தேர்தல் மூலம் நிரூபிக்கட்டும்!
மக்களாணை உண்டு என குறிப்பிடும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த அரசாங்கத்துக்கு அழுத்தம் பிரயோகிக்க வேண்டும். இடம்பெறவுள்ள தேர்தல்களில் பொதுஜன பெரமுன படுதோல்வி அடையும் என்பதை உறுதியாக குறிப்பிட முடியும் என இடதுசாரி ஜனநாயக முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படவில்லை. இந்த வரவு செலவுத் திட்டத்தின் பரிந்துரைகள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டால் நடுத்தர மக்கள் மிக மோசமான நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் அவர் தலைமையிலான அரசாங்கத்துக்கு மக்கள் மத்தியில் நன்மதிப்பு கிடையாது. அரசாங்கத்தின் தீர்மானங்களை மக்கள் கடுமையாக விமர்சிக்கிறார்கள். மக்களாதரவு இல்லாமல் பொருளாதார பாதிப்புக்கு தீர்வு காண முடியாது. நகர மற்றும் பிரதேச சபை சட்டத்தின் பிரகாரம் எதிர்வரும் 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20ஆம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போட அரசாங்கம் பல்வேறு வழிமுறைகளை தற்போது கையாள்கிறது.
எல்லை நிர்ணய குழு அறிக்கையினூடாக உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போட அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. தமக்கு மக்களாணை உண்டு என குறிப்பிடும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உள்ளூராட்சி மன்றத் தேர்தலை உரிய காலத்தில் நடத்த அரசாங்கத்துக்கு அழுத்தம் பிரயோகிக்க வேண்டும். எதிர்வரும் காலங்களில் இடம்பெறும் தேர்தல்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன படுதோல்வி அடையும் என்பதை உறுதியாக குறிப்பிட முடியும். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் பொதுஜன பெரமுன மீதான மக்களின் வெறுப்பை தீவிரப்படுத்தி, அதனூடாக ஐக்கிய தேசிய கட்சியை பலப்படுத்திக்கொள்ள முயற்சிக்கிறார்.
பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவதை விடுத்து அமைச்சரவை அமைச்சுக்களின் எண்ணிக்கையை விஸ்திரப்படுத்த அவதானம் செலுத்தப்பட்டுள்ளமை முற்றிலும் தவறானது. அரச செலவினங்களைக் குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பதை ஜனாதிபதியிடம் வலியுறுத்தினோம் என வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.