Oktober 8, 2024

சுமந்திரனுக்கு எச்சரிக்கை விடுத்த பிரதமர் !

சுமந்திரனுக்கு எச்சரிக்கை விடுத்த பிரதமர் !

எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் 2010 ஆண்டில் தமிழ்த் தேசிய அரசியலுக்குள் நுழைந்த காலத்தில் இருந்தே தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை வலுவிழந்துபோகச் செய்யக்கூடிய பல்வேறு வகையிலான செயற்பாடுகளைச் மேற்கொண்டு வருவதோடு, இந்நேரத்தில் வரலாற்றினைத் திருத்தியெழுத முயல்வது ஆபத்தானது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமரும், விடுதலைப்புலிகளின் சர்வதேச சட்ட ஆலோகராகவும் இருந்த வி.உருத்திரகுமாரன் எச்சரித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் அனுப்பி வைத்துள்ள அறிக்கையில்,

சிங்கள ஊடகவியலாளர் ஒருவருக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்ளாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்கள் அண்மையில் வழங்கிய செவ்வி தொடர்பாக, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சட்ட ஆலோசகராக இயங்கியவன் என்ற வகையிலும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் என்ற வகையிலும் எதிர்வினையாற்றுவது அவசியம் என உணர்கிறேன்.

திரு சுமந்திரன் அவர்கள் 2010 ஆண்டில் தமிழ்த் தேசிய அரசியலுக்குள் நுழைந்த காலத்தில் இருந்தே தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை வலுவிழந்துபோகச் செய்யக்கூடிய பல்வேறு வகையிலான செயற்பாடுகளைச் மேற்கொண்டுவருகின்றதொரு பின்னணியிலேயே இவர் வழங்கிய செவ்வியினையும் நாம் புரிந்து கொள்ள வேண்டியவர்களாக உள்ளோம். மேலும் இச் செவ்வியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தோற்றம் உட்பட பல்வேறு குளறுபடியான தகவல்கள் உள்ளதனையும் கவனிக்க வேண்டியவர்களாக உள்ளோம். இது வரலாற்றினைத் திருத்தியெழுதும் ( Revisionism) ஓர் ஆபத்து மிக்க முயற்சியாகவே எமக்குத் தென்படுகிறது.

இச் செவ்வியில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் போராட்டச் செயற்பாட்டை சுமந்திரன் நிராகரித்திருக்கிறார். தமிழ் மக்களின் தேசிய அரசியலைப் பிரிதிநிதித்துவப் படுத்துவதாகச் சொல்லும் எந்தவொரு அரசியல் பிரதிநிதியும் தமிழீழ விடுதலைப்;புலிகள் அமைப்பின் தலைமையில் நடைபெற்ற தமிழ் மக்களது ஆயுதம் தாங்கிய விடுதலைப் போராட்டமானது சிறிலங்கா அரசின் இனஅழிப்பு நடவடிக்கைகளுக்கும், அரச பயங்கரவாதத்துக்கும் எதிராக தமிழ் மக்கள் சர்வதேச சட்டங்கள், தார்மீகக் கோட்பாடுகளின் அடிப்படையில் வழங்கிய எதிர்வினை என்பதனைப் புரிந்து கொண்டும், ஏற்றுக் கொண்டும் செயற்படுவதுதான் அரசியல் அறமாக இருக்க முடியும். இங்கு தனிப்பட்ட கருத்து என்பதற்கு இடமேதுமில்லை. இதனை ஏற்றுக் கொள்ள முடியாவிடின் அவர்கள் அரசியலில் இருந்து ஒதுங்கிக்கொண்டு தமிழ்த் தேசிய அரசியலுக்கு ஊறு விளைவிக்காமல் இருப்பதே சிறந்தது.

