ஜெருசலேமில் இருவேறு குண்டு வெடிப்புகள்: பலர் காயம்!
இஸ்ரேலின் ஜெருசலேம் நகரத்தை உலுக்கிய இரண்டு வெவ்வேறு வெடிப்புகளில் குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் 12 பேர் காயமடைந்தனர்.
இன்று புதன்கிழமை காலை நடந்த சம்பவங்கள் பாலஸ்தீன தாக்குதல்களாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக இஸ்ரேல் காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை நகரமான நாப்லஸில் 16 வயது பாலஸ்தீனிய இளைஞன் இஸ்ரேலியப் படைகளால் கொல்லப்பட்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு இந்த வெடிப்புகள் நிகழ்ந்தன.
பொதுவாக பயணிகள் நிரம்பிய ஜெருசலேமிற்குள் மேற்கு நுழைவாயிலில் உள்ள ஒரு நெடுஞ்சாலையில் இஸ்ரேலிய பேருந்து நிலையம் அருகே காலை 7 மணியளவில் (04:00 GMT) முதல் வெடிப்பு ஏற்பட்டது.
முதல் வெடிப்பில் ஏழு பேர் காயமடைந்தனர். மருத்துவர்களிள் கருத்துப்படி குறைந்தது இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
இரண்டாவது வெடிப்பு, வடக்கு ஜெருசலேமில் உள்ள ரமோட் சந்திப்பில் அரை மணி நேரத்திற்குள் நடந்தது. 5 பேர் சிறு காயங்களுக்கு உள்ளானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பேருந்து தரிப்பிடத்தில் விடப்பட்ட ஈருறுளிக்குள் வெடிப்பொருட்கள் நிரம்பி வெடிக்க வைக்கப்பட்டதாக காவல்துறையினர் நம்புகின்றனர்.
இரண்டு வெடிப்புகளும் தூரத்திலிருந்து செயல்படுத்தப்பட்டதாக நம்பப்படுகிறது.
பதவி விலகும் பிரதம மந்திரி Yair Lapid இஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஒரு சிறப்பு கூட்டத்தை கூட்டுவதாக அறிவித்தார்.
குண்டுவெடிப்புகள் குறித்து விசாரணை நடத்தி சந்தேக நபர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ள இஸ்ரேலிய அதிகாரிகள் ஜெருசலேமின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் முக்கிய சாலைகளை மூடிவிட்டு சோதனைச் சாவடிகளை அமைத்துள்ளனர்.
பாதுகாப்பு அமைச்சரின் முடிவின் அடிப்படையில், இஸ்ரேலிய இராணுவம் ஜெனின் பகுதியில் உள்ள இரண்டு முக்கிய சோதனைச் சாவடிகளான ஜலமே மற்றும் சேலத்தை மூடுவதாகவும் அறிவித்தது.
முதல் வெடிப்பு சம்பவத்தின் கண்காணிப்பு கேமரா காட்சிகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது.