குருந்தூர்மலை நிர்மாணம்:நீதிமன்ற அவமதிப்பே!
முல்லைத்தீவு குருந்தூர்மலை விவகாரத்தில், கடந்த யூலை மாதம் 19 ஆம் திகதி அன்று, ஏற்கனவே வழங்கிய நீதிமன்ற கட்டளையை அவமதித்து, யாராவது புதிதாக கட்டங்களை அல்லது மேம்படுத்தல்களை அமைத்தால், அதனை நீதிமன்ற அவமதிப்பாக கருத முடியும் எனவும், அவ்வாறு சம்பவங்கள் இடம்பெற்றால், அது தொடர்பில், முல்லைத்தீவு பொலிசார், உரியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றம், இன்று கட்டளை வழங்கியுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் குருந்தூர்மலை தொடர்பான வழக்கு விசாரணை தீர்ப்பு, இன்று, முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜாவால் வழங்கப்பட்டது. இன்று, தண்ணிமுறிப்பு குருந்தூர்மலை பிரதேசத்தில் அமைக்கப்பட்ட பௌத்த விகாரை தொடர்பான வழக்கு மீதான கட்டளை, நீதிபதி ரி.சரவணராஜாவால் வழங்கப்பட்டுள்ளது.
2018 ஆம் ஆண்டு முதல், முல்லைத்தீவு குருந்தூர்மலை பகுதியில், தொல்லியல் ஆய்வு எனும் பெயரில், தமிழ் மக்களின் வழிபாட்டு இடம் அழிக்கப்பட்டு, பௌத்த மயமாக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை தொடர்பில், பிரதிவாதிகளாலும் வழக்கு தொடுனர்களாலும் சமர்ப்பணங்கள் செய்யப்பட்டு, வழக்கு விசாரணைகளை நடைபெற்று வந்துள்ளது
இதன் தொடர்சியாக, இந்த வழக்கில், பல்வேறு கட்டளைகளை நீதிமன்றம் வழங்கி வந்த நிலையில், அந்த கட்டளைகளையும் மீறி, பௌத்த கட்டுமான பணிகள் இடம்பெற்று வந்திருந்தன. அந்தவகையில், கடந்த யூலை மாதம் 19 ஆம் திகதி அன்று, மன்று கட்டளை ஒன்று வழங்கி இருந்தது. அதாவது, யூன் 12 ஆம் திகதி அன்று, எந்த நிலையில் குருந்தூர் மலை பிரதேசம் இருந்ததோ, அங்கு இடம்பெற்று வந்த கட்டுமானங்கள் இருந்ததோ, அந்த நிலையை தொடர்ந்தும் பேண வேண்டும் எனவும், புதிதாக மேற்கொண்டு கட்டுமானங்களை செய்ய முடியாது எனவும், நீதிமன்றம் கட்டளை வழங்கி இருந்தது.
அத்துடன், கட்டுமானப் பணிகள் இடம்பெற்று வரும் குருந்தூர்மலைக்கு, முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா மற்றும் சட்டமா அதிபர் திணைக்கள பிரதி சொலிசிட ஜெனரல் மற்றும் தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் நேரடியாக சென்று பார்வையிட்டிருந்தனர். இருந்த போதிலும், அந்த கட்டளையையும் மீறி, அங்கு கட்டுமானப் பணிகள் தொடர்சியாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. அது தொடர்பில், குருந்தூர்மலை ஆதி ஐயனார் ஆலயத்தினரும் அரசியல் பிரதிநிதிகளும், குருந்தூர்மலை பகுதியில் போராட்டம் செய்திருந்தனர்.dtd=26
அதனடிப்படையில், முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்திற்கு, வேறு சில டீ அறிக்கைகளும் தாக்கல் செய்யப்பட்டிருந்ததுடன், ஆதி அய்யனார் ஆலயம் சார்பில், சட்டதரணிகளால் நகர்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு, வழக்கு விசாரணை இடம்பெற்று வந்தது. இந்த கட்டுமான பணிகள் தொடர்ந்து நடைபெறுவது தொடர்பில், முல்லைத்தீவு பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இந்த வழக்கின் மீதான கட்டளைக்காக, இன்று தவணையிடப்பட்டிருந்தது.
அந்தவகையில், கடந்த யூலை 19 ஆம் திகதி அன்று, ஏற்கனவே வழங்கிய நீதிமன்ற கட்டளையை அவமதித்து, யாராவது புதிதாக கட்டங்களை அல்லது மேம்படுத்தல்களை அமைத்தால், அதனை நீதிமன்ற அவமதிப்பாக கருத முடியும் எனவும், அவ்வாறு சம்பவங்கள் இடம்பெற்றால், அது தொடர்பில் முல்லைத்தீவு பொலிசார், உரியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றம், கட்டளை வழங்கியுள்ளது.
ஆனால், ஜூலை மாதம் 19 ஆம் திகதி, நீதிமன்றம் வழங்கிய கட்டளைக்கு மாறாக, குருந்தூர்மலை பகுதியில், பௌத்த கட்டுமான பணிகள், பௌத்த பிக்கு மற்றும் இராணுவ அனுசரணையோடு, தொல்லியல் திணைக்களத்தால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.