மணிவண்ணன்,சுகாஸ் ஆதரவு!

வடமராட்சி குடத்தனையில் பொலிஸாரின் மிலேச்சத்தனமான தாக்குதலுக்கு எதிராக, பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ஆதரவாக நீதிமன்றில் ஆஜராகப்போவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சிரேஷ்ட உறுப்பினர் சட்டத்தரணி கே.சுகாஸ் அறிவித்துள்ளார்.
பொலிஸாரின் தாக்குதலில் காயமடைந்த மூன்று பெண்கள் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சட்டத்தரணி சுகாஸ் நேரடியாக வைத்தியசாலைக்கு சென்று அவர்களை பார்வையிட்டார்.
பொலிஸார் நடந்துகொண்ட விதம் தொடர்பாக குறித்த பெண்களிடம் சுகாஷ் கேட்டறிந்தார். பொலிஸார் தங்களை பெண்கள் என்றுகூட கருதாமல் தாக்கினர் என பெண்கள் தெரிவித்தனர். பெண்கள் தொடர்பான விடயங்களை கையாள்வதற்கு பெண் பொலிஸாரே வரவேண்டும். ஆனால், ஆண் பொலிஸார் தங்கள் உடல்களில் பிடித்து இழுத்து, வீழ்த்தினர் எனவும் தாம் வீழ்ந்த பின்னர் கால்களால் மிதித்தனர் எனவும் பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவித்தனர்.
இதனிடையே மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணண் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சட்ட உதவி வழங்கத் தயராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
கடும் குற்றவாளிகளை கூட தாக்குவதற்கு காவல்துறைக்கு அனுமதியோ அதிகாரமோ கிடையாது.
அப்படி இருக்கையில் ஊரடங்கு வேளையில் வீடு புகுந்து பெண்கள் மீது தாக்குதல் நடாத்தியமை ஏற்றுக் கொள்ளப்பட முடியாத காட்டு மிராண்டித்தனமான செயல். இந்த செயலை மிக வன்மையாக கண்டிக்கின்றேன என மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.