November 22, 2024

தமிழ் தேசிய கட்சிகள் ஓரணியில் திரள்வதாக உறுதி ; முடிவுக்கு வந்தது உண்ணாவிரதம்

தமிழ் தேசிய கட்சிகள் , அமைப்புகள் , ஓரணியில் திரள வலியுறுத்தி, முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பில் முன்னாள் போராளியொருவரால் கடந்த நான்கு நாட்களாக இடம்பெற்று வந்த உண்ணாவிரத போராட்டம் அரசியல் கட்சி தலைவர்களின் எழுத்துமூல உறுதிமொழியை அடுத்து இன்றைய தினம் வியாழக்கிழமை கைவிடப்பட்டுள்ளது.

கடந்த ஒன்பதாம் திகதி காலை முதல் இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு இடம்பெற்று வந்த நிலையில் இன்றையதினம் நூற்றுக்கணக்கான மக்கள் போராட்டம் இடம்பெறும் இடத்தில ஒன்றுகூடியிருந்ததோடு தமிழ் தேசிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சிலரும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவை வெளிப்படுத்தியிருந்தனர்.

இந்த நிலையில் இன்றையதினம் உண்ணாவிரத போராட்டம் இடம்பெறும் இடத்துக்கு வருகை தந்த தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் நாடாளுமனற உறுப்பினர் சி வி விக்னேஸ்வரன் , டெலோ கட்சியின் தலைவர் நாடாளுமனற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் , ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமசந்திரன், புளொட் அமைப்பின் உறுப்பினர் கந்தையா சிவநேசன், ஜனநாயக போராளிகள் கட்சி அங்கத்தவர் ஆகியோர் எழுத்து மூல ஆவணத்தில் தாம் அனைவரும் ஒன்று சேர்ந்து கூட்டாக செற்படுவோம் என உறுதிமொழியை வழங்கி கையொப்பமிட்ட பின்னர் உண்ணாவிரதம் மேற்கொண்ட நபருக்கு நீராகாரம் வழங்கி உண்ணாவிரதம் முடித்து வைக்கப்பட்டிருந்தது.

இந்த உண்ணாவிரத போராட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் ஆதரவு தெரிவித்து கலந்துகொண்டிருந்த போதிலும் மேற்படி ஆவணத்தில் அவர் கையொப்பமிடவில்லை அத்தோடு நேற்றையதினம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமனற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரனும் இந்த போராட்டத்துக்கு ஆதரவை வெளிப்படுத்தி கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert