Juni 12, 2024

காலி ஸ்டேடியம்… 5 சப்ஸ்டிட்யூட்… குட்டி செலிப்ரேஷன்…ஐபிஎல்-க்கு ஜெர்மென் லீக் சொல்லும் மெசேஜ்?

Erling Haaland

Erling Haaland ( AP )

நடப்பு சாம்பியன் பேயர்ன் மூனிச் 2-0 என யுனியோன் பெர்லின் அணியை வீழ்த்தி, புள்ளிப் பட்டியலில் 4 புள்ளி முன்னிலையைத் தக்கவைத்துக்கொண்டது.

ஐரோப்பிய கால்பந்தின் அடுத்த சென்சேஷன் எர்லிங் ஹாலண்ட் அடித்த கோலோடு ஆரம்பித்திருக்கிறது புண்டஸ்லிகாவின் கம்பேக். ரசிகர்கள் இல்லாமல் காலி மைதானங்களில்தான் போட்டிகள் அனைத்தும் நடத்தப்பட்டன. வழக்கமாக, டக் அவுட்டில் நெருக்கமாக அமர்ந்திருக்கும் சப்ஸ்டிட்யூட் வீரர்கள், கேலரிகளில் இடைவெளி விட்டு அமர்ந்திருந்தனர். கோல் அடிக்கப்பட்டபோது, மிகவும் நெருங்கி வராமல் ஒவ்வொருவராக வந்து முழங்கைகளால் ஹை-ஃபை கொடுத்துக்கொண்டனர். ஃபிஃபா முன்மொழிந்த 5 சப்ஸ்டிட்யூட் விதியும் அமலுக்கு வந்தது.

பொருஷியா டார்ட்மண்ட் vs ஷால்கே

ஜெர்மனியின் மிகப்பெரிய ரைவல்ரியான ரெவியர் டெர்பியோடு தொடங்கியது புண்டஸ்லிகா. கேப்டன் மார்கோ ரியூஸ், ஆக்செல் விட்செல், எம்ரே சேன் என மூன்று சீனியர் வீரர்கள் காயத்தால் அவதிப்பட, ஏற்கெனவே இளம் அணியான டார்ட்மண்ட், இன்னும் இளம் அணியாகக் களமிறங்கியது. பிரீமியர் லீகுக்குத் திரும்பப்போவதாகச் சொல்லப்படும் ஜேடன் சான்சோவை, பென்ச்சில் அமர்த்தினார் பயிற்சியாளர் ஃபாவ்ரே. உலகின் மிகச் சிறந்த கால்பந்து ரசிகர்களின் இருப்பிடமான சிக்னல் இடுனா பார்க் மைதானம் முழுதும் காலியாக இருக்க, ஒரு போட்டி நடந்ததைப் பார்க்க மிகவும் சங்கடமாகவே இருந்தது.

Borussia Dortmund

Borussia Dortmund
AP

ஹாலண்ட், தோர்கன் ஹசார்ட், ஜூலியன் பிராண்ட் மூவரும் அடங்கிய அந்த அணியின் முன்களம் பல வாய்ப்புகளை உருவாக்கிக்கொண்டிருந்தது. குறிப்பாக ஜூலியன் பிராண்ட் மிகச் சிறப்பாக ஆடினார். ஷால்கேவின் நடுகள வீரர்களுக்கும், டிஃபண்டர்களுக்கும் பெரும் தலைவலியாய் அமைந்தவர், நிறைய வாய்ப்புகளை உருவாக்கினார். அவர் கொடுத்த ஓர் அற்புதமான பாஸை, ஹசார்ட் பெனால்ட்டி ஏரியாவுக்குள் கிராஸ் செய்ய, அதை அற்புதமாக கோலாக்கினார் ஹாலண்ட். முதல் பாதி முடியும் நேரத்தில் ரஃபேல் குரேரோ கோலடிக் அசிஸ்ட் செய்த பிராண்ட், 48-வது நிமிடத்தில் தோர்கன் ஹசார்ட் கோலடிக்கு மற்றொரு அசிஸ்ட் கொடுத்தார்.

63-வது நிமிடத்தில் ஷால்கே பாக்ஸ் வரை மின்னலெனப் பாய்ந்த குரேரோ, ஹாலண்டுடன் 1-2 பாஸ் ஆடி ஓர் அட்டகாசமான கோலடித்தார். இதன்மூலம் 4-0 என வெற்றி பெற்று கம்பேக்கை அட்டகாசமாகத் தொடங்கியுள்ளது பி.வி.பி! அந்த அணியின் 19 வயது இளம் சென்சேஷன் எர்லிங் ஹாலண்ட், தன்னுடைய பத்தாவது (9 போட்டிகள்) புண்டஸ்லிகா கோலை இந்தப் போட்டியில் அடித்தார்.

