வெற்றிகளையும் பெற்றன. கால ஓட்டத்தில் பலமாக இருந்த போராட்ட அமைப்புகள் தங்களுக்குள் முரண்பட்டு தங்களுக்குள்ளேயே மோதிக்கொண்டார்கள்.
எதிரி எமது தமிழ் இளைஞர்களை அழித்ததிலும் பார்க்க, முரண்பாடுள்ள இயக்கங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி அதிகளவு இளைஞர்களை கொன்று குவித்தன.
இது தான் எமது போராட்டத்தின் தோல்விக்கும், முள்ளிவாய்க்கால் அவலத்துக்கும் காரணமாக அமைந்தது. பல ஆளுமைமிக்க தலைவர்கள், புத்திஜீவிகள், பல அறிஞர்கள் என நூற்றுக்கணக்கில் கொல்லப்பட்டார்கள்.
இந்த இரண்டு காரணங்களுமே எமது விடுதலைப் போராட்டத்தின் தோல்வியை தீர்மானித்தன. இதனை நன்கு ஆராய்ந்து உணர்ந்த படியால் தான் 2004ம் ஆண்டிலிருந்து நான், இறுதியாக நடந்த முள்ளிவாய்க்கால் அவலம் நடந்துவிடக்கூடாது என்பதற்காக, அல்லும் பகலும் பாடுபட்டேன்.
இதற்காக எனக்கு கிடைத்த அவமானங்களும், பட்டங்களும் ஏராளம் இருந்தும் இறுதிவரை முயற்சிகளை மேற்கொண்டேன். எஞ்சியிருந்த விடுதலைப் புலிகள் அமைப்பாவது விடுதலையை வென்றெடுக்க வேண்டும் என்ற நோக்கில், விடுதலைப் புலிகள் கடந்த கால கசப்பான, விரும்பத்தகாத முன் அனுபவங்களை பாடமாகக் கொண்டு செயல்பட வேண்டும் என்ற எண்ணத்தில், அவர்களுக்கு இடித்து உரைக்கவேண்டிய தேவை, தமிழ் மக்கள் சார்பில் எனக்கு இருந்தது.
அந்த கரடுமுரடான பாதையில் நான் பயணிக்க ஆரம்பித்த பொழுது, தமிழ் மக்களின் விடுதலையைப்பற்றி கொஞ்சமும் சிந்திக்காத புலிகளை உசுப்பேத்திக் கொண்டிருந்த ஒரு சில சுயநலவாதிகள் தங்கள் பதவி சுகத்துக்காக எனக்கு துரோகி பட்டம் வழங்கினார்கள்.
அவ்வாறு செயற்பட்டவர்கள் புலிகளும் தமிழ் மக்களும் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட பொழுது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று கூறிக்கொண்டு வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தார்கள். சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாட்டில் நீண்ட காலம் தங்கியிருந்தும் வேடிக்கை பார்த்தார்கள்.
2009ம் ஆண்டு யுத்தத்தில் முதல் முறையாக கிளிநொச்சி தோல்வியடைந்தவுடன், தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு மக்களை பாதுகாப்பதற்கு, நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தேன்.
அவர்கள் அதனை கண்டுகொள்ளவில்லை அதே போல அன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு, இனிமேல் ஒரு அப்பாவி உயிரும் கொல்லப்படக் கூடாது என்றும், ஒரு நட்பு நாட்டுடன் இராணுவ உதவியைப் பெற்று, அப்பாவி மக்களை பாதுகாக்கும் படியும் கேட்டுக்கொண்டேன்.
அவரும் அதற்கு செவிசாய்க்கவில்லை. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு இனிமேல் யுத்தத்தை வெல்லமுடியாது, மக்களை பாதுகாக்க வேண்டியது உங்கள் பொறுப்பு, அதற்கு ஏற்றவாறு ஒரு முடிவை மேற்கொள்ளுமாறு எடுத்துரைத்தேன். அவரும் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.
ஆனால், அவர் ஒரு போராளி என்பதால் ‚செய் அல்லது செத்துமடி‘ என்ற கொள்கையுடையவர். அவரிடம் அதனை எதிர்பார்க்க முடியாது.
இந்த சந்தர்ப்பத்தில் இந்திய வெளியுறவுத்துறை செயலர், கூட்டமைப்பை டெல்லிக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தார் அதனை கூட்டமைப்பு முட்டாள் தனமான நிபந்தனைகளை கூறி தட்டிக்கழித்தது.
இந்த சந்தர்ப்பத்திலும் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் வெளிநாட்டில் தான் இருந்தார்கள். அதன் பின்னர் பிரித்தானிய நாடாளுமன்றக்குழு இலங்கைக்கு வந்த பொழுது, அவர்களிடம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, இந்தியாவின் தேர்தலின் முடிவு தெரிவதற்கு முன் யுத்தக் களத்தில் மிகப்பெரிய அனர்த்தம் நடக்கப்போகின்றது என்று எடுத்துக் கூறியுள்ளார்கள்.
கூட்டமைப்புக்கு  அனர்த்தம் ஒன்று நடக்கப்போகின்றது என்று தெரிந்திருந்தும், அதனை தடுக்க முயற்சிக்காமல் கபடநாடகமாடியுள்ளது.
