கிளிநொச்சி வைத்தியசாலையில் மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு !
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் மிகவும் அத்தியாவசியமான மருந்து பொருட்கள் உட்பட 80 க்கு மேற்பட்ட மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு காணப்படுவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்துள்ளன.
கடந்த சில வாரங்களாக இந்நிலைமை காணப்படுவதாகவும் சிகிச்சைக்காக வருகை தரும் பொது மக்கள் பெருமளவுக்கு மருந்துப் பொருட்களை வெளியில் வாங்குவதற்கே வைத்தியர்கள் எழுதிக்கொடுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையை பொருத்தவரை பெருமளவுக்கு வறுமைக்கோட்டின் கீழ் உள்ள நோயாளர்களே சிகிச்சைக்காக வருகை தருகின்றனர்.
இதன்போது அவர்களுக்கான மருந்துகளை வெளியில் கொள்வனவு செய்யுமாறு வைத்தியர்களால் சிபாரிசு செய்யப்படுகின்றது.
இந்நிலைமை காரணமாக பலர் தங்களுக்குரிய மருந்துக்களை கொள்வனவு செய்யாது செல்கின்ற நிலைமையே காணப்படுகிறது.
மேலும், குறித்த வைத்தியசாலையில் குழந்தைகளுக்கான முக்கிய சில மருந்து வகைகள் மற்றும் மாதாந்த கிளினிக் சிகிச்சை பெறும் நோயாளர்களுக்கான மருந்து வகைகள் இல்லையென மாவட்ட வைத்தியசாலை தகவல்கள் மூலம் அறியமுடிந்துள்ளது.
இந்த மருந்து தட்டுப்பாடு நிலைமையானது நாடு முழுவதற்குமான பிரச்சினையாக காணப்படுவதனால் பொது மக்கள், உயர்ந்தபட்சம் வருமுன் காக்கும் முன்னாய்த்த நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என வைத்தியர்கள் கோரியுள்ளனர்.