Robert Lewondowski

Robert Lewondowski
AP

யுனியோன் பெர்லின் vs பேயர்ன் மூனிச்

நடப்பு சாம்பியன் பேயர்ன் மூனிச் 2-0 என யுனியோன் பெர்லின் அணியை வீழ்த்தி, புள்ளிப்பட்டியலில் 4 புள்ளி முன்னிலையைத் தக்கவைத்துக்கொண்டது. பெர்லினின் பெனால்டி பாக்ஸை அடிக்கடி முற்றுகையிட்ட பேயர்ன் வீரர்கள், டார்கெட்டைக் குறிவைப்பதில் மட்டும் சற்று கோட்டை விட்டனர். 18-வது நிமிடத்தில் தாமஸ் முல்லர் அடித்த கோல், ஆஃப் சைட் என மறுக்கப்பட்டது. செர்ஜ் நேப்ரியின் ஹெடர் கோல் நோக்கிச் சென்றுகொண்டிருக்க, அதைத் தேவையில்லாமல் ஹெட் செய்த முல்லர், ஒரு கோல் வாய்ப்பை வீணாக்கி பேயர்ன் ரசிகர்களின் கோபத்துக்கு ஆளானார். 40-வது நிமிடத்தில் லியான் கொரேட்ஸ்காவை, பெர்லின் டிஃபண்டர் சுபோடிச் பாக்ஸுக்குள் ஃபவுல் செய்ய, பேயர்னுக்கு பெனால்டி கிடைத்தது. அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, இந்த சீசனின் 26-வது கோலை அடித்தார் லெவண்டோஸ்கி!

80-வது நிமிடத்தில் பேயர்னுக்குக் கிடைத்த கார்னர் மூலம் இரண்டாவது கோல் விழுந்தது. கிம்மிச் எடுத்த கார்னரை, ஹெடர் மூலம் கோலாக்கினார் பிரான்ஸ் டிஃபண்டர் பெஞ்சமின் பவார்ட். மொத்தம் 13 ஷாட்கள் அடித்த பேயர்ன் அணி, இலக்கை நோக்கி 3 ஷாட்கள் மட்டுமே அடித்தது. தொடர்ந்து வாய்ப்புகளை உருவாக்கிக்கொண்டே இருந்தபோதும், ஃபினிஷிங்கில் மட்டும் சற்று தடுமாறியது ஜெர்மனியின் நடப்பு சாம்பியன்.

மற்ற போட்டிகளில், பொருஷியா மொன்சன்கிளாட்பேச் 3-1 என்ற கோல் கணக்கில் எய்ன்ட்ராக்ட் ஃப்ராங்ஃபர்ட் அணியை வீழ்த்தியது. அந்த வெற்றியின் மூலம் 52 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியது அந்த அணி. வோல்ஸ்பெர்க் 2-1 என ஆக்ஸ்பெர்க் அணியை விழ்த்தியது. ஹோஃபன்ஹெய்ம் அணி 0-3 என்ற கோல் கணக்கில் ஹெர்தா பெர்லினிடம் வீழ்ந்தது. மற்ற முன்னணி அணிகளெல்லாம் வெற்றியோடு சீசனைத் தொடர்ந்த நிலையில், ஆர்.பி.லீப்சிக் மட்டும் வெற்றி பெறத் தவறியது. ஃப்ரீபெர்க் அணியோடு மோதிய அந்த அணி, 1-1 எனப் போட்டியை டிரா செய்தது. 77-வது நிமிடத்தில் டென்மார்க் வீரர் போல்சன் அடித்த கோலால், தோல்வியைத் தவிர்த்த அந்த அணி, தொடர்ந்து மூன்று புண்டஸ்லிகா போட்டிகளில் வெற்றி பெறத் தவறியுள்ளது.

புண்டஸ்லிகா ஐபிஎல்-க்குச் சொல்லும் மெசேஜ் என்னவென்றால் பென்ச்சுக்குப் பதில் கேலரியில் வீரர்கள் இடம் விட்டு உட்காரலாம். புண்டஸ்லிகாவில் ஐந்து சப்ஸ்டிட்யூட்கள் என்பதே வீரர்களுக்கு ஓய்வுகொடுப்பதற்காகத்தான். ஆனால், கிரிக்கெட்டில் காயம் ஏற்பட்டால்மட்டுமே மாற்றுவீரர் உள்ளே வரமுடியும். அதனால் சப்ஸ்டிட்யூட் கிரிக்கெட்டுக்கு செட் ஆகாது. ஆனால், மேட்சுக்கு நடுவே டைம் அவுட் நேரத்தை இன்னும் அதிகப்படுத்திக்கொள்ளலாம். மேலும் இரண்டு சுற்று லீக் போட்டிகள் இல்லாமல் ஆட்டங்களின் எண்ணிக்கையைக் குறைத்துக்கொண்டால் ஜூலை- ஆகஸ்ட்டில் ஐபிஎல் போட்டிகளை நடத்திவிடலாம்.