April 19, 2024

தொடங்கியது மாநகர முதல்வர் கதிரை சண்டை!

நீண்ட இழுபறிகளின் பின்னராக நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் யாழ் மாநகர முதல்வர் இ.ஆனல்ட் இரண்டு மாதங்களுக்கு பின்பு இன்றைய தினம் தனது அனைத்து பொறுப்புக்களையும்  யாழ் மாநகர சபையின் பதில் முதல்வர் து.ஈசனிடம் கையளித்துள்ளார்.

இதனிடையே மாநகர முதல்வர் பதவியினை தமக்கு நெருக்கமான தரப்புகளிடம் கையளிக்க தமிழரசு கட்சி முனைப்பு காட்டிவருகின்றது.
இதனிடையே யாழ் மாநகர சபை முதல்வர் இ.ஆனல்ட் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதனால், இன்றையதினம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாநகர சபை அனைத்து உறுப்பினர்களையும் அழைத்து தனக்கு கீழ் உள்ள  அதிகாரங்கள் அனைத்தையும் பதில் முதல்வராக செயற்பட்டு வந்த தன்னிடம் ஒப்படைத்துள்ளதாக டெலோ கட்சி சார்பு து.ஈசன் தெரிவித்துள்ளார்.
மார்ச் மாதம் 17 ஆம் திகதி நாடாளுமன்ற பொதுத் தேர்தலிலே முதல்வர் இ.ஆனோல்ட் தனது வேட்பு மனுவிலே ஒப்பமிட்டதன் பின்பும் தன்னுடைய அதிகாரங்களை நிறுவ முற்பட்டிருந்தார்.
எனினும் தேர்தல் திணைக்களத்தினால் மூன்று கடிதங்கள் யாழ்.மாநகர சபைக்கு முதல்வரது பெயரில் அனுப்பப்பட்டுள்ளது.உரியமுறையில் விடுமுறையினை பெற்று அனைத்து பொறுப்புக்களையும் கடமைகளை ஒப்படைத்து விலக கோரியே கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இதற்கமைவாக இரண்டு மாதங்களுக்கு பின்பு இன்றைய தினம் தனது பொறுப்புக்களை இ.ஆனோல்ட் ஒப்படைத்துள்ளார்.
தற்போது முதல்வரால்  எனக்கு பூரண அதிகாரம் தரப்பட்டு சகலதையும் ஒப்படைத்துள்ளார். இனிவரும் காலங்களிலே கட்சி பேதங்களுக்கு அப்பால் சென்று அனைத்து உறுப்பினர்களுடனும்  இணைந்து மாநகர மக்களுக்காக சேவையாற்ற தோழமையுடன் கைகோர்த்து செயல்பட து.ஈசன் அழைப்பு விடுத்துள்ளார்.