மேலும் தமிழரசுக் கட்சியின் தலைவர்கள், சுமந்திரன் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் போராட்டச் செயற்பாட்டை நிராகரித்ததை அது தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடு அல்ல என்றும், அது அவரது தனிப்பட்ட நிலைப்பாடு எனவும் கூறியுள்ளதுடன் சுமந்திரனின் கூற்றுப்பற்றிக் கண்டனமும் தெரிவித்திருக்கின்றனர். கட்சியின் நிலைப்பாட்டுக்கு மாறாக உறுப்பினர் எவரும் செயற்படும்போது அதற்குரிய ஒழுங்கு நடவடிக்கையெடுக்கப்பட்டு அதன் விளைவுகளை அவ் உறுப்பினர் எதிர் கொள்ள வேண்டுமே தவிர, அவ்வாறு செய்யாது ‘கட்சிக்கும் அதற்கும் தொடர்பில்லை’ என மட்டும் கூறுவது வெறும் கண்துடைப்பு நடவடிக்கையாகவே இருக்க முடியும். இன்றைய சூழ்நிலையில் தமிழ் மக்கள் இவ்வாறான சறுக்கல்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதையும், இவற்றுக்கும் அப்பாற்பட்ட அரசியல் நாகரீகம் ஒன்றினை எம்மிடையே வளர்த்துக்கொள்ள வேண்டியது காலத்தின் அவசியம் என்பதனையும் தமிழரசுக் கட்சித் தலைவர்களுக்கு இடித்துரைக்க விரும்புகிறேன்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வில் கலந்து கொள்வதற்காக விடுக்கப்பட்ட அழைப்பை தாம் ஏற்றுக் கொள்ளவில்லை எனவும் சுமந்திரன் இப் பேட்டியில் தெரிவித்துள்ளார். 2017 ஆண்டில் தாயகத் தமிழ் மக்களும், புலம் பெயர் தமிழ் மக்களும் எவ்வாறு இணைந்து செயற்படலாம் என்பதனை ஆராய்வதற்காக, தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை அடித்தளமாகக் கொண்டு தாயகத்தில் இயங்கும் கட்சித் தலைவர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் நாம் அழைப்பொன்றினை மின்னஞ்சல் மூலம் அனுப்பியிருந்தோம். அவ் அழைப்பு சுமந்திரன் அவர்களுக்கும் அனுப்பப்பட்டது. அழைப்புக்கு நன்றி தெரிவித்த அவர், இது குறித்து இரண்டொரு நாட்களில் மீளத் தொடர்பு கொள்வதாகக் கூறி நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வு தொடர்பான ஒருங்கிணைப்பாளருக்கு மின்னஞ்சல் அனுப்பி இருந்தார். பினனர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அவர்களது கருத்துக்கள் உள்வாங்கப்பட்டு செய்தி ஒன்று அனுப்பவுள்ளதாக ஒருங்கிணைப்பாளருக்கு அறிவித்திருந்தார்கள். அப்படியே செய்தி கிடைக்கப்பெற்று அதனை அமர்வின்போது அவையில் நாம் வாசித்திருந்தோம். மேற்கூறிய அழைப்பினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சுமந்திரன் அவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காரணத்தால் அனுப்பியிருந்தார்களே தவிர அவ் அழைப்பு சுமந்திரனுக்கு மட்டும் தனித்து அனுப்பப்பட்ட அழைப்பல்ல என்பதையும் இவ் விடத்தில் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

இன்று தமிழ் மக்கள் ஆயுதப்போராட்டத்தை தொடர்ந்து மேற்கொள்ளாததிற்கான காரணம் சர்வதேச சட்டங்களுக்கோ அன்றி தார்மீகக் கோட்பாடுகளுக்கோ அது முரணானது என்பதால் அல்ல. மாறாக இன்றைய உலக ஒழுங்கில் அதற்கான சாத்தியங்கள் குறைவு என்ற காரணத்தினால் தமிழ் மக்கள் பூகோள ராஜதந்திர நடவடிக்கைகள் மூலமாகவும், சர்வதேச சட்டங்களை உரியவகையில் கையாளுதல் மூலமாகவும், உலகத் தமிழ் மக்கள் பலத்தின் ஊடாகவும் தமது போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள்.

இறுதியாக, தமிழீழ விடுதலைப் புலிகள் தலைமையில் நடைபெற்ற ஆயுதப் போராட்டத்தினை நிராகரிப்போர் எவரதும் அரசியல் குறித்து தமிழ்மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியுள்ளதையும் இவ்விடத்தில் பதிவு செய்துகொள்ள விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார்.