அதன் பின்னர் அவர்கள் தங்களுடைய தொலைபேசி தொடர்புகளையும் நிறுத்திவைத்துவிட்டார்கள். எனது கோரிக்கைக்கு உதவக்கூடிய வகையில், அன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சர்வகட்சி தலைவர்களுக்கான கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
அந்த கூட்டத்தில் கூட்டமைப்பு  தவிர்ந்த அனைத்துக் கட்சிகளும் பங்கேற்றன. அந்தக் கூட்டத்தில் ஜனாதிபதி இன்னும் 80,000 மக்கள் தான் வன்னியில் இருக்கின்றார்கள் என்று கூற, நான் இன்னும் மூன்று இலட்சத்து முப்பதாயிரம் மக்கள் இருக்கின்றார்கள், அவர்களை காப்பாற்றுமாறு கேட்டுக்கொண்ட போது, கடுமையான வாதப்பிரதிவாதங்களுக்கு மத்தியில் வேண்டாவெறுப்பாக, மூன்று இலட்சத்து முப்பதாயிரம் மக்களுக்கும் சாப்பாடு அனுப்புகிறோம் என்று அவருக்கு தெரிந்த தமிழில் கூறி எழுந்து சென்றார்.
அதில் வேடிக்கை என்னவென்றால் அங்கு வந்திருந்த ஏனைய தமிழ் கட்சிகள் எனக்கு சார்பாக குரல் கொடுக்க முன்வரவில்லை. அன்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அந்த கூட்டத்துக்கு வந்திருந்தால் யுத்தத்தை நிறுத்தும்படி கோரிக்கை விடுத்து, பலியான அனைவரையும் பாதுகாத்து, வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்தையும் இல்லாமல் செய்து, ஆயிரக்கணக்கான மக்களின் பட்டினிச்சாவையும் தடுத்திருக்கலாம்.
அப்போது சர்வதேச நாடுகளின் மத்தியஸ்த்தமும் நடந்துகொண்டிருந்த நேரம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருதடவை நாடாளுமன்றத்தில் நான் உரையாற்றும் பொழுது, பாலஸ்தீன விடுதலை இயக்கத்தலைவர் ‚யாசிர்அரபாத்‘ போன்று பிரபாகரன் உலகை வலம் வரும் காலம் வெகுவிரைவில் வரும் என்றும், ஆனையிறவை மீண்டும் கைப்பற்றுவது பகல் கனவு என்றும், 10 வருடமானாலும் பளையை மீண்டும் கைப்பற்ற முடியாது என்றும், 35,000 இராணுவ வீரர்களை காப்பாற்றித் தாருங்கள் என்று உலக நாடுகளை கெஞ்சும் நிலமை மீண்டும் வராது என்று நினைக்க வேண்டாம் என்று, பாதுகாப்பு அமைச்சரை பார்த்து நேருக்கு நேராக கேட்டவன் நான்.
இந்த சந்தர்ப்பத்தில் எனக்கருகில் இரா.சம்பந்தன் எனது பேச்சை உன்னிப்பாக கவனித்துக்கொண்டு இருந்தார். அன்றே அமைச்சர் சார்ந்த அரசு, நான் புலிகளுக்கு சார்பானவன் என்று தீர்மானித்துக்கொண்டது என்றே நான் நினைக்கின்றேன்.
ஆனால் நான் இரண்டு தரப்பினருக்குமிடையே உள்ள சரி பிழைகளை வெளிப்படையாகவே கூறிவந்தேன்.
அதன் பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் எனது சக நாடாளுமன்ற உறுப்பினர்கள் எனக்கு எதிராக செயற்படத் தொடங்கிவிட்டார்கள். இது அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு இவர்கள் அறிந்தோ அறியாமலோ துணைபோயுள்ளார்கள் என்றே எண்ணத்தோன்றுகிறது.
தமிழர் விடுதலைக் கூட்டணியில் இருந்து கொண்டே என்னைப்பற்றி நான் கூறாத தவறான தகவல்களை விடுதலைப் புலிகளுக்கு அடிக்கடி கூறி வந்துள்ளார்கள். அதன் விளைவால் புலிகள் தங்களின் எதிரியாக என்னைப்பார்க்க தொடங்கி விட்டார்கள்.
அரசாங்கம் எதிர்பார்த்த நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்றவாறு சரியான முறையில் காய்கள் நகர்த்தப்பட்டன. இது ‚இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பார் இலானும் கெடும்‘; என்ற வள்ளுவனின் குறளுக்கு அமைய விடுதலைப் புலிகளை சுற்றி துதிபாடும் சுயநலக்கும்பல் சூழ்ந்து கொண்டது. இந்தக் கும்பல்தான், புலிகளுக்கு அறிவுரை கூறி இடித்து உரைப்பவர்களை துரோகியாக காட்டிக்கொடுத்தது.
இந்தக் கும்பல் தான் முள்ளிவாய்கால் படுகொலையை வேடிக்கையும் பார்த்தது.
இந்தக் கும்பல் தான் புலிகளை அழித்துவிட்டேன் என்று கொக்கரித்த சரத் பொன்சேகாவை ஜனாதிபதி தேர்தலிலும் ஆதரித்தது.
இந்தக் கும்பல் தான் தற்போது முள்ளிவாய்கால் நினைவேந்தல் நிகழ்விவுக்கு ஆதரவு தேடுகின்றது.
என்னைப் பொருத்தளவில் 2004ம் ஆண்டு தொடக்கம் 2009ம் ஆண்டு வரை கூட்டமைப்பு  நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்த 22 பேரில் முல்லைத்தீவு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான கனகரத்தினம் மற்றும் தம்பி சிவாஜிலிங்கம் தவிர்ந்த ஏனையோர் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கு அஞ்சலி செலுத்த அருகதையற்றவர்கள்.
அவர்களுக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகள் பற்றி பேசுவதற்கு தகுதியும் தார்மீக பொறுப்பும் கிடையாது. விரும்பினால் அவர்களின் வழக்கமான பாணியில் விலகி நின்று வேடிக்கை பார்க்கலாம் இது அவர்களுக்கு கைவந்தகலை” என, வீ.ஆனந்தசங்கரி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.