November 21, 2024

ரணிலின் விளையாட்டுக்கு எடுபடாதீர்கள்!

2023 ஆண்டு இறுதியில் ராஜபக்ஷ, சஜித் அணி, தமிழ் தரப்பு ஆதரவுடன்  ஜனாதிபதி வேட்பாளராக வருவதற்கான முயற்சியில் ரணில் விக்ரமசிங்க ஈடுபடுகிறார். அதற்கான முன்னேற்பாடே தமிழ் மக்கள் பிரச்சினையை தீர்க்கப்போவதாக அவர் கூறுகிறாரென தெரிவித்த முன்னிலை சோசலிசக் கட்சியின் பொதுச்செயலாளர் குமார் குணரட்னம் தமிழ்தரப்புகள் இதனை விளங்கி கொள்ளவேண்டும் என்றார். 

யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார் 

மேலும் தெரிவிக்கையில், 

2015 நல்லாட்சி என கூறிய காலத்தில் தீர்க்கப்படாத பிரச்சினைகளை அவசரமாக தீர்ப்பது போன்ற தோற்றம் காட்டப்படுகின்றன. இந்த சந்தர்ப்பத்தை நாம் பாவிப்போமென தமிழ் தரப்புக்கள் நம்பகூடாது.

போராட்டத்தை நம்பவேண்டும். ரணிலின் விளையாட்டுக்கு எடுபடக்கூடாது.

இனவாதத்திற்கு எதிரான தன்மையை காலி முகத்திடல் போராட்டத்தில் கண்டோம். ஆனால் தற்போது இன ஒற்றுமையை பிரிக்க முயற்சிக்கின்றனர். போராட்டத்திற்கு இடமளிக்கமாட்டேன் என ராஜபக்ஷவினருக்கு ரணில் விக்கிரமசிங்க வாக்குறுதியளித்துள்ளார். 

இராணுவம் பொலிஸ் புலனாய்வுத்துறை என்பன போராட்டத்தை அடக்க முனைப்பு காட்டுகின்றன. பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்தி போராட்டத்தை அடக்க முயல்கின்றனர். அது தொடர்பாக  யாழ்ப்பாண மக்களுக்கு அனுபவம் உண்டு. சிங்கள மக்களுக்கு அது புதிதானதே. 

போராட்ட சக்திகளை பிரிக்க பல்வேறுபட்ட முயற்சிகள் எடுக்கப்படுகிறது.நடுத்தர வர்க்கத்தை இலக்கு வைத்து தனியார் பல்கலைக்கழகத்தை உருவாக்க முயற்சிக்கிறார். வரவு செலவுத்திட்டம் மூலம் ஒரு இலட்சம் வருமானம் பெறுபவரும் வரிசெலுத்தும் நிலை உள்ளது.

அரசியலமைப்பு மற்றும் பாராளுமன்றம் மூலம் செய்யமுடியாததை போராட்டம் மூலம் செய்யமுடிந்தது. 

அதிகநேர மின்வெட்டு,வரி அறவீடு போன்றவற்றால் 2023ம் ஆண்டு போராட்டத்திற்கான வளர்ச்சியாக இருக்கும். நடுத்தர சாதரண மக்கள் பொருளாதார நெருக்கடியால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பொருளாதார நெருக்கடிக்கு எதிராக மாணவர்கள்,தொழிலாளர்கள், விவசாயிகள் கிளர்ந்தெழுவர்

தேர்தலொன்று நடந்தால் அதனுடன் இணைந்ததாக சர்வஜன  வாக்கெடுப்பு  நடத்தப்பட்டு புதிய அரசியலமைப்பு கொண்டுவர வேண்டும். பாராளுமன்ற முறைமை இருக்கட்டும். மக்கள் அதிகாரம் கொண்ட மக்கள் சபை உருவாக்கப்பட வேண்டும் .ஜூலை 9 போராட்டத்தில் இதனையே கண்டோம். பிரதேசவாரியாக இவை உருவாக்கப்பட வேண்டும்-என்றார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert