அமைச்சர் அலி:வாய் மூடி இருப்பது நல்லது!
முஸ்லிம் மக்களை கொலை செய்து கடைகள் தீக்கிரையாக்கிய போதும் வாய் மூடி மௌனியாக அரசிற்கு பின்னால் நின்ற அமைச்சர் அலி காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பில் பேசுவதை கண்டிக்கிறோம்.
யுத்தத்தில் 3000க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் காணாமல் போனதாக கூறும் அமைச்சர் அலி , சிங்கள மக்களுக்கு அதனை நிரூபிக்க வேண்டும் என வடக்கு கிழக்கு வழிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் செயலாளர் லீலாதேவி கோரிக்கை விடுத்துள்ளார்
நேற்று(24) சனிக்கிழமை மதியம் யாழ் ஊடக அமையத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் அலி கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலுக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் அமைச்சர் அலி நேர்காணலில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு ஆதாரம் இருந்தால் நடவடிக்கை எடுப்போம் என்ற பானியில் கருத்து தெரிவித்தார்.
அது மட்டுமல்லாது யுத்தத்தில் இராணுவத்தினரும் காணாமல் போயுள்ளதாகவும் 24 ஆயிரம் இராணுவத்தினர் இறந்ததாகவும் கூறி இருக்கிறார்.
அமைச்சர் அலியிடம் கேட்கிறோம் யுத்தத்தில் சுமார் ஒரு இலட்சம் எமது உறவுகளை அழிப்பதற்காக உணவு மற்றும் சம்பளம் கொடுத்து வளர்க்கப்பட்ட இராணுவம் இறந்ததாக குறிப்பிடும் உங்களுக்கு மக்கள் அழிக்கப்பட்டமை கண்ணுக்குத் தெரியவில்லையா?.
விடுதலைப் புலிகள் கைது செய்யப்பட்ட இராணுவத்தினராக இருந்தாலும் உயிரிழந்த இராணுவத்தினராக இருந்தாலும் கண்ணியமாகவும் மனிதாபிமானத்துடனுமே நடத்தி இருக்கிறார்கள்.
போர் உச்சம் தொட்ட காலத்தில் உயிரிழந்த இராணுவத்தின் உடல்களை செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக அரசாங்கம் பொறுப்பேற்றது.
அவ்வாறு மீட்கப்படாத உடல்களை விடுதலைப் புலிகள் உரிய மரியாதையுடன் தீயிட்டார்கள் .அமைச்சர் அலி போரில் இறந்த இராணுவத்தினரை காணவில்லை எனப் கதைகள் கூறுகிறார்.
நாங்கள் போரில் இறந்த எமது உறவுகளைக் கேட்கவில்லை பாதுகாப்பு தரப்பினரிடம் விசாரணைக்காக கைகளில் ஒப்படைத்த எமது உறவுகள் எங்கே என கேட்கிறோம் இது புரியாத அமைச்சர் அலி ஏதோ கதைகள் கூறுகிறார்.
அது மட்டும் அல்ல அது முஸ்லிம் மக்கள் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டதை ஒரு பிரச்சினையாக நேர்காணலில் கூறி இருக்கிறார்.
வடக்கிலிருந்து முஸ்லிம்களை வலுவான காரணத்தின் அடிப்படையில் வெளியேறுமாறு கூறிய போது தாங்களாகவே வெளியேறினார்கள் அவர்களின் உயிருக்கு எவ்வித பாதிப்பு ஏற்படவில்லை.
அண்மைக்காலத்தில் முஸ்லிம் மக்கள் கொல்லப்பட்டபோதும் கடைகள் தீக்கிரையாக்கப்பட்டபோதும் அமைச் அலி வாய் மூடி மௌனியாக அரசாங்கத்திற்கு பின்னால் நின்றவர்.
அப்படிப்பட்ட அலி எமது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பில் உண்மைக்கு புறம்பான விடயங்களை ஊடகங்களில் பேசுவதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்களை சுட்டுக்கொலை செய்து மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ வீரருக்கு பதவி உயர்வும் பொது மன்னிப்பும் வழங்கும் இலங்கை அரசாங்கத்திலே அமைச்சராக உள்ளார்.
அமைச்சர் அலியிடம் நாங்கள் ஒன்றை கேட்க விரும்புகிறோம் நீங்கள் முஸ்லிம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு பாராளுமன்ற உறுப்பினர் அல்லாமல் தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றம் வந்தவர் .
முடியுமானால் உங்கள் மக்களிடம் சென்று வாக்கு கேட்டு அவர்கள் பிரதிநிதியாக பாராளுமன்றம் செல்லுங்கள் அப்போதுதான் மக்களின் பிரச்சினை தொடர்பில் உங்களுக்கு தெரியும் என அவர் மேலும் தெரிவித்தார்.