November 23, 2024

தமிழ் அரசியல் வாதிகளின் படங்களுக்கு தக்காளி வீசிப் போராட்டம்!!

வவுனியாவில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் பதாதை மீது அழுகிய தக்காளிப் பழம் வீசப்பட்டு ஆர்ப்பாட்டப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா, ஏ9 வீதியில் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு முன்பாக கொட்டகை அமைத்து 2120 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் அவர்களது போராட்ட கொட்டகை முன்பாக இன்று (10) முன்னெடுக்கப்பட்ட  போராட்டத்தின் போதே தமிழ் எம்.பிகளின் பதாதை மீது அழுகிய தக்காளிப் பழம் வீசப்பட்டுள்ளது.

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட தாய்மார் ‚அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொடிகளை ஏந்தியவாறும், காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளின் படங்களை தாங்கியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், தமக்கு நீதி வேண்டும் எனவும், நீதி மறுக்கப்பட்ட நாட்டில் மனிதவுரிமைகள் தினம் எதற்கு‘ எனவும் கோசம் எழுப்பியதுடன், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பங்களிப்பு இன்றி அரசாங்கத்துடன் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பேச்சுவார்த்தைக்கு செல்லக் கூடாது எனவும், இது அரசாங்கத்தை காப்பாற்றும் முயற்சி எனவும் தெரிவித்தனர்

இதன்போது, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன், தமிழரசுக் கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழ் மக்கள் தேசியக் கூட்டனியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்கினேஸ்வரன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சி.சிறிதரன்,த.சித்தார்த்தன், எம்.ஏ.சுமந்திரன், வினோதரராதலிங்கம், கோவிந்தம் கருணாகரன், ஈபிஆர்எல் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோரது உருவம் பொறிக்கப்பட்ட பதாதைக்கு அழுகிய தக்காளிப் பழத்தால் வீசி, மத்தியஸ்தம் இன்றி அரசாங்கத்துடன் தனித்து பேச்சுவார்த்தைக்கு செல்லாதீர்கள், இலங்கை அரசாங்கத்தை காப்பாற்றாதீர்கள் எனக் கூறி தக்காளிப் பழங்களை வீசித்  தாக்கினர்

குறித்த ஆர்ப்பாட்டமானது சுமார் ஒரு மணிநேரம் இடம்பெற்றதுடன், இதில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் பலரும் கலந்து கொண்டனர். 

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert