நெருப்போடு விளையாடாதீர்கள்! காசி ஆனந்தன் எச்சரிக்கை !
தமிழீழத்தில் இயங்கும் முதன்மை வாய்ந்த சமய நிறுவனங்களும் தமிழ்மாணவர் அமைப்புகளும், போரினால் பாதிக்கப்பட்டோர் இயக் கங்களும் ஈழத் தமிழர் சிக்கலுக்கான தீர்வு குறித்து அண்மையில் வெளியிட்ட ஓர் அறிக்கையை அமெரிக்காவில் இயங்கும் புலம்பெயர்ந்த ஈழத் தமிழர் அமைப்புகள் ஆதரித்திருக்கின்றன.
இக்கோரிக்கையை ஈழத்தமிழர் நட்புறவு மையமும் ஆதரிக்கிறது என்பதை இவ்வறிக்கை மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்
பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன்பு தமிழீழத்தில் நிலைகொண்டிருக்கும் சிறீலங்காப் படையில் 25 சதவிகிதம் படைஞர்களை மீளப் பெற வேண்டும் என்பதும், ‚தீர்வை எட்டும்போது‘ 1983க்குப் பின்பு தமிழீழத்தில் குவிக்கப்பட்ட படையினர் அனைவரையும் தமிழீழத்தை விட்டு வெளியேற்ற வேண்டும் என்பதும் முதல் கோரிக்கை
எந்த நிரந்தரத் தீர்வும் உலகநாடுகளின் மேற்பார்வையின்கீழ் தாயகத்திலும் தாயகத்துக்கு வெளியிலும் வாழும் ஈழத்தமிழர்கள் இடையே நடத்தப்படும் ஒரு கருத்துக்கணிப்பு மூலமே முடிவு செய்யப்பட வேண்டும் என்பது இரண்டாவது கோரிக்கை.
விடுதலை உணர்வு கொண்ட தமிழீழ அமைப்புகள் தமிழீழத்தின் நாடாளுமன்றத் தலைமைகளுக்கு – அவர்கள் தீர்வுகுறித்த பேச்சுவார்த்தைக்கு முன்நிபந்தனைகளை விதித்திருக்கிறார்கள்
தமிழீழத்தில் இருந்து இக் கோரிக்கை அறிக்கையை வெளியிட்டு இருக்கிறவர்கள் தகுதியற்றவர்களா – தள்ளிவைக்கப்பட வேண்டியவர்களா என்றால் இல்லை.
தேர்தலை நினைக்காதவர்களாக இருக்கலாம் ஆனால் தேசத்தை மறக்காதவர்கள் இவர்கள்.
நல்லை ஆதீனகர்த்தா ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தமிழீழத்தில் சைவப் பெருமக்களின் நம்பிக்கைக் குரியவராக இருக்கிறார். நானூறு இந்துக் கோயில்களில் குண்டுகளை வீசிய சிங்கள- புத்த இனவெறி அரசோடு பேச்சுவார்த்தைக்குத் தமிழீழத் தலைவர்கள் என்போர் போகும்போது அவர் விழிப்பாய் இருப்பது வியப்பில்லை. திருக்கோணமலை தென்கயிலை ஆதினத்தின் தலைவர் தவத்திரு அகத்தியர் அடிகளார் இக்கோரிக்கை அறிக்கையில் கையெழுத்திட்டு இருக்கிறார்
அறப்போராட்ட காலமான தந்தை செல்வா காலம் தொடக்கம் தமிழீழ விடுதலைப் போர்க்களத்தில் 60 ஆண்டுகள் காலூன்றி நிற்பவர். மட்டக்களப்பு வணபிதா யோசப்மேரி அவர்கள். அவர் என் நீண்டகால நண்பர்.அவருடன் கூடப்பிறந்த இரட்டையர் களில் ஒருவரான அல்போன்ஸ் மேரி வெலிக்கடைச் சிறையில் என்னோடு தளையுண்டு அடைபட்டவர் . இவ்வறிக்கையில் அடிகளார் கையெழுத்தைப் பார்த்தேன்.
உறங்கிக் கிடந்த தமிழீழ மக்களை உலுக்கி எடுத்துப் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை உரிமைப் போர் உலா நடத்திய என் உள்ளத்தில் எப்போதும் நிறைந்திருக்கும் தவத்திரு வேலன் சுவாமிகளின் கையெழுத்தையும் இவ்வறிக்கை உள்ளடக்கியுள்ளது.
மட்டக்களப்பு வண பிதா. கந்தையா ஜெகநாதன், யாழ்ப்பாணம் வண. பிதா ரொபேர்ட் சசீகரன்,மட்டக் களப்பு வண பிதா. செபமாலை பிரின்சன் ஆகிய கிருத்துவத் துறவியர்கள் மக்கள் கோரிக்கையான இம் முன்நிபந்தனைகளை ஏற்றிருக்கிருக்கிறார்கள்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத் தலைவர் திருமதி. யோ. கனகரஞ்சனி இவ்வறிக்கையில் தன் கையெழுத்தை வழங்கி இருக்கிறார்.
‚குரலற்றவர்களின் குரல்‘ அமைப்பாளர் திரு. மா. கோமகன் அவர்கள் தன்னையும் இவ்வறிக்கை யாளர்களில் ஒருவராகக் குறிப்பிட்டு இருக்கிறார்.
இவ்வறிக்கை வெளியிட்டவர்களின் பட்டியலில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் திரு. ஆ. விஜயகுமார் அவர்களின் பெயரும், கிழக்குப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் திரு. நி.தர்சன் அவர்களின் பெயரும் இடம் பெற்றுள்ளன.
அமெரிக்காவில் உள்ள ஐந்து ஈழத்தமிழர் அமைப்புகள் இவ்வறிக்கையை ஏற்று அறிக்கையிட்டதைப்போல் உலகின் பல நாடுகளில் வாழும் ஈழத்தமிழர்களின் அமைப்புகள் அனைத்தும் இவ்வறிக்கையை ஏற்று உடன் அறிக்கைகள் வெளியிட வேண்டும்.
முண்டியடித்துக் கொண்டு சிங்கள இன வெறி ஆட்சியாளர் களோடு பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளச் செல்லும் தமிழீழத்தின்’நாடாளுமன்றத் தலைமை’கள் ‚நாங்கள் பேசப் போவது ஓர் ‚இடைக்காலத் தீர்வு‘ குறித்தே தவிர ‚நிரந்தரத் தீர்வு குறித்து’அல்ல‘ என்பதை முதலில் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
நான் ஆட்சியாளர்களிடம் பேசப் போகிறவர் களுக்கு கூறிக்கொள்ள விரும்புவது இது தான்:
நெருப்போடு விளையாடாதீர்கள்!
இனவெறிச் சிங்கள ஆட்சியர்களிடம் தமிழீழத்தை ஏலம் போடுவதாக உங்கள் சந்திப்பு இருந்து விடக் கூடாது.
சங்கிலியனும், பண்டார வன்னியனும், குளக்கோட்டனும், உலக நாச்சியாரும் ஆண்ட தமிழீழ மண்ணை விற்பனைக்கோ, குத்தகைக்கோ சிங்கள இனவெறி அரசோடு ஒப்பந்தம் செய்து தமிழனின் சரித்திரத்தில் மண் போடாதீர்கள்.
இறையாண்மை கொண்ட தமிழீழ விடுதலை ஒன்றே தமிழீழ மண்ணில் இன அழிப்பை மேற்கொண்டு வரும் சிங்கள -புத்த இன-மத வெறி அரசின் ஒடுக்குமுறை யிலிருந்து தமிழீழ மக்களைக் காப்பாற்ற வல்ல நியாயமான தீர்வாகும் என்பதே எங்கள் ஈழத்தமிழர் நட்புறவுமையத்தின் கொள்கையாகும். இதில் நாங்கள் என்றும் உறுதியாக இருப்போம்.
இடையில் நீங்கள் நடத்த இருக்கும் உங்கள் பேச்சுவார்த்தையில்கூட எங்கள் தாயகம் கொஞ்சம்கூடக் காயப்படக்கூடாது என்பதே எங்கள் கவலையாகும்.
இந்தியாவின் பாதுகாப்பும் தமிழீழத்தின் விடுதலையும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை என்பதை இந்திய அரசுக்கு ஓயாமல் நாங்கள் நினைவூட்டி வருகிறோம்.
ஈழம் தனிநாடு என்பதையும் தனி அரசு என்பதையும் காலம் உறுதி செய்யும்.
கவிஞர்.காசி ஆனந்தன்
தலைவர்
ஈழத்தமிழர் நட்புறவு மையம்