புறோக்கர் சுமா வேண்டாம்!சி.வி!
தமிழ் கட்சி தலைவர்களது ரணில் விக்ரமசிங்கவுடனான சந்திப்பில் எம்.ஏ.சுமந்திரன் தரகராக மாறியுள்ளமை பங்காளி கட்சிகளிடையே சீற்றத்தை தோற்றுவித்துள்ளது.ஏனைய கட்சித் தலைவர்கள் ரணிலுடனான பேச்சுக்களில் கலந்துகொள்ளாதவாறு எம்.ஏ.சுமந்திரன் காய்நகர்த்தல்களை முன்னெடுப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
ரணில் விக்ரமசிங்கவிற்கும் இரா.சம்பந்தன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பு தொடர்பில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கேட்டுக்கொண்டதற்கு இணங்கவே சந்திப்பிற்கு அரச தரப்பில் இணக்கம் வெளியிடப்பட்டுள்ளதாகவும் சி.வி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஏனைய தலைவர்களிற்கு முன்கூட்டியே தகவல் வழங்காமல், திடீர் அழைப்பு விடுக்கப்பட்டு, நடத்தப்பட்ட கலந்துரையாடலுக்கு ஏனைய தமிழ் கட்சிகளின் தலைவர்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.ரணிலுக்கு கடிதம் ஒன்றையும் அவர்கள் அனுப்பியுள்ளனர் .
இதனிடையே எரிக் சொல்ஹெய்மை பேச்சில் இணைக்கும் நோக்கத்துடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டால், இந்திய தரப்பிலிருந்து ஒரு பிரதிநிதியை தாம் அழைத்து வரவுள்ளதாக சி.வி.விக்னேஸ்வரன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், ஏனைய தமிழ் கட்சிகளின் எதிர்ப்பையடுத்து, எதிர்வரும் ஜனவரி மாதம் 5 ஆம் திகதி பேச்சை நடத்த ரணில் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.