Dezember 3, 2024

கிட்டு, நீ சாகவில்லை; ஒரு புதிய மூச்சாகப் பிறந்திருக்கிறாய். – தேசியத் தலைவர்

எனது சுமைகளைத் தாங்கிய இலட்சியத் தோழன்.!

மனதின் ஆழத்து உணர்வுகளை வார்த்தைகளின் சித்தரிப்பது கடினம். அதுவும் ஆன்மாவை உலுப்பிவிடும் ஓர் உணர்வுப் பூகம்பத்தை மனித மொழியில் விபரிக்க முடியாது. எனது அன்புத் தம்பி கிட்டுவின் இழப்பும் அப்படித்தான். அவனது மறைவு எனது ஆன்மாவைப் பிழிந்த ஒரு சோக நிகழ்வு. அதனைச் சொற்களால் வார்த்துவிட முடியாது. 

நான் கிட்டுவை ஆழமாக நேசித்தேன். தம்பியாக, தளபதியாக, எனது சுமைகளைத் தாங்கும் இலட்சியத் தோழனாக நான் அவனை நேசித்தேன். இது சாதாரண மனித பாசத்திற்கு அப்பாலானது. ஒரு இலட்சியப் பற்றுணர்வில், ஒன்றித்த போராட்ட வாழ்வில் நாம் பகிர்ந்துகொண்ட அனுபவத்தில் ஒருவரை ஒருவர் ஆழமாக இனம்கண்ட புரிந்துணர்வில் வேரூன்றி வளர்ந்த நேயம் அது. அவனுள் ஓர் அபூர்வம் இருந்ததை நான் ஆரம்பத்திலிருந்தே கண்டு கொண்டேன்.

அது அவனது அழகான ஆளுமையாக வளர்ந்தது. ஒரு சுதந்திர வீரனுக்குரிய அனைத்துச் சிறப்பியல்புகளும் அவனிடமிருந்தன. அதனால் அவன் ஓர் அற்புதமான இலட்சியவாதியாக வாழ்ந்தான்; போராடினான்; அனைத்து மக்களது இதயங்களையும் கவர்ந்தான். போர்க்களத்தில் வீரனாகவும், பொதுமக்களின் தோழனாகவும் எங்கும் எல்லாவற்றிலும் எல்லோரிடமும் அவனது ஆளுமையின் வீச்சு நிறைந்திருந்தது. கிட்டு ஒரு தனிமனித சரித்திரம். நீண்ட ஓய்வில்லாத புயலாக வீசும் எமது விடுதலை வரலாற்றில் ஒரு காலத்தின் பதிவு.

வங்கக் கடலில் பூகம்பமாக அவனது ஆன்மா பிளந்தது. அதன் அதிர்வலையாய் எமது தேசமே விழித்துக்கொண்டது.கிட்டு, நீ சாகவில்லை; ஒரு புதிய மூச்சாகப் பிறந்திருக்கிறாய்.

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert