November 23, 2024

ரணிலே ஒரு பின்கதவு:சங்கரி!

தேர்தலில் மக்கள் ஆணையைப் பெற முடியாது   ஜனாதிபதியான ரணில் விக்கிரமசிங்கவினால் முன் வைக்கப்படும் தமிழ் மக்கள் சார்ந்த எந்தவிதமான தீர்வினையும் சிங்கள மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளரின் வீ.ஆனந்த சங்கரி தெரிவித்தார்.

 யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேல தெரிவிக்கையில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகியமை சட்டவிரோதமானதாகவே பார்க்கிறேன்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தைக்கு செல்ல உள்ளதாக அறிகிறேன்.

2004 ஆம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்க சமஷ்டிக் கோரிக்கையுடன் ஜனாதிபதி வேட்பாளராக களம் இறங்கிய போது தமிழ் மக்களை வாக்களிக்க விடாது தடுத்தது தமிழ் தேசிய கூட்டமைப்பு.

அந்தத் தேர்தலில் வெறும் தசம் மூன்று வாக்குகளில் ரணில் விக்கிரமசிங்க தோற்றுப் போக ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ச தெரிவானார்.

இப்போது மீண்டும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு சார்ந்து பேச்சு வார்த்தைக்கு செல்ல போவது அரசியல் இராஜதந்திரமாக என்ற கேள்வியை கேட்க விரும்புகிறேன்.

தமிழ் மக்களின் அரசியல் தீர்வு தொடர்பில் நான் பத்துக்கும் மேற்பட்ட பிரதமர் மற்றும் ஜனாதிபதிகள் வெளிநாட்டு தூதுவர்களுடன் பேசியவன் மட்டுமல்ல எழுத்து மூலம் 150 க்கும் மேற்பட்ட கடிதங்களையும் எழுதியவன்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ் கட்சிகள் பேச்சுவார்த்தை மட்டும் இராஜ தந்திரம் என நினைப்பது தமிழ் மக்களை மீண்டும் ஏமாற்றும் ஒரு நாடகமாகும்

தமிழ் மக்களின் அரசியல் தீர்வு தொடர்பில் ஜனாதிபதியுடன் பேசுவது பிழையல்ல ஆனால் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் பேசி சமஷ்டியைப் பெற முடியாது.

தற்போதைய பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தைக் கொண்டிராத ராணில் விக்கிரமசிங்க வழங்கப் போகும் தீர்வினை பாராளுமன்றத்தில் உள்ள பெரும்பாலானவர்கள் ஏற்கவே மாட்டார்கள்.

ஏனெனில் பாராளுமன்றத்தில் உள்ள அநேகமானவர்கள் தமிழ் மக்களுக்கு  சமஷ்டித் தீர்வு கிடைக்கக் கூடாதென்ற நிலைப்பாட்டில் உள்ள நிலையில் ரணில் விக்கிரமசிங்க வரும் பேச்சு வார்த்தை என்ற போர்வையில் சர்வதேசத்தை ஏமாற்ற தமிழ் தலைமைகள் தமிழ் மக்களை ஏமாற்றப் போகிறார்கள்

2008 ஆம் ஆண்டு இறுதி யுத்தம் இடப்பெற்றுக் கொண்டிருந்தபோது பலமான ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஷ இருந்தார்.

அக்காலப் பகுதியில் யுத்தத்தை நிறுத்துவோம் என்னுடன் சேர்ந்து வாருங்கள் ஜனாதிபதியுடன் பேசுவோம் என கேட்டபோது தமிழ் தலைமைகள் அதற்கு விரும்பவில்லை என்னைத் துரோகி என்னப் பட்டம் சூட்டினர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு விக்னேஸ்வரன் உட்பட தமிழ் மக்களின் அரசியல் தீர்வு தொடர்பில் பேசும்போது யாருடன் பேசப்போகிறோம் எதைப் பேசப் போகிறோம் ரணில் விக்ரமசிங்கவினால் தர முடியுமா அல்லது அதனைப் பெற்றுக் கொள்வதற்கு ஏதேனும் வழிகள் உள்ளதா என்பது தொடர்பில் ஆராய்வதே இராஜதந்திரம் .

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு இந்தியாவின் கைகளிலே தங்கி உள்ளது தமிழ் தலைமைகள் எந்த ஜனாதிபதியுடன் பேசியும் இறுதியில் இந்தியாவே தீர்மானிக்கும்.

ஆகவே அதனை விடுத்து ஜனாதிபதி அழைத்தார் நாம் வருகிறோம் என எடுத்த எடுப்பில் பேச்சுவார்த்தைக்கு ஓடுவது தமிழ் மக்களுக்கு தீர்வாகாது என அவர் மேலும் தெரிவித்தார்

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert